நடப்பதெல்லாம் சசிகலா நன்மைக்கே

0
921

இவ்வளவு நாளும் இருளில் என்ன நடந்துகொண்டிருந்ததோ அதுதான் தற்போதும் நடக்கிறது குறை ஒளியில். கடலில் இருக்கும் பனிக்கட்டி எப்படியோ அப்படித்தான் அரசியலும், பெரும்பாலும் நமது கண்களுக்கு அதன் விஸ்வரூபம் எப்போதும் தெரிவதேயில்லை. இதிலும் அதேதான் நிலை நமது கண்களுக்கு இது தெரியாது. ஒருவேளை நாம் எதையாவது யூகித்தாலும் அதை நம்மால் நிரூபிக்கவும் இயலாது.
சசிகலா என்பது தனி மனுசியல்ல, அது நடராசன், திவாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தவரின் முகம். அப்படி பார்க்கையில் இவ்வளவு நாளும் அதிமுகவினர் சொன்னது போல சசிகலா தான் ஜெயலலிதாவின் கரம் அல்லது அதற்கடுத்த நிலை. ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களையும் தாண்டி, அவரது இறப்பில் ஏற்படும் அரசியல் வெற்றிடத்த நிரப்பிக்கொள்ள பாஜக தொடங்கி பல கட்சிகளுக்கும் ஆசை இருந்திருக்கலாம். 2016 பிற்பாதியில் சில பாஜகவினரின் பேச்சுக்களில் இருந்து இதை நாம் உறுதிசெய்துகொள்ளலாம். தமிழகத்தில் அக்கட்சியை கொண்டுவர இதைத்தவிர வேறு வாய்ப்பு உருவாவதும் கடினம். காரணம் திராவிட கட்சிகளை தாண்டி அல்லது கூடுதலாக் ஒரு நன்மை கிடைக்கும் என்ற நன்மை தேசியகட்சிகளிடத்தில் தமிழக மக்கள் கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்க தமிழகத்தில் காங்கிரஸ் அளவுக்காவது செல்வாக்கு பெற இப்போதான வெற்றிடத்தை பயன்படுத்த வேண்டும்.
இப்படியாக, முயற்சிகளை தொடங்கலாம் என்றுள்ள தருணத்தில் அதிமுகவிலோ எல்லாம் சரியாக செல்கிறது. ஓபிஎஸ் முதல்வர். எதிர்ப்பு எங்கும் இல்லை. தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசே மேல் என்று யாவரும் அறிந்த காரணம் தான். சசிகலா பொதுச்செயலாளர். அருமையாக அந்த பதவிக்கு பொறுத்திக்கொண்டனர். சரியான காய் நகர்த்தல்கள். அப்படியே எல்லாம் நன்றாக சென்றன. செல்லுமிடமெல்லாம் சசிகலாவிற்கே முக்கியத்துவம். முதல்வரேயானாலும் ஓரமாய் நிற்கவைக்கப்பட்டார் ஓபிஎஸ். எப்படி ஜெயலலிதா இருந்த போது கட்சி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. சரி ’வலிமையான’ எதிர்க்கட்சி திமுக ஏதாவது செய்யும் என்றால் அவர்களும் ஒன்றும் செய்யவில்லை.
திமுகவை பொருத்தவரை கட்சியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததை போல் மக்களையும் தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதற்கான பாதையை வகுத்து அதில பயனிக்கும் அவருக்கு எதிர்கட்சி தலைவரானது நிறைவை தரவில்லையென்றாலும் பெருத்த ஏமாற்றமொன்றும் இல்லை. ஜெயலலிதா இருந்திருந்தாலே 2021 தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை நிறைந்தவராக இருந்த அவருக்கு இப்போதைய சூழ்நிலையை அறுவடை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. காரணம் ஏதாவதொரு தேசிய கட்சியை எதிர்த்து அரசியல் செய்வதை காட்டிலும் தங்களை போலவே யோசிக்கும், செயல்படும், அரசியல் செய்யும் அதிமுகவோடு அரசியல் போர் புரிவதைத்தான் அவர்களும் விரும்பியிருப்பார்கள். இல்லை ஒருவேளை அவர்களே அடிச்சிக்கிட்டு ஒடைஞ்சிருவாங்கன்னு நினைத்திருக்கலாம். ஆனால் அதிமுக கட்டுக்கோப்பாய் பயனிப்பது திமுகவினருக்கும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இன்னொரு ஜெயலலிதா உருவாவதை சிலர் விரும்பவில்லை, சசிகலா ஜெயலலிதாவாவதை சிலர் விரும்பவில்லை. ஆனால் அதுதான் நடக்கிறது. எல்லாம் சரியாக செல்லும் வேளையில் யார்தான் குழப்பத்தை ஏற்படுத்துவது. சசிகலாவின் முதல்வர் ஆசை அதற்கு அச்சாரமிட்டது. தத்தளித்து கொண்டிருப்பவர்களுக்கு லைஃப் போட் கிடைத்தது போல் இருந்திருக்கும், சசிகலா முதல்வராகும் செய்தி. எப்படி பொதுச்செயலாளர் ஆனாரோ அப்படியே முதல்வரும் ஆகியிருக்கலாம். சசிகலா முதல்வராக வேண்டும் என நிர்வாகிகளை கெஞ்சவிட்டு, தீர்மானங்களை நிறைவேற்றி. ஆனால் ஓபிஎஸ், திமுக முதல்வர் போல் வீதிகளில் நடக்கிறார். நிவாரணங்களை பார்வையிருகிறார். மத்திய அரசோடு இணக்கமாக செல்கிறார். இந்த சூழலில் முதல்வர் ஆசையை நிறைவேற்ற முடியாமலே போகுமோ என்ற அச்சம் எழுவது இயல்புதான். ஆனால் சசிகலா முதல்வராக வேண்டும் என நிர்வாகிகளை கெஞ்சவிட்டு, தீர்மானங்களை நிறைவேற்றி. பொருத்திருந்து முதல்வராகியிருக்கலாம்.
சசிகலா முதல்வர் என்ற செய்தி நிச்சயம் அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பிவிடும் என்ற அச்சம் நிச்சயம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும். 21 மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் அவ்வளவுதானே, எப்படி 96க்கு பிறகும் 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தோமோ அப்படியே என்ற நம்பிக்கை சசிகலாவிற்கு இருக்கலாம். ஆனால் அத்ற்கு கட்சி இருக்க வேண்டும். முழு கட்டுப்பாட்டில். அதை முழுமையாக கைப்பாற்றாமலேயே, கைப்பற்றிவிட்டோம் என்று காணல்நீராய் மனதை நிறைத்துக்கொண்டு முதல்வர் அறிவிப்பை வெளியிட்டது பெரும்பிழை.
இதனால் விழித்துக்கொண்ட பாஜக உள்ளிட்ட கட்சிகள் அல்லது அவர்களின் இயக்கிகள், இதோ வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதன் விளைவுகள் மட்டுமே நம் கண்களுக்கு. ஓபிஎஸ்ஸை அவர்கள் தலைவராகவெல்லாம் உருவாக்கவில்லை. சீட்டாட்டத்தில் எப்படி ஒரிஜினல் ரம்மிக்காக ட்ரிப்ளெட்டை கலைப்போமோ அத்தகைய பயன்பாடுதான் ஓபிஎஸ்ஸும், அவருக்கு ஆதரவாய் சேர்க்கும் தலைகளும் தங்களுக்கு ரம்மி சேரும் வரை மட்டுமே. கலைத்தாடுவதும், பயன்படுத்த எத்தனிப்பதும் ஆடுபவரை பொருத்தே.
மத்திய அரசே என்றாலும் சில முடிவுகளை எடுக்க சில தடைகள் இருக்கிறது. ஆதரவுகடிதம் கொடுத்தபின்பு ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் அது தான் மரபு. ராஜினாமவை ஏற்றபிறகு திரும்பபெற்றுக்கொள்ள அனுமதிப்பதும் மரபல்ல. இது பாஜகவிற்கு கொஞ்சம் பின்னடைவுதான். ராஜினாமாவை ஏற்றிருக்க கூடாதென்று நினைத்திருப்பார்கள். சட்டப்பேரவை கூட்டினால் யாருக்கும் பெரும்பான்மை வராது. இந்த சூழலில் ஆதரவு கடிதம் அளித்த சசிகலாவிற்குதான் ஆட்சியமைக்க உரிமை உள்ளது. சந்தேகமிருந்தாலும் எம் எல் ஏக்கள் பரேடை நடத்தி நிரூபித்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் ஆனால் அது அவருக்கு சாதகமாகிவிட வாய்ப்பிருக்கிறது. என்னதான் செய்வது, அதனால் தான் இந்த தாமதம். பெரும்பான்மை பலம் கொண்டவரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது ஆளுநரின் கடமைதான், ஆனாலும், அதற்கான காலம் சரியாக வரையறுக்கப்படாதது பாஜகவின் செயல்பாடுகளுக்கான நேரத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த தாமததில் தான் எம் எல் ஏக்களை வாங்க அல்லது வரவழைக்க முடியும். கோல்டன் பே ரிசார்ட்டில் எம் எல் ஏக்கள் சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர்களை அங்கிருந்து விடுவித்து ‘ சுதந்திரமாக ‘ விடச்சொல்வதற்கும் ஒரு காரணம்தான்.
ஸ்டாலினை பொருத்தவரை இப்போதைய அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சியமைக்கவேண்டுமா என்று யோசிக்கலாம். எப்படியும் தேர்தல் வந்தால் நாம்தான் முதல்வர் என்று பொருமை காக்கலாம். அதே நேரம் பாஜகவும் திமுக ஆளுவதை விரும்பவில்லை. அதனால் ஓபிஎஸ்ஸையே கொஞ்சம் நாள் முதல்வராய் வைத்திருக்கலாம் என்று விரும்பும். குடியரசு தலைவர் தேர்தல் வரை, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வரை, தங்களை தமிழகத்தில் வலுப்படுத்திக்கொள்ளும் வரை.
இன்னொரு சிக்கல் இருககிறது. அது, ஓபிஎஸ்ஸும் தலைவராகிவிடுவது. சில நேரங்களில் நாம் தலைவலிக்கு எடுக்கும் மாத்திரை தலைவலியை குணப்படுத்தி வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவது போல் அமைந்துவிடலாம். எது எப்படியோ ஜெ அணி ஜா அணி என்பது போன்ற சிக்கலாகியிருக்கும் இதில், இரட்டையிலையை கைப்பற்றுவதில் மட்டுமேயிருக்கிறது எஞ்சிய அரசியல். ஆட்சியை கைப்பற்ற எடுக்கு முயற்சியைவிட சசிகலாவிற்கு கட்சியை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதில் தான் அதிக சிரத்தை தேவை. நிச்சயமாக ஓபிஎஸ்ஸால் பெரும்பான்மை பெறவியலாத சூழல் இருக்கு இத்தருணத்தில் கட்சியையாவது காக்க முயற்சிக்கலாம். குடியரசுத்தலைவர் ஆட்சியும், தேர்தலும் கூட அதற்கு வழிவகுக்கலாம்.
சசிகலாவிற்கு எல்லாமிருந்தும் மக்களிடத்தில் அனுதாபம் மட்டும் துளியும் இல்லை. ஜெயலலிதாவிற்காவது எம்ஜியாரின் இறுதி ஊர்வலத்திலிருந்து உருவான அனுதாபம், விபத்து, சட்டப்பேரவை சேலை உருவுதல், ராஜிவ் மரணம் வரை அலையாகி 91 வெற்றியை கொண்டுவந்தது. என்னதான் சண்டி ராணியாய் இருந்தாலும், தனி மனுசி, பெண், ங்கற பல வடிவ அனுதாபமும் கூடவே இருந்து வந்தது. ஆனால் சசிகலாவிற்கு… ஒன்றும் இல்லை. ஜெயலலிதாவின் சிகிச்சை, மரணத்தில், இருக்கும் மர்மங்களும் அவருக்கெதிராக உள்ளநிலையில் அனுதாபத்தை உருவாக்கிகொள்ள ஒரு வாய்ப்பு உருவாகிகொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனாலும், ஆட்சி அமைத்தாலும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. பயன்படுத்துவாரா என்றுதான் தெரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக யாரால் நாம் ஏமாற்றப்பட வேண்டும் என்பதில் மட்டுமே, நாம் கவனம் செலுத்துவதில் இருக்கிறது உண்மையான
”அரசியல்“.
.
– ப.தேவேந்திரன்