பத்திரிகையாளர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

0
627

டிசம்பர் 27 2015

பத்திரிகையாளர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

சென்னையில் இன்று (27.12.15) தேமுதிக சார்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் அதன் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியினிடையே செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்திடம், தேர்தல் கூட்டணி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காமல் மிகவும் கோபமாக, “இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்பீர்களா” என்று செய்தியாளர்களிடம் எதிர்கேள்வியை முன்வைத்த விஜயகாந்த், தன்னுடைய நிலையை மறந்து மிகவும் கீழ்த்தரமாக, செய்தியாளர்களை நோக்கி உமிழ்ந்துள்ளார்.

விஜயகாந்த், தன்னுடைய கட்சி நிர்வாகிகளை பொது இடத்தில் வைத்து, அடித்த நிகழ்வுகளை நாம் அறிவோம். அதேபோல், செய்தியாளர்களிடமும், தரக்குறைவாக நடந்துகொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே விஜயகாந்த்தின் நடவடிக்கைகளை கண்டித்து அவரை எச்சரிக்கும் வகையில் பத்திரிகையாளர் அமைப்புகள் பலமுறை கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன், விஜயகாந்த்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். இருந்தபோதும், பத்திரிகையாளர்களை கிள்ளுக் கீரையைப்போல் நடத்தும் கீழ்த்தரமான நடவடிக்கையை விஜயகாந்த இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பது இன்று நடந்த நிகழ்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிப்போம் என்று உறுதிமொழியேற்று, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை மிரட்டி பணிய வைக்கும் நடடிவக்கையை மேற்கொண்டதன் மூலம் அரசியில் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை அவர் மதிக்கத்தவறியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

மூதறிஞர்களும், பேரறிஞர்களும், சிறந்த நாடாளுமன்றவாதிகளும் வலம் வந்த தமிழக அரசியல் அரங்கில், பத்திரிகையாளர்களை கண்ணியத்துடன் நடத்த தெரியாத ஒரு அரசியல்வாதியும் இடம்பெற்றிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்பதை இந்த இடத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் பதிவு செய்கின்றது.

சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜா பத்திரிகையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதை அனைவரும் அறிவோம். தற்போது விஜயகாந்த் அதனிலும் கீழிறங்கி பத்திரிகையாளர்களை மிகத்தறக்குறைவாக நடத்தியுள்ளார். இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான தேவை வலுப்பெற்றுள்ளதை பத்திரிகையாளர்கள் அனைவரும் உணர வேண்டும் எனவும், அந்த சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க, மத்திய மாநில அரசுகளை அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒன்று கூடி வலியுறுத்த வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக நடத்திய விஜயகாந்த் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டக வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

இம்முறை கண்டன அறிக்கைகளுடன் மட்டும் நின்று விடாமல், அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்று கூடி, இனி   எதிர்காலத்தில் எந்த நபரும் பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதற்கு அஞ்சும்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கின்றது.

பத்திரிகையாளர்கள் “ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பீர்களா?” என்ற கருத்து பொதுவாக அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது. ஊராட்சி தலைவர் தொடங்கி குடியரசு தலைவர் வரை, எவராக இருந்தாலும், அவர்களை கேள்விகேட்க பத்திரிகையாளர்கள் எந்த காலத்திலும் அச்சப்பட்டடதில்லை. அப்படி அச்சப்படுபவர்கள் பத்திரிகையாளர்களாக இருக்க முடியாது. அந்தவகையில், தமிழக முதலமைச்சர் எப்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளாரே அப்போதெல்லாம் அவரிடமும் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்துள்ளனர். இனியும், முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அவரிடம் கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் தயங்கமாட்டார்கள் என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தெளிவுபடுத்த விரும்புகின்றது.