ஜெயா டிவி ஒளிபரப்பிற்கு தடை விதித்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
438

சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று (09.11.17) காலை தொடங்கி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற சோதனை நடத்தப்படும்போது, குறிப்பிட்ட நிறுவனமோ அல்லது தனிநபரோ, ஆதாரங்களை அழிப்பதையும், மறைப்பதையும் தடுக்கும் வகையில், சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இன்று ஜெயாடிவியில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதித்துள்ளனர். எந்த செய்தி அறிக்கையும் படிக்க கூடாது, விவாதம் நடத்த கூடாது, செய்தியாளர்கள் செய்தி வழங்கக் கூடாது என்று, ஒட்டுமொத்தமாக செய்தி ஒளிபரப்பையே நிறுத்தும் வகையில் ஜெயா டிவியின் நிர்வாகத்தை மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக பல மணிநேரமாக, ஜெயா டிவியில் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆதாரங்களை அழிப்பதையும், மறைப்பதையும் தடுக்கும் வகையில், சோதனை நடைபெறும் வளாகத்திற்கு யாரையும், அனுமதிக்க மறுப்பதும், அங்கிருந்து யாரும் வெளியேற தடைவிதிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால், செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதிப்பதென்பது, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடவடிக்கை. உள்நோக்கத்துடன் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை. அத்துடன், ஊடகத்தின் செய்தி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகவே பார்க்க வேண்டும்.
ஆகவே, ஜெயா டிவியின் ஒளிபரப்பிற்கு தடை விதித்துள்ள வருமான வரித்துறையின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயா டிவியின் செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.
ஜெயா டிவியில் செய்தி ஒளிபரப்பு உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.