திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா செய்தியாளராக வானமாமலை பணியாற்றி வருகிறார். இன்று காலை (21.11.23) சுமார் 10 மணியளவில் நாங்குநேரி தாசில்தார் அலுவலகம் அருகே அவரது மனைவி நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையில் வானமாமலையும் அவருடைய மனைவியும் இருந்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடையை நோக்கி இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், கடைக்குள் விழுந்த குண்டு வெடிக்காத நிலையில், கடையின் பெயர்ப்பலகையில் பட்டு கடைக்கு வெளியே விழுந்த குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை வெறித் தாக்குதலில் நல்வாய்ப்பாக வானமாமலை மற்றும் அவருடைய மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை கடைக்குள் விழுந்த குண்டு வெடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தை எண்ணிப்பார்த்தாலே மனம் பதறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், நாங்குநேரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரை, அவரோடு படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் அரிவாளால் வெட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து செய்திகளையும், செய்தியாளர் வானமாமலை நேர்மையாக வழங்கி வந்தார்.
இந்நிலையில், வானமாமலை நேர்மையாக செய்தி வழங்கிய காரணத்திற்காகவே அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால், சாதிப் பிரிவினையை தூண்டியதாக பொய் புகார் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, செய்தியாளருக்கு இருக்கும் அச்சுறுத்தலை உணர்ந்த காவல்துறை, சில நாட்கள் வானமாமலையின் வீட்டிற்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர் வானமாமலை மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று உண்மையை உரக்கச் சொல்வது பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையை செய்த வானமாமலை மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொலை முயற்சியை கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கருதுகிறது. இந்த தாக்குதல் நிகழ்வையும் வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே, இந்த கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மட்டுமல்லாமல் இந்த தாக்குலுக்கான பின்னணி குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர் வானமாமலை மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்களுக்கு அவர்களது தொழில் நிமித்தம் உள்ள அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இந்தத் தருணத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
All reactions:
6John Paul and 5 others