பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்பு.

0
551

தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (25.06.18) நடைபெற்றது. விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பத்திரிகை துறைக்கு ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். பத்திரிகையாளர் குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்து உதவித் தொகை, பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி நிதி ஆகியவற்றை உயர்த்த வேண்டும், இவற்றை பெறுவதற்கான நடைமுறையை எளிமை படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தையும் செய்தி மற்றம் விளம்பரத்துறையின் மூலம் ஒற்றை சாளர முறையில் நடைமுறை படுத்த வேண்டும். பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் பத்திரிகையாளர்களால் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் இவற்றில் சில கோரிக்கைகளையாவது ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று அனைத்து பத்திரிகையாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில். பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது தொடர்பான அறிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் குடும்ப நல நிதி வழங்கப்படுகிறது. தற்போது உள்ள விதிமுறைகளின் படி, 5 ஆண்டு பணி செய்தவர்களின் குடும்பத்திற்க 50 ஆயிரம் ரூபாயும், 10 ஆண்டு பணி செய்தவர்களுக்கு 1லட்சம் ரூபாயும், 15 ஆண்டு பணிசெய்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

 

  • பணி செய்த நாட்களை கருத்தில்கொள்ளாமல், பணியின்போது உயிரிழக்கும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்.
  • பணி செய்த நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் அத்தாட்சி சான்று பெற வேண்டும் என வற்புறுத்தாமல், கடைசியாக பணி புரிந்த நிறுவத்திடமிருந்து அத்தாட்சி சான்று மற்றும் இறப்பு சான்றை பெற்று இந்த நிதி உதவியை வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தால் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 75,000, பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ 1.5, பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ.2,25,000, இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 57 குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதிலும், காட்சி ஊடகத்தை சேர்ந்த ஒரே ஒருவரின் குடும்பத்திற்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த, சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் மோகனின் குடும்பத்திற்கு இதுவரை குடும்ப நல நிதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மறைந்த பத்திரிகையாளர் மோகனின் மனைவி, முதலமைச்சரை நேரடியாக சந்தித்து மனு அளித்துள்ளார். இருந்தபோதும் தற்போது வரை நிதி வழங்கப்படவில்லை.

ஆகவே இந்த அறிவிப்பும் பத்திரிகையாளர்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகின்றது.

பத்திரியைளர்களை இனியும் ஏமாற்றாமல், உழைக்கும் பத்திரிகையாளர்களின் நலனை கருதி, பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்படும் கீழ் காணும் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் இந்த கூட்டத் தொடரிலேயே, அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

 

பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள்:

1) கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் 182 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமும், 38 பேருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. 1990 களுக்குப் பிறகு ஊடகத்தின் பெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. அத்துடன், காட்சி ஊடகத்தை சேர்ந்த ஒரு பத்திரிகையாளருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஓய்வூதியம் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளே இதற்கு காரணம். ஆகவே, ஓய்வூதியம் பெறுவதற்கான தற்போதைய விதிமுறைகளில் கீழ் காணும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

  • 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்க மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற விதிமுறையை 15 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
  • பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களிலிருந்தும் அத்தாட்சி சான்றிதழ் பெற முடியாதபட்சத்தில், அந்த நிறுவனங்களில் பணிபுரிந்ததற்கான ஏதேனும் ஒரு அத்தாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குடும்ப வருமானம் என்பதிலிருந்து தனிநபர் வருமானமாக மாற்றப்பட வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுவதற்கான தனிநபர் ஆண்டு வருமானம் 2.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
  • தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

2) பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் குடும்ப நல நிதி வழங்கப்படுகிறது. தற்போது உள்ள விதிமுறைகளின் படி, 5 ஆண்டு பணி செய்தவர்களின் குடும்பத்திற்க 50 ஆயிரம் ரூபாயும், 10 ஆண்டு பணி செய்தவர்களுக்கு 1லட்சம் ரூபாயும், 15 ஆண்டு பணிசெய்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.  கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 57 குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதிலும், காட்சி ஊடகத்தை சேர்ந்த ஒரே ஒருவரின் குடும்பத்திற்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே,

  • பணி செய்த நாட்களை கருத்தில்கொள்ளாமல், பணியின்போது உயிரிழக்கும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்.
  • பணி செய்த நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் அத்தாட்சி சான்று பெற வேண்டும் என வற்புறுத்தாமல், கடைசியாக பணி புரிந்த நிறுவத்திடமிருந்து அத்தாட்சி சான்று மற்றும் இறப்பு சான்றை பெற்று இந்த நிதி உதவியை வழங்க வேண்டும்.
  • கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த, சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் மோகனின் குடும்பத்திற்கு இதுவரை குடும்ப நல நிதி வழங்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறோம். இதுகுறித்து மறைந்த பத்திரிகையாளர் மோகனின் மனைவி, முதலமைச்சரை நேரடியாக சந்தித்து மனு அளித்துள்ளார். இருந்தபோதும் இந்த நிதி தற்போது வரை வழங்கப்படவில்லை.

3) ரூ. 1 கோடி TUFIDCO நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக்கொண்டு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ செலவிற்கான நிதி வழங்கப்பட்டு வருகின்றது. அரசு இணையதளத்தில் உள்ள பட்டியலின் படி கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை வெறும் 7 பேருக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே,

  • இந்த திட்டத்தின் மூலம் பத்திரிகையாளர்கள் பலன் பெறுவதற்கான விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும்.
  • TUFIDCO நிறுவனத்தில் அரசு செய்துள்ள முதலீட்டை 5 கோடியாக உயர்த்த வேண்டும்.
  • மருத்துவ உதவி தேவைப்படும் பத்திரிகையாளர்களுக்கு, அதிகபட்ச தொகை என்பதை நிர்ணயிக்காமல், அவர்களின் தேவைக்கு ஏற்ப நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.

4) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் வாடகைக்கு வீடு ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டம் வெளிப்படையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பத்திரிகையாளர்கள் குறித்த முழு விபரம் வெளியிடப்படவில்லை. ஆகவே,

  • இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ள பயனாளிகனின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
  • இந்த வீடுகளை வாடகைக்கு பெறுவதற்கான விண்ணப்பங்கள் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
  • பொருளாதார ரீதியில் பின்தங்கிய, சொந்த வீடு இல்லாத பத்திரிகையாளர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வாடகைக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • மறைந்த பத்திரிகையாளர் மோகனின் குடும்பத்திற்கு அவரின் மனைவி முதலமைச்சருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவின் அடிப்படையில், உடனடியாக வாடகை வீடு ஒதுக்கித் தர வேண்டும்.

5) பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கடைசியாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவான்மியூர் அருகே பத்திரிகையாளர்கள் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு எந்த குடியிருப்பும் உருவாக்கப்படவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் போதிய இட வசதி இல்லாததால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே,

  • பத்திரிகையாளர் குடியிருப்பை உருவாக்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் போதிய இட வசதி இல்லாவிட்டால், இருக்கும் இடத்தில் பத்திரிகையாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்.
  • சொந்த வீடு இல்லாத பத்திரிகையாளர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்பட வேண்டும்.

 6) பத்திரிகையளர்களுக்கான இந்த சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறையின் மூலம் ஒற்றை சாரள முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கு, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பாக நியமிக்க வேண்டும்.

7) பத்திரிகையாளர்களின் பணியில் உள்ள ஆபத்தை உணர்ந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் மஹாராஷ்ட்டிர அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதேபோன்றதொரு சட்டம் ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. ஆகவே,

  • தமிழகத்திலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
  • மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் என்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைமையில், பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, இதற்கான வரைவு சட்டத்தை வடிவமைத்து முதலமைச்சரை நேரில் சந்தித்து அதன் நகலை வழங்கியுள்ளனர். ஆகவே, அரசு விரைந்து அந்த சட்டத்தை கொண்ட வர ஆவண செய்ய வேண்டும்.