ஜூனியர் விகடன் புகைப்படக்கலைஞர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது. தாக்குதலுக்கு காரணமான காவல்துறையினர் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

0
638

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொண்ட தேர்தல் பொதுக்கூட்டம், சென்னை தீவுத்திடலில் இன்று (09.04.2016) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜூனியர் விகடன் பத்திரிகையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் நிவேதன், பொதுக்கூட்டக் காட்சிகளை படம்பிடித்துக்கொண்டிருந்தார். நாட்காலிகளை அவர் படம் பிடித்தபோது, அங்கு காவலுக்கு நின்ற காவல்துறை அதிகாரி ஒருவர், நிவேதனை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், நிவேதன் கையிலிருந்த கேமராவை பிடுங்கிய அந்த காவல்துறை அதிகாரி, அதிலிருந்த “மைக்ரோ சிப்பை“ எடுத்துக்கொண்டு கேமராவை திருப்பித்தந்துள்ளார். நிவேதனை, அந்த காவல்துறை அதிகாரி தரக்குறைவாக பேசியதுடன், அனைவர் முன்னிலையிலும் அவரின் கழுத்தை பிடித்து இழுத்துச்சென்றுள்ளார்.

தேர்தல் காலத்தில், தங்களை ஆளப்போகும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய மக்களுக்கு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும், அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளையும் கொண்டு சேர்ப்பதுடன், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் மேற்கொள்ளும் வகையில், தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த பணியை செவ்வனே செய்வதற்காக, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பரப்புரை பயணங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு மத்தியில், களத்திற்கு நேரடியாக சென்று பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்து வருகின்றனர். ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்த பெரும்பணியை மேற்கொண்டு வரும் பத்திரிகையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுப்பது, மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்கள், ஜனநயாகத்திற்கு எதிராக விடப்படும் சவாலாகவே பார்க்கப்பட வேண்டும். அதுவும், தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில், மிகமுக்கிய பங்கை வகிக்கும் காவல்துறையினரே, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, ஜனநாயகத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும் நிகழ்வாகவே பார்க்க வேண்டும்.

ஆகவே, தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்திய தேர்தல் ஆணையம், ஜூனியர் விகடன் பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் நிவேதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, ஒரு தனிநபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல், தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கையாக கருதி, இந்த தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரியின் மீது, கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் காலங்களில், காவல்துறையினரும், அரசியில் கட்சியினரும் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என, அவர்களை வலியுறுத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.