தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடத்னே தளர்த்த வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

0
565

மக்களின் பிரதிநிதிகள் கூடி, மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானவை. ஆகவே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. இதை கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் சட்டப்பேரவை நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படாததுடன், பேரவை நடவடிக்கையின் காட்சிப்பதிவுகளும் கூட ஊடகங்களுக்கு முழுவமையாக வழங்கப்படுவதில்லை. தமிழக அரசின், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையால், தணிக்கை செய்யப்பட்ட காட்சிப் பதிவுகளே ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றையே ஊடகங்கள் ஒளிபரப்புவும் செய்கின்றன. இது ஒருபுறமிருக்க, தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதற்கு, பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பேரவை நடவடிக்கைகளை நேரடியாக பதிவு செய்ய முடியாவிட்டாலும், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சிகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்வதை கடந்த வெள்ளிக்கிழமை (19.08.16) வரை நேரலையில் வழங்குவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நேரலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அதேபோல், உறுப்பினர்கள் பேரவைக்குள் செல்வதைவும், பேரவை முடிவுற்று உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்வதையும், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வதையும் படமெடுப்பதற்கு வசதியாக, பேரவையின் நான்காம் நுழைவாயிலில் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது புகைப்படக் கலைஞர்களும், ஒளிப்பதிவாளர்களும் நான்காம் நுழைவாயிலின் அருகில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதேபோல், பத்திரிகையாளர்கள் பேரவை வளாகத்தின் அருகில் தொலைபேசியில் பேசக் கூடாது என்பது போன்ற தேவையற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, சட்டப்பேரவை வளாகத்திற்குள் நின்று கொண்டு, செய்தியாளர்கள் நேரலையில் செய்தி வழங்கக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே, காமராஜர் சாலையில் நின்றுகொண்டு, செய்தியாளர்கள் செய்தி வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கே முன்னுதாரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், சில மாநில சட்டடப்பேரவை நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும், பத்திரிகைதுறையின் சுதந்திரத்தை பறிப்பதற்குச் சமம்.

மக்களின் பிரதிகள் கலந்துகொள்ளும், மக்களுக்காக நடத்தப்படும், சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்துகொள்வது மக்களின் உரிமை. அந்த நிகழ்வுகளை மக்களுக்கு சென்று சேர்ப்பது ஊடகங்களின் கடமை. அந்தவகையில், சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் கட்டுப்பாடுகள் விதிப்பதும், தணிக்கை செய்து செய்திகளை வழங்குவதும் ஊடக சுதந்திரத்தை பறிப்பதுடன், மக்களின் உரிமையை பறிப்பதாகும்.

ஆகவே, சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசின், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் பேரவையின் நிகழ்வுகளை தணிக்கை செய்யாமல் முழுமையாக ஊடகங்களுக்கு தர வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

ஊடக சுதந்திரத்தை பறிப்பதுடன், மக்களின் உரிமையை மறுக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும், ஊடக நிறுவனங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.