CMPC
POLITICS / அரசியல்

ஜனநாயகத்தின் அவலத்தை காட்டிக்கொடுத்த ஆர்.கே.நகர்…

பிச்சை… யார் எடுத்தது பிச்சை? ஆர்.கே.நகர் மக்களா? இல்லவே இல்லை. அரசியலின் உண்மையை அறிந்து கொண்ட மக்கள் தங்களை புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வீதி வீதியாக பிச்சை எடுத்தது அரசியல் வாதிகளே. சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தல்களால் எந்த பயனும் இல்லை என்பதை தோலுரித்து காட்டியுள்ளது ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தல். இதுவரை நடைபெற்ற தேர்தல்களால் சாமானியர்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்பதை மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். தேர்தல் மீதும், ஜனநாயகம் மீதும் மக்கள் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை வைத்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், இந்த போலி ஜனநாயகத்தில் நாம் மட்டும் ஏமாறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்பதே ஆர்.கே.நகர் மக்களின் ஆதங்கமாக உள்ளது.

 

வாக்குகளை விற்றுவிட்டதாகவும், வாக்குகளை விலை பேசி விட்டதாகவும் அரசியல் வாதிகள் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், வாக்குகள் விற்பனைக்கல்ல என்பன போன்ற தேர்தல் ஆணையத்தின் வாசகங்கள் வெறும் பதாதைகளில் மட்டுமே இடம்பெற்றிருந்ததை ஆர்.கே.நகரில் காண முடிந்தது.

 

தேர்தலில் ஒரு வேட்பாளர் 28 லட்சம் ரூபாயை தான் செலவு செய்ய வேண்டும் என்ற வரைமுறையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்தும், தொட்டதெற்கெல்லாம் காசு என்ற நிலையே ஆர்.கே.நகரில் உருவானது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் இதே முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொப்பி சின்னத்தில் வாக்களிக்க ஒரு ஓட்டுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்தனர். ஜெயலலிதா உயிரிழந்த 6 மாதத்திற்குள் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவினரின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணிய திமுக, அப்போது ஒரு வாக்குக்கு தலா 2ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட முயன்றது. சுமார் 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா நடைபெற்றதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து சபாஷ் வாங்கிய தேர்தல் ஆணையம், கண்கூடாக ஆர்.கே.நகரில் பணம் புழங்கியபோதும் அதனை கண்டுகொள்ளாமல் தேர்தலை நடத்தியது. மீண்டும் மீண்டும் தேர்தலை ரத்து செய்தால் தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் உண்டாகிவிடுமே, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை பறிபோய்விடுமே என்ற அச்சத்தில் தேர்தலை நடத்தி காட்டியது ஆணையம்.

நாள்தோறும் தொலைக்காட்சிப் பெட்டியில் சீரியலில் மூழ்கியிருந்த பெண்களின் கைகளில் கட்சி கொடிகளை கொடுத்து, நான்கு தெரு சுற்றி வந்தாலே ஒருவேளை உணவுடன் 300 ரூபாய் பணம் என்றால், உழைத்து கொட்டும் கணவன்களுக்கு உதவி செய்ய தயாராகத் தானே இருப்பார்கள் பெண் வாக்காளர்கள். பிரச்சாரம் என்றாலே ஒரு காலத்தில் ஆண்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெண்களின் தலையே அதிகமாக காணப்பட்டது. வாக்குகளை விலை பேச அரசியல் கட்சிகள் குறி வைத்தது முதலில் பெண்களை தான். வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்குப்பதிவு நாட்கள் வரை சுமார் 10 நாட்கள் வரை வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்வது போல் தயாராகவே இருந்தனர் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். அதிமுக,திமுக, செல்வாக்கு மிகுந்த சுயேட்சை வேட்பாளர் தினகரன் என முக்கிய மூன்று அணிகளும் பிரச்சார ஊர்வலத்திற்கு ஆட்களை சேர்க்க அந்தந்த பகுதியில் பெரும்பாலாக பெண்கள் குழுவினரையே உருவாக்கி இருந்தனர்.

ஒரு குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அதில் ஒருவர் அதிமுகவுக்கும், மற்றொருவர் திமுகவுக்கும், இன்னொருவர் தினகரன் அணிக்கும் என ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொருவரின் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். “எவனோ கொள்ளையடித்து கொடுக்கும் பணத்தை அக்கம் பக்கத்தினருக்கும் வாங்கி கொடுப்போம்” என்ற அடிப்படையில் சில பகுதிகளில் பெண்கள் களமிறங்கி வேலைபார்க்க, எனக்கு கொடுக்கவில்லை உனக்கு கொடுக்கவில்லை என பல பகுதிகளில் முட்டல் மோதல்களும் பஞ்சமில்லாமல் அரங்கேறின. காலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும், அக்கட்சியின் கொடியையும் கையில் ஏந்தி செல்லும் வாக்காளர்கள், மதியம் திமுகவினரின் கொடியை தோளில் போட்டுக்கொண்டும், மாலை வேளையில் குக்கரை தலையில் சுமந்துகொண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதிலும், ஒரே நேரத்தில் 3 கட்சிகளின் பிரச்சார ஊர்வலமும் தொடங்கி விட்டால், அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்தும், இரட்டை இலை நிர்வாகியை பார்த்தால் குக்கரை மறைப்பதும், குக்கர் நிர்வாகியை பார்த்தால் இரட்டை இலையை மறைப்பதும் என அவர்கள் பட்டப்பாடுகள் அதிகம். இப்படி மூன்று ஊர்வலத்திற்கும் சென்றால் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவுடன் 700 ரூபாய் முதல் சம்பாதிக்க முடிந்தது அவர்களால். பணத்திற்காக ஓடும் இந்த முதலாளித்துவ நாட்டில் குறைந்த உடல் உழைப்பில் ஊதியம் கிடைத்தால் வேண்டாம் என எண்ண வேண்டும் அதுவே, உண்மையான குடிமக்களின் கடமை என்றெல்லாம் பொது புத்தியில் யாரெனும் பேசினால் அது முட்டாள்தனம் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு வார்டிலும் கட்சிக்காரர்களின் வாக்குகள் எத்தனை என்பதை அப்பகுதி நிர்வாகிகள் மூலம் கணக்கெடுத்து, அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஆளும்கட்சியினர் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. 10 குடும்பத்திற்கு ஒரு நிர்வாகி என வாக்காளர்களை கணக்கிட்டு, அவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது அதிமுக. 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்ததால், ஜனநாயகத்தை காக்க வேண்டிய அரசு, பட்டப்பகலிலேயே வாக்காளர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயை பட்டுவாடா செய்தது. அனைத்து பகுதிகளிலும் 2 மணி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்து முடித்தது அதிமுக. ஜனநாயகத்தை காக்கவேண்டிய காவல்துறையும் தேர்தல் ஆணையமும் கண்டும் காணாமலும் பணநாயகத்திற்கு காவலாய் இருந்தனர். ஏதோ ஒரு சில இடங்களில் பணம் விநியோகித்தவர்களை திமுகவினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த சம்பவங்கள் பெரிதாக பேசப்பட்டன.
கட்சியையும், ஆட்சியையும் இழந்த சசிகலா – தினகரனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாழ்வா-சாவா என்பதை நிர்ணயிக்கும் என்பதால், தலைமையின் ஆணைக்கிணங்க களத்தில் குதுகளமாய் வேலை பார்த்தார்கள் தினகரன் ஆதரவாளர்கள். இரட்டை இலை சார்பில் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நாள்தோறும் 300 ரூபாய் தரும் குக்கர் சின்னத்தினர், ஒரு ஓட்டுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் விநியோகிக்க உள்ளதாக தொகுதி முழுவதும் வதந்தி பரவியது. பிரச்சாரமும் ஓய்ந்தது வெளி மாவட்ட நிர்வாகிகளும் வெளியேறிவிட்டனர் தினகரன் எப்போது 10 ஆயிரம் ரூபாய் தருவார் என்ற எண்ணமே தொகுதி வாக்காளர்களிடம் மேலோங்கியது. நாள்தோறும் இரவு நேரத்தில் உறக்கமின்றி பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. நாளை மறுநாள் இடைத்தேர்தல் என்ற நிலையில், இன்றிரவு முதலே திடீரென தொகுதி நிர்வாகிகள் மூலமே அனைத்து குடும்பத்திற்கும் 20 ரூபாய் நோட்டுகள் விரைவாக விநியோகிக்கப்பட்டன. வெறும் 20 ரூபாய் நோட்டு அல்ல அது. அந்த நோட்டின் சீரியல் நம்பர் தான் பணத்திற்கான உத்தரவாதமே. ஒரு குடும்பத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்களோ அவர்கள் வாக்களிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தினகரன் அணி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. 6 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்துவிட்ட நிலையில் 10 ஆயிரம் ரூபாய் கைசேர வேண்டுமானால் குக்கரையே அழுத்த வேண்டும் என வாக்குப்பதிவுக்காக காத்திருந்தனர் ஏராளமான வாக்காளர்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவரிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது ஆசையை தூண்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள தினகரன், ஆசையை தூண்டினார். கைநீட்டி வாங்கிய காசுக்காக வாக்களிக்க வேண்டும் என்று சிலர் இரட்டை இலைக்கு வாக்களிக்க, 6 ஆயிரம் பெரிதா, 10 ஆயிரம் பெரிதா என கணக்குப் போட்டு வாக்களித்தவர்கள் ஏராளம். அதிலும், 6 ஆயிரம் ரூபாயும் வாங்கிக் கொண்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கான 20 ரூபாய் டோக்கனையும் வைத்துக் கொண்டு, பணமே கொடுக்காத திமுகவுக்கு வாக்களித்தவர்களும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் ஏமாற்றுதலே, இதுபோன்ற ஏமாற்றும் வித்தையை அரசியல் கட்சிகளிடத்திலிருந்தே கற்று தேர்ந்துள்ளனர் வாக்காளர்கள்.

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என வசைபாடி வருபவர்கள் ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். யாருக்காக தேர்தல்? எதற்காக வேட்பாளர்? என்பதை இந்த தலைமுறை வாக்காளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அரசும், தேர்தல் ஆணையமும் இங்கு பொய்த்துப் போய் இருப்பதை புரிந்துகொள்வது அவசியம். அதேசமயம், கொள்ளையர்களின் கூடாரமே அரசியல், கொள்ளையடிப்பதற்காகவே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருப்பதே ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருப்பதற்கு முக்கிய காரணம். அதிலும், ஓட்டுக்கு அளித்த பணத்தை பற்றி வாக்காளர்கள் பேசிக்கொள்ளும் போது, வருங்கால வாக்காளர்களான குழந்தைகள், “என்னுடைய ஓட்டுக்கு எங்கே காசு? நான் எப்போ ஓட்டு போட்டு காசு வாங்குவது?” என்று குழந்தைத்தனமாக கேட்கும் கேள்விகள் ஜனநாயகத்தின் மீது காரி உமிழும் வகையிலேயே உள்ளது.

இப்படியே பணத்தை வைத்து வாங்கப்படும் வாக்குகளும், அதனை கண்டுகொள்ளமல் இருக்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் வரை இந்தியாவில் ஐ.சி.யு. பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜனநாயகம் பிழைப்பது கடினம் தான்.

Related posts

ராம்குமாருக்காவும் கண்ணீர் சிந்துங்கள்…

admin

விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறாது

CMPC EDITOR

“வைகோவின் அந்த பேச்சு “

admin