CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பணியாளர்களிடம் சம்பளப் பிடித்தம்; கேப்டன் தொலைக்காட்சிக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம்!

சில அரசுத் துறைகள் தவிர அனைத்துத் துறைகளுக்கும் இம்மாதம் 14 ஆம் தேதி வரை அலுவலகங்கள் இயங்காது. கொரோனா பரவுதல் மூலம் பெரும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அரசு இவ்வாறான ஊரடங்கை அறிவித்துள்ளது. ஊதியத்துடன் கூடிய விடுப்பாகவும் இதனை அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறைகளையே தனியார் நிறுவனங்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்றோருக்கு தேவையை நிறைக்காது என்றபோதும் சிறிய தொகையை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுபோல அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுமென்றும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் விரிவாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

ஆனால், கொரோனாவால் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் இந்த சூழலிலும், பணிக்கு வராத தொழிலாளர்களிடம் சம்பளத்தை பிடித்தம் செய்வது மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலாகும். உலகமே உயிருக்கு பயந்து வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கொரோனா பரவும் எனும் சூழலையும் பொருட்படுத்தாமல் அலைந்து, திரிந்து பணியாற்றி வரும் செய்தியாளர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்புக்கான தரம் வாய்ந்த முகக்கவசம், கையுறை, உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை சில ஊடக நிறுவனங்கள் செய்திருந்தாலும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களும் செய்ய வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் இரு வாரங்களுக்கு முன்பே அனைத்து நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. தமது பணியாளர்களின் உயிர் பாதுகாப்புக் கருதி சில நிறுவனங்கள் வேலையில் இருப்போரை பாதியாக குறைத்து, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் அளித்துள்ளது. வேலையில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு உணவையும், சென்னையில் அவர்கள் எங்கிருந்தாலும் வீட்டிற்கே சென்று அழைத்துவர வாகன வசதியையும் செய்து கொடுத்துள்ளது. இவை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

ஆனால், அதேவேளையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இரு வாரங்களை கடந்த பின்னும் சில ஊடக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளையோ செய்து கொடுக்காமல் விடுப்பே இல்லாமல் பணிக்கு வர கட்டாயப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கேப்டன் தொலைக்காட்சி நிர்வாகம் இந்த பேரிடர் காலத்திலும் தன் ஊழியர்களிடம் விடுப்பு எடுத்ததற்காக சம்பளத்தை பிடிப்பதுடன், உணவு வசதி ஏற்படுத்திக் கொடுக்க அவர்களிடமே பணம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மிக மிகக் கண்டிக்கத்தக்கது.

உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் ஊழியர்களிடம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற, அறம் பிறழ்ந்த செயலை அந்நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இன்றே ஏற்படுத்தித் தரவேண்டுமென்றும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக அவர்களுக்கு திருப்பித்தரவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

ஜெயா டிவி ஒளிபரப்பிற்கு தடை விதித்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

பத்திரிகையாளரை தாக்க முற்பட்ட, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

CMPC EDITOR

இஸ்ரேலின் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், அரசில்சாசன உரிமையையும் உறுதி செய்ய, யார் வேவு பார்த்தது என்ற உண்மை வெளிப்பட வேண்டும்.

CMPC EDITOR