தமிழக அரசே, திருச்சியில் போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடு.

0
537

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறியதாக மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் விவசாயிகள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்ட செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இரவு பகல் பாராமல் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகரம், தென்னூர் பகுதியில் அமைந்துள்ள இந்தி பிரச்சார சபாவை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று (07.04.18) காலை 11 மணி அளிவில் போராட்டம் நடத்தினர். ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இந்த நிகழ்வை ஒளிப்பதிவாளர்கள் படம் பிடிக்கத் தொடங்கினர். செய்தியாளர்களும் காவல்துறையினரின் அத்துமீறலை நேரலையில் செய்தியாக வழங்கினர். இதனால், கோபமடைந்த காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சில காவலர்கள் ஒளிப்பதிவாளர்களையும் செய்தியாளர்களையும் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர். இதில் நிலைகுலைந்த செய்தியாளர் ஒருவர் தரையில் விழ, அவரை பூட்ஸ்கால்களால் காவல்துறையினர் மிதிக்கத் தொடங்கினர். உடனே அங்கிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் அவரை காவல்துறையினரின் தாக்குதலிலிருந்து விடுவித்து காப்பாற்றினர். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது என்பதை அறிந்தும் காவல்துறையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது, தங்களை யார் கேட்கமுடியும் என்ற அதிகாரத் திமிரே.

இதேபோல், சில தினங்களுக்கு முன்னர், சென்னை, தி.நகரில் போக்குவரத்து காவல்துறையினர் பிரகாஷ் என்ற இளைஞரை அவருடைய தாய் மற்றும் சகோதரி மற்றும் பொதுமக்களின் முன்னிலையில், கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். இந்த நிகழ்வை கண்டிக்கும் வகையில் நேற்றைய தினம் (06.04.18) தி.நகரில் சிபிஐ (மக்கள் விடுதலை) கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த பேராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் காவல்நிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
சமீபகாலத்தில், பொதுமக்களை காவல்துறையினர் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக காவல்துறையின் அந்த அதிகாரத் திமிர் பத்திரிகையாளர்களின் பக்கமும் திரும்பியுள்ளது. ஆகவே, இதை தொடக்கத்திலேயே கடுமையாக எதிர்க்கத் தவறினால், இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, திருச்சியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க, பத்திரிகையாளர்கள் அமைப்புகள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சரையும், காவல்துறை இயக்குனரையும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் நேரில் சந்தித்து இதை வலியுறுத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

பத்தரிகையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்திய திருச்சி காவல்துறையினரை மாற்றத்திற்கான ஊடகயவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.