பத்திரிகையாளர்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி! மாலை முரசு தொலைகாட்சி நிர்வாகத்தின் மௌனத்தை கலைப்போம்!

0
1262

கடந்த 15.07.2018 அன்று வாடிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மாலை முரசு தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றிய ஷாலினி விபத்து நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்தார். அவரோடு காரில் பயணம் செய்த ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25.07.18 அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்பிற்கும் தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததுடன், இதை சிறப்பு நிகழ்வாக கருதி, உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்து நடைபெற்றவுடன், காயமடைந்த சதீஷ்குமார், ராம்குமார், மணிகண்டன், கோகுல் ஆகியோருக்கு உரிய சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தலைவரை தொடர்பு கொண்டு பேசினர். அத்துடன், சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். சதீஷ்குமார், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, அதற்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உறுதியளித்தார். அதன்படி, அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அதை தெரியப்படுத்தினார்.

விபத்து நடைபெற்றது தொடங்கி தற்போது வரை, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்ட உதவியை அவர்கள் எந்த காலத்திலும் மறக்கமாட்டார்கள். இந்த நேரத்தில், பத்திரிகையாளர்களுக்கு உதவிய தமிழக அரசுக்கு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
அரசு இவ்வளவு முனைப்பாக செயல்பட்டு உதவிகள் வழங்கிய நிலையில், மாலை முரசு நிர்வாகத்தின் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் வழங்கப்படாதது பத்திரிகைதுறையில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடைபெறுவதுற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், வேறு ஒரு நிறுவனத்திற்கு நேர்காணல் சென்றதை சுட்டிக்காட்டி, ஷாலினி மற்றும் அவருடன் சேர்த்து மேலும் இரண்டு செய்தியாளர்களை மாலை முரசு நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில், மற்றொரு நிறுவனத்திற்கு பணிமாறுதல் செய்வது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும். இந்த ஜனநாயக உரிமையை கொடுக்க மறுப்பது, அவர்களை கொத்தடிமைகளாக கருதுவதற்கு சமமாகும்.

மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு, பணி ஆணையோ (Appointment Letter) அடையாள அட்டையோ வழங்கப்படுவதில்லை என்று அங்கு பணியாற்றுபவர்கள் கூறுகின்றனர். அத்துடன், அங்கு பணியாற்றுபவர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி (Provident fund) மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக்கான (ESI) தவணைகள் செலுத்தப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

ஆகவே, உயிரிழந்த செய்தியாளர் ஷாலினி மற்றும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் குடும்பத்திற்கு மாலை முரசு நிர்வாகத்தின் சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாலை முரசு தொலைகாட்சியின் செய்தியாளர் ராம்குமார் ஒளிப்பதிவாளர்கள் மணிகண்டன், கோகுல் ஆகியோருக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றி மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றும் அனைவரையும் உடனடியாக தொழிலாளர் வைப்பு நிதி (Provident fund) மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதியில் (ESI) இணைத்து, நிர்வாகம் அதற்கான தவணைகளை முறையாக செலுத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பணியில் சேர்பவர்களுக்கு பணி ஆணையும், பணியிலிருந்து விலக நினைப்பவர்களின் ஜனநாயக உரிமையை கருத்தில்கொண்டு அவர்களுக்கு அனுபவ சான்றிதழும் மாலை முரசு தொலைகாட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

இந்த கொடூர விபத்திற்குப் பிறகு, பத்திரிகையாளர்களின் நலனைக் கருதி, கருணை உள்ளத்தோடு அவர்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக அரசு, மாலை முரசு தொலைகாட்சி நிர்வாகம், தொழிலாளர் நலச் சட்டங்களை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

மிகக் கடுமையான, ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு சமூக பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். தொழிலாளர் நலச் சட்டங்கள் இதை வலியுறுத்தினாலும், சில நிறுவனங்கள் அதை முழுமையாக பின்பற்றுவதில்லை. ஆகவே, அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து பத்திரிகையாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.