இன்னும் சில மையில் தூரம் தான்
நாம் நடந்துவிடலாம்…
சைக்கிளில் மிதித்து கடந்து விடலாம்…
கதை பேசியபடியே காலார எட்டிவிடலாம்…
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
அந்த மரத்தின் மடியில் அமர்ந்து கிளம்பிவிடலாம்…
இரவு நேரங்களில் நட்சத்திரத்தின் பாடல்
நம்மை வழிநடத்த காத்திருக்கிறது
தயக்கம் வேண்டாம் வேகமாக நடக்கலாம்…
இன்னும் சில மையில் தூரத்திற்காக
வாழ்க்கையை நொந்து கொள்ளக்கூடாது.
நம்மிடம் அவர்கள் பேட்டி எடுப்பார்கள்
நமக்காக அதிபர் மாளிகையில்
வாழ்த்துப்பாடல் கேட்கும்…
வேகவேகமாக நடந்துவிடலாம் வா…
வாழ்க்கையைக் கடக்க காரணங்களைப் போல்
தூரத்தைக் கடக்க நம்மில் எத்தனை ஆறுதல்கள்…
சில மையில் தூரத்திற்காகத்தான்
நம் முன்னோர்கள்
ரத்தம் வடிந்த கால்களோடு நடந்தார்கள்.
இன்று நாமும் நடந்து கொண்டிருக்கிறோம்.
இந்த முறை நின்றுவிடலாம்…
நம்மை சுற்றி எல்லாமும் நின்றுவிட்டன…
காற்று மட்டுமே வீசிக்கொண்டிருக்கிறது.
மெல்லிய காற்றில் கசங்கிய புழுதியாய்
நீயும் நானும் சாலையில் கிடக்கிறோம்…
கடைசியாக ஒரே ஒருமுறை நின்றுவிடலாம்…
நாடாளுமன்றத்தின் சொகுசு அறையினுள்
கட்டிமுடித்தும் குடியேறாத முதலாளியின் வீட்டுனுள்
நம் உழைப்பை உறிஞ்சி
பணமாய், தங்கமாய் மின்னும்
கிடங்கினுள்…. வங்கியினுள்…
கடைசியாக போய் நின்றுவிடலாம்…
எந்த கதவுகள் நம்மைத் தடுக்கிறதோ சிதைக்கலாம்…
எந்த துப்பாக்கிகள் நம்மை சுடுகிறதோ எதிர்க்கலாம்…
எந்த லத்தி நம்மை அடிக்கிறதோ மிதிக்கலாம்…
கடைசியாக கைகளை உயர்த்தி
முதலாளி என்னும் மலையை உடைக்கலாம்…
அதன் பிறகு எல்லோரும் சேர்ந்து நடக்கலாம்…
அந்த புதிய தேசத்தை நோக்கி…
அந்த புதிய வாழ்க்கையை நோக்கி…
அந்த புதிய உலகை நோக்கி….