ஜல்லிக்கட்டு அரசியல்

0
682

அரசுக்கு அல்லது அரசின் நடவடிக்கைக்கு எதிராக திமுக முன்னெடுத்த மக்கள் திரள் போராட்டங்களின் வீரியத்தை மத்திய அரசு அறியும். இந்தி எதிர்ப்பு போராட்டமே அதற்கு சாட்சி. அப்படியானதொரு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி 90 களில் நடத்தி நோக்கத்தை வென்ற கதை அறிவோம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசு நடக்கும்பொழுது, மக்கள் கிளர்ந்தெழவது இயல்பு என்றாலும் வினையூக்கி மிக அவசியம். அக்கிளர்ச்சியை சீராக்கி ஒருமுகபடுத்தி அமைப்பாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நல்ல தலைமைக்கு உண்டு… அந்த தலைமை யார் என்பதை ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பார்த்துவிடலாம். நாம் தமிழருக்கும் அந்த வாய்ப்பு உண்டு, திமுகவிற்கு கூடுதல் வாய்ப்பும் திறனும் உண்டு, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்திறகும் உண்டு… திமுக தொண்டர்களை தன்னை தலைவராக ஏற்றொக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்ட ஸ்டாலினுக்கு மக்களிடம் அதை நிலை நிறுத்த இது சிறந்த வாய்ப்பு. சீமானுக்கோ தனது தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இனி கிடைப்பது ஐயமே. தன் மீதான சாதி, பகுதி சார்ந்த முத்திரையினை களைந்துகொள்ள பாமகவிற்கு கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இந்த ஜல்லிக்கட்டு. காங்கிரஸ் தமிழக மக்களோடு மீண்டும் ஐக்கியமாகிகொள்ள கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பு இது. எல்லாவற்றிற்கும் மேலாக பாஜக தன்னை பலிகடாவாக்கிகொள்ளாமல் இருப்பதற்காவது சட்டப்பூர்வ அனுமதியை கொடுக்கலாம். குறைந்தபட்சம் தனக்கு பலனில்லை என்றாலும் மற்றவர்களின் அறுவடையையாவது தடுக்கலாம். அதற்கு பலருக்கும் வாய்க்கட்டு போட்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். தங்கள் சித்தாந்தத்திற்கும் தங்களை உருவாக்கியவர்களுக்கும் முரணானது என்றாலும் அதை செய்யத்தான் வேண்டும். இல்லையென்றால் இதன் பலன் தங்கள் எதிரிக்கு செல்லும் வாய்ப்பை அவர்கள் கொடுக்க நேரிடும்.

நிற்க. ஜல்லிக்கட்டு என்பது அறுவடை திருவிழாவின் ஒருபகுதி. ஜல்லிக்கட்டிற்காதரவாய் இவர்கள் சொல்லும் சங்க இலக்கிய சாட்சியம் போதும் அதற்கு. இன்றைய சூழலில் அறுவடை என்பது பெரும் பண்ணையார்களுக்கு மட்டுமே சாத்தியமாய உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட, மாரடைத்து மாண்ட விவசாயிகளின் நிலையை யாம் அனைவரும் அறிந்தோம். ஆனால் அதை உணர்ந்தோமா என்பது பெருஞ்சோக கேள்வி. உணர்ந்திருந்தால் ஏன் இந்நிலை வரப்போகிறது.

அறுவடையை கொண்டாடும் திருவிழாவின் ஒரு பகுதியென்றால் மதுரையை போலவே கீழத்தஞ்சையிலும் விமர்சியாக கொண்டாடப்படம் திருவிழாவாக இருந்திருக்கும் இந்த ஜல்லிக்கட்டு. மாறாக காரண காரியமற்ற வறட்டு கௌவுரவ அடையாளமாக இந்த ஜல்லிக்கட்டு மாறியிருப்பதாகத்தான் சந்தேகப்பட வைக்கிறது. அப்படியில்லையென்றால் மதுரை, திண்டுக்கல் என்று சுருங்கியிறாது, அலங்காநல்லூர், அவனியாபுரங்கள் தஞ்சையிலும் அல்லவா இருந்திருக்க வேண்டும்.

இல்லை இது மரபு, வீரம் என்று முறுக்கிக்கொண்டிருக்கும் நாமக்கு எது தேவை என்பதில் இருக்கிறது நமது கலாச்சாரமும், பண்பாடும். சோறுடைத்த தஞ்சையில் மாரடைக்கும் விவசாயியை மறந்து, மஞ்சள் சாகுபடி செய்யும் ஈரோட்டில் விவசாயி சாகும்படியானதை மறந்து, எதை நினைந்து கொண்டாடத் துடிக்கிறோம் விவசாயத் திருவிழாவை.

மழை பொய்த்து விட்டது இயற்கை, காவிரி தரமாறுத்தார்கள் அரசியல், இதையெல்லாம் தாண்டி ஜல்லிக்கட்டு தடை வியாபாரம். ஹிப்பாப் தமிழா பாட்டு, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸு, உண்ணாவிரத போராட்டம், எல்லாம்.

“காவிரிக்கு கூடத்தான் போராடினோம், விவசாயிகள் தற்கொலைக்கும் குரல் கொடுத்தோம்.” சாதித்து விட்டோமா… எது நமது தேவை.?. விவசாய உரிமையும் அதற்கு அரசு செய்யவேண்டிய கடமையுமா அல்லது அறுவடை செழித்து, அதை சிறப்பிக்க செய்யும் ஜல்லிக்கட்டா… ஒருவேளை விவசாயியை தவிர்த்து அவனது கலங்கிய நெஞ்சிறகு மருந்து போட ஜல்லிக்கட்டிறகு அனுமதி கிடைக்கலாம். அல்லது ஜல்லிக்கட்டுகாரர்களின் தோளோடு தோள் கோர்த்து தடையை மீறி கட்சிகள் ஜல்லிக்கட்டை நடத்தலாம். கட்சிகள் மாறலாம் ஆனால் காட்சிகள் அதேதான்.

மொன்னையான காரணங்கொண்டு ஜல்லிக்கட்டை எதிர்க்கும் கூட்டத்திற்கு சாதகமாய் எல்லாம் முடிகிறதென்றால், கேவலமான காரணங்கொண்டு அதை எதிர்க்கும் நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும் “காக்கப்பட வேண்டியது காளைகளை மட்டுமில்லை காளையர்களையும் தான்”. மக்கள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் எந்த அதிகாரம் எதிர்த்து நின்றாலும் மக்கள் அதிகாரமே வெல்லும்.

– தேவேந்திரன்