CMPC
POLITICS / அரசியல்

பகத்சிங்: மாற்றத்திற்கான விதை!

1929 ஏப்ரல் 28
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நாடாளுமன்றம் வழக்கம் போல இந்திய மக்களுக்கு எதிராக இயங்கிகொண்டு இருக்க திடீரென அண்டமே அதிரும் வண்ணம் ஒரு பேரிரைச்சல்….சில நொடிகளிலேயே குண்டு வெடித்ததை உணர்ந்தவர்கள் சிதறி ஓடினர்…எங்கும் புகை….’இன்குலாப் ஜிந்தாபாத் ‘ என்றபடியே அந்த வெண்,கரும் புகைகளை எரிமலையாய் விலக்கியபடியே வந்தது ஒரு வீர உருவம்….முறுக்கு மீசை கொண்ட அந்த மாவீரன் இந்திய ஆன்மாவின் அடையாளம் – “பகத்சிங்”
1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டத்தில் ஜெனரல் டயரின் படைப்பிரிவு கூட்டத்தைக் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. இந்திய உழைக்கும் மக்களின் உதிரம் சிந்திய அந்த மண் சிவந்த மண்ணாக காட்சி தர ,அங்கே ஒரு (11 வயதுடைய) சிறுவன் மட்டும் சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் செய்தான். அச்சிறுவன் வேறுயாருமல்ல 1907 செப் 28 ம் தேதி காலை 8.45 மணிக்கு பஞ்சாப் பாங்கா கிராமத்தில் சர்தார்கிசன் சிங்-வித்யாவதிக்கு மகனாக பிறந்த ‘பகத்சிங்’ தான்.
ருசிய பாவலின் ‘தாயை’ போன்றே போராட்ட உணர்வு கொண்டவர் பகத்சிங்கின் தாய். ஒருமுறை
பகத்சிங்கும், பி.கே தத்தும் சிறையில் உண்ணாவிரதம் இருந்த போது உடல் மெலிந்து நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டனர்…அதை கண்ட தாய் வேதனைப்பட்டு கலங்கி நிற்க ‘எங்களுடனே நீங்களும் வந்துவிடுங்கள் அம்மா’ என்றார் பகத்சிங்… அதற்க்கு அத் தாயோ
‘எப்படி வருவது? மகனே! எனக்கு தான் உங்களை போலெல்லாம் உரையாற்ற தெரியாதே!’ என்றவர் ‘பேசாமல் வெள்ளைக்காரர்களை தடியால் அடித்துவிட்டு கைதாகி வரவா?’ என்றார்…கள்ளமில்லா தாய்மையோடு.
சிறுவயதில் இருந்தே
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதே தமது லட்சியமாக கொண்டவர் தனக்கான வழியாக தேர்ந்தெடுத்தது பொதுவுடைமை கொள்கையை….
வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து தேச விடுதலை
முதலாளித்துவத்திடம் இருந்து வர்க்க விடுதலை
இவைதான் பகத்சிங் மற்றும் தோழர்கள் தலையாய பணியாக செயல்பட்டனர்.ஏழை பணக்காரன் என்ற பேதமே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாள் லட்சியம்…அதற்க்கு முன் தடையாக இருக்கும் வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது இப்போதைய கடமை என புரட்சிகர பணி செய்த மாவீரர்கள் இவர்கள்…

தோழர் பகத்திற்கு ,
ராஜகுரு,சுகதேவ் ஆகியோருடனான நட்பு ,குட்டி சுவரில் உட்கார்ந்து ஊர் கதை பேசும் வெட்டித்தனமானதோ, குடும்ப பிரச்சனைகளை ஒருவருக்கு ஒருவர் புலம்பிக்கொள்ளும் நடுத்தர வர்கத்தின் நட்போ அல்ல…. சுயநலம் இல்லாத பொதுநலத்தில் உண்டான ஆழமான நட்பு…எனவே தான் அது தோழமை எனும் பண்பாக வளர்ந்தது….
இவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக
இருந்தவர்கள்.
‘தோல்விக்கு முன்பே பின்வாங்குவது நம் பாதையில் தடைகளை ஏற்படுத்தும் தடைகளை அகற்றுவதற்கு பதிலாக நாமே தடைகளாகிடுவோம் ‘ என்பார் பகத்….அதேசமயம்
தோழர்கள் என்றால் எந்நேரமும் புரட்சி போராட்டம் என்று மட்டுமே இருப்பவர்கள் அல்ல அவர்களுக்குள்ளும் வேடிக்கைகளும்,விளையாட்டுகளும் உண்டு .இந்த சந்தோசங்கள் அனைத்து பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றுதானே அவர்கள் புரட்சிகர வாழ்விற்கே வந்தார்கள்…
இப்படிதான் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நகைச்சுவை அரங்கேறியது…
ஒருமுறை ஆக்ராவில் இருந்த போது தாஜ்மகாலை பார்த்தனர்…தோழர் ராஜகுரு லயித்து போய் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து ‘இப்போதுவரை காதல் என்றால் என்னவென்று அறியாதிருந்தேன் தாஜ்மகாலை பார்த்ததும் என்னுள் காதல் கலகம் செய்தது’ என எழுதி ‘ஹய்யா நான் கவிதை எழுதிவிட்டேன்’ என துள்ளி குதித்தார்…காதல் கலகம் என்ற வார்த்தையில் அனைவரும் சிரிக்க பகத்சிங்கோ அமைதியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜகுருவிடம் நீட்டி ‘ஒன்னு என்னை சுட்டுவிடு இல்லையேல் இனி கவிதை எழுதமாட்டேன் என சத்தியம் செய்து கொடு.தாங்க முடியல…..’ என்றார் நம்ம வடிவேலு போல…
இப்படி தோழர்கள் வாழ்வில் பயணித்த நகைச்சுவைகள், மகிழ்ச்சிகள் சிறையிலும் தொடர்ந்தது…
அந்நியர்களின் கூடாரத்தில் வெடிகுண்டை வீசினாலும் அவர் ஆயுதங்களை மட்டுமே நம்பிய புரட்சியாளர் அல்ல…
‘புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துகொள்வதற்க்கும் அதில் இடமில்லை அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல ‘புரட்சி’ என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையாக கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்’ என்றவர் தோழர் பகத்சிங்.
சிறையில் இருந்த கடைசிகாலம் வரை அவர் அதற்காக கண்கலங்கியதே இல்லை…எந்நேரமும் புத்தகமும் வாசிப்புமாக இருந்தார்…வாசித்ததை தோழர்களுடன் கலந்துரையாடுவார்…தூக்கிலடப்படும் சில நிமிடங்களுக்கு முன் அவர் வாசித்துக்கொண்டு இருந்த நூல் ‘லெனின் அரசும் புரட்சியும்’….தூக்கிலிட அழைத்தபோது
‘இருங்கள் ஒரு புரட்சியாளன் மற்றொரு புரட்சியாளனுடன் உரையாடிக்கொண்டு இருக்கிறான்’ என கம்பீரமாக முழங்கியவர் பகத்சிங்..

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிவயிறு கலங்கும் வகையில் ஆளுமைமிக்க வீரனான பகத்சிங் இறுதி ஆசையாக கேட்டது என்ன தெரியுமா?
தான் இருந்த சிறை கழிவறையை சுத்தம் செய்யும் ‘போகா’ என்ற பெண்மணியின் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும் என்றுதான்…போகாவை பி.பி என்றுதான் கூப்பிடுவார் பி.பி என்றால் வளர்ப்பு தாய் என்றும் சொல்லலாம்….
‘இந்த சாதாரண ஏழையின் கையால் சாப்பிட ஆசையா!’ என நெஞ்சுருகி போன அந்த ஏழை தாய் ‘மாலையில் வேலைக்கு வரும் போது என் கையால் சமைத்து கொண்டு வருகிறேன் மகனே’ என்றபடி வீட்டிற்கு சென்று மாலை உணவோடு திரும்புகிறார்…
ஆனால் பாசமும், நேசமும் கலந்த ஏழை தாயின் உணவை உண்ணவில்லை அந்த வீரன்…
ஆம் அதற்க்கு முன்பே அந்த மாவீரன் தூக்கிலடப்பட்டான்….தனது சகாக்களுடன்….
ஒரு மாவீரனை கொன்று முதல் முறையாக வரலாற்றில் தூக்கு கயிறு பெருமிதம் கொண்டது…
…..’நாங்கள் தப்பியோட மாட்டோம் எங்கள் உணர்வுகளை தெரியப்படுத்தவே குண்டு வீசினோம்’ என்றபடியே
கையில் வைத்திருந்த துண்டறிக்கைகளை வீசினார்…
‘செவிடர்களை கேட்கச் செய்ய வேண்டுமென்றால் உரத்த சத்தம் அவசியமாகிறது’ என்ற வரிகள் கொண்ட அறிக்கையாக இருந்தது…அது வரிகள் அல்ல ஒரு புரட்சிகர கவிதையின் வீரியம்….
கேளாத செவிகளை கேட்க செய்த மாவீரன் தோழன் பகத்சிங் மற்றும் தோழர் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை வெள்ளை ஏகாதிபத்தியம் தூக்கிலிட்ட நாள் மார்ச் 23 1931….

‘விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்க்கை வளங்களும் சுரண்டப்பட்டுகொண்டிருக்கும் வரை இந்த போர் தொடரும்; தொடர வேண்டும் அவ்வொட்டுன்னிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஸ் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகவும் இருக்கலாம் அவர்களின் நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஸ் அல்லது கலப்பு அரசு இயந்தரத்தை கொண்டோ நடத்தி வரலாம் இந்த போர் தொடர்ந்தே தீரும் அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிச குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுகொண்டே இருக்கும் இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை வரலாற்று நிகழ்வுபோக்குகளினதும், தவிர்க்க முடியாத விளைவே இந்த போர்…இது தொடரும் தொடர வேண்டும்’ என்றார் பகத்…..
ஆம் இந்திய மண்ணில் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி சுரண்டி செல்லும் கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராக வேண்டும் ஓர் புதிய போர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் 36.5 லட்சம் கோடி….. சலுகை அளித்திருக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு குடை பிடிக்கும் அரசுக்கு எதிராக வேண்டும் புதிய ஜனநாயகத்திற்கான போர்.

இந்திய பெருமுதலாளிகள், சுமார் 85 லட்சத்து,88 ஆயிரத்து ,300 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாடுகளில் கருப்பு பணமாக பதுக்கிவைக்கப்பட்டு இருக்க அதை மீட்டு வருவதாக விளம்பரப்படுத்திய அரசோ நாடு நாடாக சுற்றிக்கொண்டு இருப்பதோடு சரி.
‘நாளை காலை முழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன் ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்க செய்யும் மீண்டும் பிறப்போம் எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்….’ என்று முழங்கிவிட்டு தூக்குகயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள்.
ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட கிடைக்கும் அம்பது கோடி மக்கள்,
சொந்த வீடு இல்லாமல் இருக்கும் சுமார் அறுவது கோடி மக்கள்,
மூன்று நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகுதல், நாட்டை அச்சுறுத்தி வரும் சாதி ஆணவ கொலைகள் என இருள் சூழப்பட்ட இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரும் நம்பிக்கை தீ ‘பகத்சிங்’ . மலடாக்கப்பட்ட இளம் இந்திய இதயங்களில் சமத்துவம் எனும் மாற்றத்தை தொடங்கி வைக்கும் விதை ‘பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ்’.

Related posts

பரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே சாதி ஓழிப்பை சாத்தியப்படுத்தும்

CMPC EDITOR

நடப்பதெல்லாம் சசிகலா நன்மைக்கே

CMPC EDITOR

மறுக்கப்படும் அன்னையர்கள்

CMPC EDITOR