வேந்தர் தொலைகாட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 14 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு.
மூன்று ஆண்டுகள் வழங்க வேண்டிய சம்பளத்தையும் மொத்தமாக வழங்கவும் உத்தரவு.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு மாபெரும் வெற்றி.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வேந்தர் தொலைகாட்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய சில தொழிலாளர்களை, திடீரென்று பணியை விட்டு விலகும்படி நிர்வாகம் கூறியது. தொழிலாளர்கள் தாங்களாக ராஜினாமா செய்யாவிட்டால், அந்த மாதத்தின் சம்பளம் கூட கிடைக்காது என்று நிர்வாகம் மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு பயந்து, நிர்வாகம் தயார் செய்து வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட தொழிலாளர்கள், டிசம்பர் மாத ஊதியத்திற்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தை நாடினர். உடனே தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் களம் இறங்கியது. முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிப்பதற்கான ஏற்பாட்டை சங்கம் செய்தது. தொழிலாளர் நல ஆணையர் நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்தையில் கூட நிர்வாகம் முறையாக கலந்துகொள்ளவில்லை. இதனால் சமரச பேச்சுவார்த்தை முறியவடைந்ததால், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி தொழிலாளர்கள் அனைவரும் தொழிலாளர் நீதிமன்றத்தில் பணிநீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின்படி வழக்கறிஞர்கள் திரு.ரவி, திரு.இளங்கோ, திருமிகு.மீனா தொழிலாளர் சார்பாக வாதாடினர்.
வழக்கு விசாரணையின்போது, நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் விருப்பப்பட்டே ராஜினாமா செய்ததாகவும், அவர்கள் வற்புறுத்தப்படவில்லை என்றும், வேறு நிறுவனத்தில் சேர்வதற்கு முயன்று அது முடியாமல் போனதால் அவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும் அப்பட்டமான பொய்யை கூறினர்.
நமது சங்கத்தின் வழக்கறிஞர்கள், 2019 டிசம்பர் 16 ஆம் தேதியிட்ட, அச்சிடப்பட்ட ராஜினாமா கடிதத்தில், தொழிலாளர்கள் அனைவரும் வெவ்வேறு தேதிகளில் பேனாவில் கையெழுத்திட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். இதன்மூலம், நிர்வாகம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் வெவ்வேறு நாட்களில் தொழிலாளர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியது தெரியவருவதாக வாதத்தை முன்வைத்தனர். அத்துடன் நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட மேலும் பல பொய்களையும் தங்கள் வாத திறமையால் தவிடுபொடியாக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 3வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி டி.சுஜாதா அவர்கள் 18.04.23 அன்று மிகச் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பின் படி, பணிநீக்கம் செய்யப்பட்ட 14 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடம் 2020 ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, தீர்ப்பு வெளியான நாள் வரையிலான சுமார் 3 ஆண்டு காலத்திற்கான சம்பளத்தை மொத்தமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சம்பளத்தை 4 மாதத்திற்குள் வழங்காவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் 6% வட்டியோடு அதை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி டி.சுஜாதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து ராஜினாமா செய்துவிட்டாலும் கூட, அதை சட்டப்படி சரியாக எதிர்கொண்டால் வெற்றிபெறலாம் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின்பேரில், கொரோனா பெருந்தொற்று காலம் உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உறுதியோடு போராடி வெற்றி பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு சங்கம் சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொழிலாளர்கள் சார்பாக வாதாடி வெற்றியை பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் திரு.ரவி, திரு.இளங்கோ, திருமிகு.மீனா அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டத்தின்பால் நின்று நீதி வழங்கிய மாண்புமிகு நீதிபதி டி.சுஜாதா அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த தருணத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை, திருத்தங்கள் மூலமும் பல்வேறு மாற்றங்களின் மூலமும் நீர்த்துப்போகச் செய்து கொண்டிருப்பதை பத்திரிகையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வர மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடமைப்பட்டுள்ளது.
இந்த சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால்தான் இதுபோன்ற வெற்றியை நாம் பெற முடிகிறது என்ற வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் பத்திரிகையாளர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தொழிலாளர் உரிமைகளையும் அதை உறுதி செய்யும் தொழிலாளர் சட்டங்களையும் பாதுகாக்க, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தை பலப்படுத்த வேண்டும் என்று, பத்தரிகையாளர்கள் அனைவருக்கும் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.