CMPC
POLITICS / அரசியல்

நெடுவாசல் – ”யாருக்கு லாபமோ அவர்களை எதிர்ப்போம்”

இயற்கை வளங்களை மனிதன் எப்போது பயன்படுத்த தொடங்கினானோ அப்போதிலிருந்தே அவனது வாழ்க்கையும் மேன்மையுறத் துவங்கியது. ஆனால் மனிதன் நிலைபெற்று வாழத்துவங்கி பல நூற்றாண்டுகள் கடந்த பிறகு,  இயற்கை வளங்களை எடுப்பது என்பது சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. பெரும்பாலும் இயற்கை வளங்களை எடுக்கும் போது  அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு எப்போதும் இடையூறாகவே இருந்திருக்கிறது. பெரும்புலப்பெயர்வும், வாழ்வாதாரத்தை தொலைக்கும் நிலையும் கூட இதனால் ஏற்படலாம். இந்தியாவின் ஜார்கண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களின் உருவாக்கம் அல்லது வளர்ச்சிக்கு,  இதுவும் ஒரு காரணமாக உள்ளது.  இயற்கை வளங்களை சுரண்டுவதும் அதில் மக்கள் பாதிக்கப்படுவதும் பெரும்  பிரச்சனையாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது.

தமிழகத்தில் கல்வராயன் மலை, சேர்வராயன் மலைகளில் இரும்புதாது வெட்டியெடுக்கும் பிரச்சனைகள் முதல் மீத்தேன் திட்டம் வரை மக்களின் எதிர்ப்பில் வந்த, நின்று போன திட்டங்கள் ஏராளம்.  குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட மீத்தேன் திட்டம் மக்களிடம் கடும் எதிர்ப்புகளை கிளப்பியிருந்தது. திரும்பிய திசையெங்கும் மீத்தேன் திட்டத்தால் வரும் பாதிப்புகள் குறித்த பிரச்சாரங்களாய் இருந்தது. இடதுசாரிக்கட்சிகள் தொடங்கி தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வரை அரசியல் கட்சிகளும் எதிர்த்த திட்டமாக இது இருந்தது.

இளைஞர்கள் மத்தியிலும் இந்த திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நன்கு படித்த, உயர் பதவிகளில் உள்ள, வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் இணைந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பாக களப்பணியாற்றினர்.   துண்டு பிரசுரங்கள் தொடங்கி தொலைக்காட்சிகளில் ஆவணப்படங்களாகவும் மீத்தேன் திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பல முக்கிய திரை நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இடம்பெற்றிருந்தது.  அதன் விளைவாக மத்திய அரசு அந்த திட்டத்தை திரும்பபெற்றுக்கொண்டது.

மீத்தேன் திட்டம் திரும்பபெறப்பட்டிருந்தாலும் அந்த அச்சம் அப்பகுதி மக்களிடையே இன்னமும் நீடித்துக்கொண்டுதான் உள்ளது. இயற்கை வளம் சார்ந்து வரும் அறிவிப்புகளை மக்கள் தொடர்ந்து உற்று நோக்குவதும், அதுகுறித்த சந்தேகங்களை எழுப்புவதுமே அதை உறுதிசெய்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு இயற்கை வளப்பிரச்சனை என்பது நிச்சயம்  மக்களின் எதிர்ப்புக்குள்ளாகும்.

இப்படிப்பட்ட சூழலில் தான் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள  31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் அறிவித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளைத் தடுத்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தால் தங்கள் கிராமம் பாலைவனமாக மாறப்போகிறது என்ற தகவல் பரவியதால் தொடர்ந்து மக்கள் போராடிவருகின்றனர்.  தினம் தினம் ஒரு போராட்டம் செய்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்த  அதிகாரிகளை , நெடுவாசல் பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டதோடு, ஆய்வு செய்ய விடாமல் தடுத்து அவர்களைத் திருப்பி அனுப்பினர்.

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருந்த மீத்தேன் எரிவாயு திட்டம், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது அதே போன்றதொரு திட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை பற்றி எந்தவித விளக்கமும் தராமல், தங்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

செலவு அதிகம் என்ற காரணத்திற்காக தனியாருக்கு தரப்படுகிறது இந்த திட்டம். அப்படியானால் அரசை விட தனியார்கள் தான் வலிமையானவர்களா ?.. இல்லை  லாபநோக்கமெல்லாம் இல்லாமல் மக்களுக்காக செய்ய அவ்வளவு நல்லவர்களா?.. பிரச்சனையில்லை என்றுதான் போபாலில் ”அந்த” ஆலைக்கு அனுமதி கொடுத்தீர்கள். என்ன ஆனது எங்களுக்கு மறந்துவிட்டதா என்ன ?… இதை எடுக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அதர பழசா? பாதிப்பில்லாமல் எடுக்க, புதிய தொழில் நுட்பம் காண என்ன முயற்சி எடுக்கப்பட்டது ?  இங்கு எரிபொருள் எடுக்கப்பட்டால் எரிபொருள் தேசங்களை போல் அரசால் உரிய விலைக்கு விற்கபடுமா? இதுவும் “ சிலர்” கோடிகளை குவித்துக்கொள்ள கொடுக்கப்பட்ட அனுமதியா ? மாற்று எரிபொருளே இல்லையா? அதை கண்டுபிடிக்க, உருவாக்க, பயன்படுத்த, ”இவர்களுக்கு” மனம்தான் இல்லையா?

என்பது போன்ற நியாயமான கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை…

ஏன் மக்கள் இல்லாத பாலைவனத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கலாமே?… என்ற கேள்விக்கு பின் இருந்தால் எடுக்கிறோம் என்ற பதில் போதுமானதாகிவிடும். எளிதாக பதில் கிடைத்துவிடும் பலகேள்விகளை நாம் எழுப்பினாலும் எந்த அதிர்வும் இருக்காது மாறாக வலிமையான, இதனால் பலனடையப்போகும் ஓரிருவர் குறித்த கேள்வி என்பதுதான் ஓரளவுக்காவது அதிகாரவர்க்கத்தை  களங்கடிக்கச்செய்யும்.

ஹைட்ரோ கார்பன் எடுத்தால் விவசாயமே செய்யமுடியாது… பாலைவனமாகிவிடும்,  அரேபியா  அப்படித்தான் பாலைவனமாச்சு என்று, உண்மையை பொய்கலந்தும், பொய்யை உண்மை கலந்தும் பரப்பிக்கொண்டேயிருக்கிறோம்… எதுவுமே சொல்லாமல் இது போன்ற திட்டங்களை திணிப்பவர்களுக்கு மத்தியில் இவர்கள் தேவலாம் என்று மனம் தேங்கினாலும், தீர்வை தேடும் மனமோ ஓடித்தான் ஆக வேண்டும்.

இத்திட்டம் வராமல் இருந்தால் நெடுவாசல் மக்களுக்கு இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.

இத்திட்டம் “ இவர்களால்” வந்தாலும், நின்றாலும் இந்திய மக்களுக்கு எந்த பலனுமில்லை.

( இந்த கட்டுரை எதையும் தீர்மானிக்க அல்ல… எதையாவது சிந்திக்க வைக்க… )

Related posts

“வைகோவின் அந்த பேச்சு “

admin

கடன்கார நாடும்… கைவிரிக்கும் கார்ப்பரேட்களும்…

CMPC EDITOR

வரலாறு- மனித வளர்ச்சியின் குறிப்பேடு…

CMPC EDITOR