CMPC
POLITICS / அரசியல்

தேவை: மாநில சுயாட்சி

ஜகஜோதியாக எரிந்துவரும் ஜல்லிகட்டின் ஒளியில் மின்மினி பூச்சின் ஒளியாக மறைந்துவிட்டது கல்வியை சேவையிலிருந்து வியாபாரமாக மாற்றும் GATT ஒப்பந்தங்கள்.

கல்வியை மக்களுக்கு அளிப்பதை கடமையாக கருத வேண்டிய அரசு, அதை பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக வியாபரமாக மாற்றி, அடுத்த தலைமுறையை அடிமைகளாய் மாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டுள்ளது.பெரும்பான்மை மக்களின் அன்றாட வாழ்வை சிதைக்கும் இது போன்ற முடிவுகளை எடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று நம்ப வைக்கப்படும் அரசுகள்.

1980களில் உள்ளூர் முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்பட்ட கல்வி, இப்போது உலக ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. யாரிடமும் கருத்து கேட்காமல், மத்திய அரசு எப்படி முடிவு எடுக்க முடியும்? தனிபட்ட ஒவ்வொருவரிடமும் கேட்க முடியாது தான், குறைந்தபட்சம் மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெருகின்றதா? அது அவசியம் தானா? மாநில அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால்? இது போன்ற கேள்விகள் நமக்கு எழும்…..

உண்மையில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது கட்டுப்பாடற்ற உரிமைகள் மத்திய அரசுக்கு தரப்படவில்லை. மத்திய பட்டியலில் சில உரிமைகள், மாநில பட்டியலில் சில உரிமைகள், பொதுபட்டியலில் சில உரிமைகளும் வழங்கபட்டிருந்தன.

அது என்ன மாநிலப் பட்டியல்? பொதுப் பட்டியல்?

இந்தியா கூட்டாச்சி நாடு என்பதை நிறுவுவது இந்திய அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணை. மத்திய மற்றும் மாநில  அரசுகளின் அதிகாரங்களை பற்றி பேசும் இந்த சட்டபிரிவின் படி

இந்தியாவில் உரிமைகள்,

  1. மாநிலப் பட்டியல்

2.மத்தியப் பட்டியல்

  1. பொதுப் பட்டியல்

என மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.

மாநிலப் பட்டியல்:

மாநிலப் பட்டியலின் கீழ் வரும் துறைகளில்  மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களுக்கு  ஏற்ப சட்டம் இயற்றிக் கொள்ளலாம். எடுத்துகாட்டாக மது விலக்கு என்பது மாநில பட்டியலின் கீழ் உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மதுவிலக்கு தொடர்பான சட்டங்கள் வேறுபடுகின்றன. (குஜராதில் இதை செய்ததாகத்தான் பிரதமர் மார் தட்டிக் கொண்டார். ஆனால் உண்மை அதுதானா என்பது ஒரு தனி வாதம்)

மத்தியப் பட்டியல்:

நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட துறைகள் இந்த பட்டியலின் கீழ் வருகின்றது. கூட்டமைப்பை காப்பதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த துறைகள் வருகின்றன.

பொதுப்பட்டியல்:

இதன் கீழ் வரும் துறைகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்தே சட்டம் இயற்றுவதோ, திருத்துவதோ செய்ய முடியும். அதாவது மாநில அரசின் ஒப்புதலோடு தான் மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும். அதே சமயத்தில்  இரண்டு அரசுகளுக்கும் இடையே சட்டம் இயற்றுவதில் முரண்பாடு ஏற்பாட்டால் மத்திய அரசின் உத்தரவே முடிவானது. அதாவது பெயரளவில் இது பொதுவான பட்டியல்.

முதலாளிகள் தங்களின் தொழிற்சாலைகளுக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக உரிமம் பெறுவது சிரமமாக இருப்பதால், மாநில அரசுகளின் பட்டியலில் உள்ள துறைகள் பொது பட்டியலின் கீழ் மாற்றப்படுகின்றன. 1950க்கு பிறகு பல முறை இதுபோன்று பட்டியல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதில் குறிபிட்டு சொல்ல வேண்டுமானால் நெருக்கடி காலத்தில், கேட்பார் அற்ற நேரத்தில், இந்த பட்டியல்கள், மழலை பள்ளி மாணவர்களின் நோட்டு போல கந்தலானது. அப்போது கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றபட்டது.

ஆனால் எம்ர்ஜென்சிக்கு பிறகு, மத்திய அரசில் பங்கு கொண்ட எந்த மாநில கட்சியும் இதைப் பற்றி பேசவில்லை. ஒவ்வொரு முறையும் பொதுக்குழுவில் மாநில சுயாட்சியை, தீர்மானமாக நிறைவேற்றும் திமுக உட்பட எந்த கட்சியும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

அப்படி முயற்சித்து உரிமைகளை மீட்டிருந்தால், கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதந்திருக்காது. ராஜிவ் கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அந்த 7 பேர் சிறையிலேயே தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருந்திருக்காது. மாநில அரசே மின்சாரத்தை முழுவதுமாக உற்பத்தி செய்திருக்கும், அது குறைந்த விலையில் மக்களுக்கு கிடைதிருக்கும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மற்றியிருக்கலாம். பள்ளிகளில் கட்டாய பாடமாகவும் மாற்றியிருக்கலாம். ஆனால் இந்த ஓட்டரசியல் நடிகர்களுக்கு, இதைப்பற்றி என்றும் கவலை இருந்ததில்லை. அப்படி பிரச்சனை நிலவும் வரைதான் மக்களை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர்.

GAAT ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் என்ன??

ஆயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும். நம் அடுத்த தலைமுறை என்ன படிக்க வேண்டும், அவன் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை உலக முதலாளிகள் முடிவு செய்வார்கள். நமது கலாச்சாரம், பண்பாடு என சொல்லப்படும் அனைத்தும் புதைக்குழிக்குள் தள்ளப்படும்.

ஆனால் இதை எல்லாம் அறிந்தும் இனம், மானம் மன்னாங்கட்டி என பேசி இளைஞர்களை மழுங்கடிக்கவே, ஓட்டரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள் அவர்களை உணர்ச்சிவசப்படுத்தி முட்டாள்களாய் வைதிருக்கவே விரும்புகின்றனர்.

இளைஞர்களே,

இனம்,  பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் மீட்டெடுக்க இந்த அரச கட்டமைப்பில் நமக்கு தேவை  மாநில சுயாட்சி உரிமை. மூவர் தூக்கு, GATT ஒப்பந்தம் என எல்லாவற்றிற்கும் இடைக்கால தீர்வு மாநில சுயாட்சியே.

ஒன்று சேருவோம்,

போராடுவோம்,

புரட்சி செய்யவோம்.

– அருண்மொழி வர்மன்

Related posts

கல்வி எனது பிறப்புரிமை

CMPC EDITOR

கூவத்தூர் வார்டன் சசிகலா

CMPC EDITOR

பரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே சாதி ஓழிப்பை சாத்தியப்படுத்தும்

CMPC EDITOR