பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் எச்.ராஜாவை புறக்கணித்த நாகர்கோவில் பத்திரிகையாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் நன்றியுடன் வணங்குகிறது

0
774

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்து வருவதை நாம் அறிவோம். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் அவரை “Anti Indian” என்று கூறியதையும், பத்திரிகையாளர்கள் அழுகி சாவார்கள் என்றும் அவர் கூறியது பத்திரியாளர்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் அதை கண்டித்ததுடன், எச்.ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடத்தின.

இந்நிலையில், கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு மற்றொருவருடையதென்றும், அதை படிக்காமல் பதிவு செய்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், எஸ்.வி.சேகர் தெரிவித்த இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த பத்திரிகையாளர்கள் பாஜக அலுவலகம் முன்பும், எஸ்.வி.சேகரின் இல்லம் முன்பும் எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்தினர். அவருக்கு எதிராக பத்திரிகையாளர் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தபோதும், அவரை கைது செய்ய தடையில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இருந்தபோதும் இதுவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. இதேபோல், எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களின் பெயரை குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னையில் நடத்தப்பட்ட போராட்டங்களும், அவருக்கு எதிராக காவல்துறை ஆணையரிடம் குவிந்த புகார்களும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் எந்த ஒரு ஊருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றால், அந்த நிகழ்விற்குப் பிறகு அப்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பது வழக்கம். அதை அறிந்து, அந்த நிகழ்வுகளுக்கு பத்திரிகையாளர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று (28.04.18) பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, குமரி மாவட்டத்தில் மார்தாண்டம் அருகே, கருங்கல் என்ற இடத்தில் ஒரு கோவில் விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதற்கிடையில், பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கீழ்த்தரமாக பேசிவருவம் பாஜக தலைவர்களை புறக்கணிக்க வேண்டும் என நாகர்கோவில் பத்திரிகையாளர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து எச்.ராஜா கலந்துகொண்ட அந்த நிகழ்வை பத்திரிகையாளர்கள் அனைவரும், புறக்கணித்து அநீதிக்கு எதிராக தாங்கள் ஓரணியில் நிற்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளனர். பாஜக பலமாக உள்ள நாகர்கோவிலில் இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

தங்கள் சுயமரியாதையை கேள்வி எழுப்பி வரும் எச்.ராஜாவை புறக்கணிக்க முடிவெடுத்த நாகர்கோவில் பத்திரிகையாளர் மன்றத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

மன்றத்தின் முடிவை ஏற்று, எச்.ராஜாவை புறக்கணித்து தங்களின் ஒற்றுமையை நிரூபித்த நாகர்கோவில் பத்திரிகையாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் நன்றியுடன் வணங்குகிறது.

இதேபோல், எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.