CMPC
STATEMENTS / அறிக்கைகள்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து குணசேகரன் விலகல்! வலதுசாரிகளின் அழுத்தத்திற்கு பணிந்த கார்ப்பரேட்!

பத்திரிகைதுறையில் கால்நூற்றாண்டை நிறைவு செய்துள்ள குணசேகரன், தமிழ் ஊடக சூழலில் நேர்மையான, நெறிதவறாத பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர். ஒரு பத்திரிகையாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று உரத்து குரல் எழுப்பியவர். சமூக நீதியே தனது லட்சியம் என்று செயல்பட்டவர். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியை பூஜ்ஜியத்திலிருந்து கட்டியெழுப்பி, மிகக்குறுகிய காலத்தில் முதன்மை நிலைக்கு கொண்டு வந்தவர். பத்திரிகைதுறையில் அனைவராலும் மதிக்கப்படுபவர். உயர்ந்த லட்சியத்தோடு பத்திரிகைதுறைக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர். அப்படிப்பட்ட பத்திரிகையாளர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேர்மையான மற்றும் மக்களின் பக்கம் நின்று சிந்திக்கும் பத்திரிகையாளர்கள் மீது வலதுசாரி உதிரிக்கூட்டம் நடத்திவரும் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் இன்று குணசேகரகனை இழந்துள்ளோம். இந்த பிற்போக்காளர்களால் பத்திரிகைதுறை மட்டுமல்ல, தமிழ் சமூகம் ஒரு நேர்மையான பத்திரிகையாளனை இழந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத இந்த வலதுசாரிக் கூட்டம், கருத்துசுதந்திரத்தின் கழுத்தை நெறித்துவருகிறது. உண்மையை பேசுபவர்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டுள்ளது. தனது நாசகர திட்டத்தை செயல்படுத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக அப்பட்டமான பொய்களை அவிழ்த்துவிடுகிறது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க அவதூறுகளையும் பரப்பிவருகிறது.

இந்த நரிக்கூட்டத்தின் நயவஞ்சக செயலுக்கு, எந்த அறநெறியையும் பின்பற்றாத, லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்கள் அடிபணிகின்றன. இதுநாள் வரை நிறுவனத்திற்காக உழைத்த தொழிலாளர்களை துச்சமாக மதித்து தூக்கி எறிகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று குணசேகரன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து விலகியுள்ளார்.

பத்திரிகையாளர்களை மிரட்டும் இந்த பாசிச சக்திகளுக்கு அதிகாரவார்க்கம் துணைபோவதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது. ஏற்கனவே அசீப் நிர்பந்தத்தினால் ராஜினாமா செய்த நிலையில், தற்போது குணசேகரன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும் சில பத்திரிகையாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் இதுபோன்ற நெருக்கடியின் மத்தியில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் நாளை இதுபோன்ற நிலை ஏற்படலாம்.

பிற்போக்கு சக்திகளிடமிருந்தும், உழைப்பைச்சுரண்டி விட்டு, தொழிலாளர்களை சக்கையாக தூக்கியெறியும் கார்ப்பரேட்டுகளிலிடமிருந்தும் பத்திரிகைதுறையை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

ஆகவே, ஜனநாயத்தை காப்பாற்ற நினைப்பவர்களும், கருத்து சுதந்திரத்தின் காவலர்களும், சமூகநீதியின்பால் அக்கறை கொண்டவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. மக்கள் சார்ந்து சிந்திக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்களை மிரட்டும் சக்திகளை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைக்கிறது.

பத்திரிகையாளர்களை மிரட்டும் சமூக விரோத சக்திகளை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று  தமிழக அரசை மாற்றத்திற்கான உடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

 

Related posts

பத்திரிகையாளர் ஞானி மறைவு: மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வீரவணக்கம்

CMPC EDITOR

சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம்.

admin

ஜி டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

admin