திருநெல்வேலி மாவட்ட பிரஸ்கிளப் அலுவலகத்தை சீல் வைக்க உத்தரவிட்டிருக்கும் அம்மாவட்ட ஆட்சியரின் எதேச்சதிகார போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
475

அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் நடத்தையை நடைமுறைபடுத்தும் விதமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் பேனர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி தலைவர் படங்கள், சுவர் விளம்பரங்கள் அப்புறப்படுத்திவருகின்றனர்.

இதனிடையே,திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ‘பிரஸ்கிளப்’பை சீல்வைக்க அதிகாரிகள் இன்று வந்துள்ளனர். இதையறிந்து செய்தியாளர்கள் அனைவரும் அங்கு கூடியுள்ளனர். சீல் வக்க வந்த அதிகாரிகளில் ஒருவரான பாளையங்கோட்டை தாசில்தார், இது ‘கலெக்டர் ஷில்பா பிரபாகர் உத்தரவு என்றும்,சீல் வைத்தே தீருவோம்’ எனவும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். உடனடியாக செய்தியாளர்கள், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் இதுகுறித்து முறையிடுவதற்காக சென்றனர். அறையிலிருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம்,’ உங்களுக்கெல்லாம் அறிவில்லையா…பள்ளிக்கூட மாணவர்கள் போல் நடந்து கொள்கிறீர்களே’ என தரம் தாழ்ந்து, தாம் வகிக்கும் பொறுப்புக்கு முற்றிலும் எதிரான வார்த்தைகளை செய்தியாளர்களிடம் பயன்படுத்தியிருக்கிறார். மாவட்ட ஆட்சியரின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை கண்டித்து திருநெல்வேலி பிரஸ்கிளப்பில் செய்தியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்கள்களிடம் தொடர்புகொண்டு, விசாரிக்கையில், கடந்த 2004 ஆம் ஆண்டுமுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரஸ்கிளப் செயல்பட்டுவருவதாகவும், இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ தேர்தல்கள் நடந்திருக்கின்றன, ஆனால், இம்முறைதான் இந்நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் வந்தால் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதும், அதை அதிகாரிகள் எப்படி சிரத்தையோடு நடைமுறைபடுத்துகின்றனர் என்பதும் பத்திரிகையாளர்களாகிய நாம் அறிந்ததுதான் என்றாலும், பிரஸ்கிளப்புக்கு சீல் வைப்பது எந்தவிதமான தேர்தல் நடைமுறை என்பது தெரியவில்லை. செய்தியாளர்களுக்கு எதிரான இப்படிபட்ட ஜனநாயகமீறலான உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகருக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக தம் தவறான நடவடிக்கையை திரும்பப்பெறவும் கேட்டுக் கொள்கிறது.

உரிமைக்காக போராடும் திருநெல்வேலி மாவட்ட பத்திரிகையாளர்கள், இதுதொடர்பாக முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் முழு ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது.