செய்தியாளர் இசைப்பிரியாவின் கொடூரமான கொலையை கண்டிக்கின்றோம்!

0
530

நவம்பர் 2 2013

செய்தியாளர் இசைப்பிரியாவின் கொடூரமான கொலையை கண்டிக்கின்றோம்!

 
இந்திய அரசு இனியும் சீனா, பாகிஸ்தான் என்று பூச்சாண்டி காட்டாமல், உடனடியாக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த, முன்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக வலியுறுத்துகின்றோம்!


இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரத்தை மீட்டெடுக்க, உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றோம்!


அதன் தொடக்கமாக, இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்!

 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தில், புலிகளின் ஊடகத்துறை செய்தியாளர் இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கூட்டு வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பிறகு கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஆதாரத்தை, இங்கிலாந்தைச் சேர்ந்த, சேனல்-4 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2002 இரண்டாம் ஆண்டு இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் தொடங்கிய அமைதி பேச்சுவார்த்தையின் மூலம், இலங்கையின் வடக்கு பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இலங்கை அரசே அங்கீகரித்தற்கு சமமாகும். அவ்வாறு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் வாழும் மக்கள், அந்த பகுதியில் தங்கள் அன்றாட வாழ்க்கையை அந்த அமைப்பை சார்ந்தே அமைத்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு பகுதியில், புலிகளால் நடத்தப்பட்டு வந்த காவல்துறை, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள் என பல்வேறு அமைப்புகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை செய்துவந்தனர். அவ்வாறு வேலை செய்தவர்கள் அனைவரையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதிவிட முடியாது.

தாலிபான் இயக்கம், உலக அமைதிக்கு எதிரான இயக்கம் என்று கருதி, ஆப்கானிஸ்தானுக்குள் நேட்டோ படை நுழைந்தபோதும் கூட, தாலிபான் அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளில் வேலைசெய்து வந்த பொதுமக்கள் அனைவரையும் தாலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதேபோல, இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பின்(புலிகள்) ஆளுமையின் கீழ் இருந்த பகுதியில் வாழ்ந்து வந்த இசைப்பிரியா, ஒரு செய்தியாளராக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று யோசிக்கும் போது, புலிகளின் ஊடகத்துறையை தாண்டி வேறு எந்த ஊடகமும் அந்த பகுதியில் செயல்படாத பட்சத்தில், புலிகளின் ஊடகத்தில் வேலைசெய்தது எந்த விதித்திலும் இலங்கை அரசின் அரசியல் சட்டத்திற்க புறம்பானதாக கருத முடியாது.

இவ்வாறே, புலிகளால் நடத்தப்பட்டு வந்த ஊடகப்பிரிவில், செய்தியாளராகவும், வர்ணணையாளராகவும் இசைப்பிரியா பணிபுரிந்துவந்ததுள்ளார். இச்சூழ்நிலையில், 2008 ஆம் ஆண்டின் இறுதியில் அமைதி ஒப்பந்தத்தை மீறி புலிகளும், இலங்கை ராணுவமும் போரில் குதித்தன. புலிகளின் நிலைகளை உடைத்துக் கொண்டு இலங்கை ராணுவம் வடக்கு பகுதியில் முன்னேறி வந்த நேரத்தில்தான், செய்தியாளர் இசைப்பிரியாவுக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இசைப்பிரியா, புலிகளின் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர ஊழியராக செயல்பட்டிருந்தாலும் கூட. ஆயுதம் தரித்த ஒருபோராளியாக இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டிருந்தாலும் கூட, இவ்வளவு கொடூரமாக, கூட்டு வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

போர்முனையில் ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவது சகஜம் எனக் கூறி இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அந்த சூழ்நிலையில், போரே நடைபெறாத, இலங்கையின் தலைநகரான கொழும்புவிலும் கூட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவின் படுகொலை. ஆகவே, செய்தியாளர் இசைப்பிரியாவுக்கு நேர்ந்ததை, வெறுமனே ராணுவத்தின் அத்துமீறலாக மட்டும் பார்க்க முடியாது. உண்மையை உலகுக்கு எடுத்துச் சென்ற பத்திரிக்கையாளர்களை, இலங்கை அரசு எவ்வாறு முறைவைத்து கொலை செய்ததோ, அந்த கொலைகளின் தொடர்ச்சியாகவே, இசைப்பிரியாவின் கொடூரக்கொலையை பார்க்க வேண்டும்.

அப்பாவி மக்கள், புலிகள் இயக்கத்தை சேர்ந்த போராளிகள், மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்களையும் கொன்று குவித்த இலங்கை ராணுவம், உண்மையை உலகறியச்செய்து வந்த பத்திரிக்கையாளர்களையும் விட்டுவைக்க வில்லை என்பது இசைப்பிரியாவின் படுகொலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது