CMPC
STATEMENTS / அறிக்கைகள்

நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் கைது, கருத்து சுதந்திரத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி! அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர், அரசியல் சாசன உரிமை பறிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாமா?

கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நக்கீரன் இதழில், கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியின் வாக்குமூலம் குறித்தசெய்தி வெளியானது. அதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, நிர்மலா தேவி நான்கு முறை சந்தித்துள்ளதாகவும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விசாரணை அதிகாரியிடம் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பிருக்கும் பட்சத்தில், நிர்மலாதேவி உட்பட, கைது செய்யப்பட்ட மூன்று பேரை வைத்து மட்டும் வழக்கை முடிக்க, காவல்துறை நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும், காவல்துறையில் பணியாற்றும் நியாயமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், நிர்மலா தேவியின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகி இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இன்று 09.10.2018 (செவ்வாய்கிழமை) காலை, புனேவிற்கு செல்ல, சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று துணை ஆணையர்கள் மற்றும் 8 ஆய்வாளர்கள் உட்பட ஒரு காவல்துறை பட்டாளமே இந்த கைது நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கோபாலை கைது செய்து சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த காவல் துறையினர், அங்கிருந்த கோபால் அவர்களை சுமார் 4 மணி நேரம் வரை, வழக்கறிஞர்கள் உட்பட யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, கைது செய்யப்பட்ட நபருக்கு அவரை தற்காத்துக்கொள்ள அனைத்துவகையான உரிமையும் வழங்க வேண்டும். ஆனால், இவற்றை மதிக்காத காவல்துறையினர், இந்த கைது விவகாரத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறிலில் ஈடுட்டுள்ளனர்.

அதேபோல், ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து வெளியாகும் செய்தி, உண்மைக்குப் புறம்பானது என ஒருவர் கருதினால், அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் மீது அவதூறு வழக்கு தொடர்வது வழக்கம். இதன் படி, கடந்த காலங்களில், அதிமுக, திமுக என இரண்டு ஆட்சியிலும், பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில், அவதூறு வழக்கு பதிவு செய்யாமல், ஆளுநரை அவருடைய பணியை செய்யவிடாமல், தடுத்தல், தாக்குதல் என்ற (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124) மிகவும் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, யாரோ கொடுத்த அழுத்தத்தின் காரணமாக காவல்துறை மேற்கொண்ட அப்பட்டமான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையை மக்களுக்குச் சொல்லும் ஊடகத்தின் ஆசிரியர் மீதே, காவல்துறையினர் இதுபோன்ற ஒரு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையேயன்றி வேறேதும் இல்லை. இந்த கைது நடவடிக்கையை பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவிட்டால், நாளை இதேபோல், அரசு அதிகரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுளை எழுதும் பத்திரிகையாளர்கள் மீதும் இதுபோன்ற கடுமையான சட்டப்பிரிவை காவல்துறை பயன்படுத்த தயங்காது. உண்மையில் சொல்லப்போனால், அதுபோல் எதிர்காலத்தில் யாரும் எழுத துணியக்கூடாது என்ற அச்சுறுத்தலை பத்தரிகையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் அரும்பெரும் பொறுப்பை ஏற்றுள்ள ஆளுநர், தனக்கு எதிராக எழுதப்பட்ட செய்தியை நியாயமாக எதிர்கொள்வதற்கான வழியை விட்டுவிட்டு, செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கடுமையான சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதை பார்த்துக்கொண்டிருப்பது, இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை நசுக்கப்படுவதை அவர் வேடிக்கை பார்ப்பதற்கு சமம் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகிறது.

ஆகவே, நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது போடப்பட்டுள்ள காலனிய கால சட்டப்பிரிவை தமிழக அரசு உடடினடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் போக்கை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

தனது பொறுப்பை உணர்ந்து, நக்கீரன் கோபாலுக்க எதிராக கொடுக்கப்பட்ட புகாரை ஆளுநர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள கடுமையான சட்டப்பிரிவை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

Related posts

முகம்மது சுபேர் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை உடடினயாக விடுதலை செய்ய வேண்டும்

CMPC EDITOR

பத்திரிகையாளர்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி! மாலை முரசு தொலைகாட்சி நிர்வாகத்தின் மௌனத்தை கலைப்போம்!

CMPC EDITOR

கொரோனா தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள். தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கோரிக்கை

CMPC EDITOR