திருப்பதியில் தமிழ் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

0
515

டிசம்பர் 10 2014

திருப்பதியில் தமிழ் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ராஜபக்சே திருப்பதி வந்ததையடுத்து நேற்று மதிமுக உள்ளிட்ட அமைப்புகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்களை தடுத்து கைது செய்த ஆந்திர காவல்துறையினர் அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நம் செய்தியாளர்கள், புதியதலைமுறை செய்தியாளர் மணிகண்டன், ஒளிப்பதிவாளர் மது, உதவி ஒளிப்பதிவாளர் தினேஷ், புதியதலைமுறை திருப்பதி செய்தியாளர் நரேஷ், தந்தி டிவி செய்தியாளர் காண்டீபன், ஒளிப்பதிவாளர் சித்திரவேல், சன்டிவி செய்தியாளர் குணசேகர், ஒளிப்பதிவாளர் மருதமுத்து உள்பட 12 பேரையும் சேர்த்து கைதுசெய்ததோடு மட்டுமல்லாமல் ஒளிப்படக்கருவிகள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியள்ளனர்.

 

அதேநேரத்தில் தெலுங்கு செய்தியாளர்கள் யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை. கைதுசெய்யப்பட்டு சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகம் இருக்கும் திருப்பதி பாபவிநாசம் பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நள்ளிரவு 3மணிக்கு நம் தோழர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளது ஆந்திர காவல்துறை.ஆந்திர காவல்துறையின் வரம்புமீறிய இந்தச் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறது.தமிழக அரசு இதை உடனடியாக கவனத்தில் எடுத்து ஆந்திர காவல்துறையின் இந்த வன்செயலை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்களுக்கு ஏற்பட்ட கடும் மன உளைச்சலுக்கும், சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக் குண்டான உரிய இழப்பீட்டையும் ஆந்திர அரசிடமிருந்து பெற்றுத்தரவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.