செய்தியாளர்களை ஒருமையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற, பிரேமலதாவிற்கு எதிர்ப்பு உடனடியாக தங்கள் எதிரப்பை பதிவு செய்த பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள்

0
441

நேற்று முன்தினம் (06.03.19) சென்னையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பு வரை, தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இடம்பெறச் செய்ய, பாஜகவும், அதிமுகவும் முயன்றுவந்தனர். கூட்டம் தொடங்க அரை மணி நேரமே இருந்த சமயத்திலும், தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ்வுடன், விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பாகவின் தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த அதே நேரம், தேமுதிகவின் முன்னாள் பொருளாளர் இளங்கோவனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசனும் திமுக பொருளாளர் துரைமுருகனை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து தகவல் அறிந்து துரைமுருகன் வீட்டிற்கு சென்ற செய்தியாளர்களிடம் அவர்கள் இருவரும் எந்த வித விளக்கமும் அளிக்கமால் சென்றுவிட்டனர். ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே இளங்கோவனும், அனகை முருகேசனும் வந்ததாக கூறினார். இதன் மூலம், தேமுதிக, ஒரே நேரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது வெளிப்படையானது.

இந்நிலையில், தேமுதிக தலைமையகத்தில் இன்று (08.03.19) அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் தேமுதிக ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்வியை கேட்ட பத்திரிகையாளர்களை பிரேமலதா ஓருமையில் பேச ஆரம்பித்தார். ‘நீ யார்?’, ‘நீ எந்த சேனல்?’, ‘உன்னைப் பற்றி தெரியும்’ என்பது போல் வாயிக்கு வந்தபோல் பேச ஆரம்பித்தார். இதனால், கோபமடைந்த செய்தியார்கள் ஒன்றாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அவர் தனது கீழ்த்தரமான பேச்சை மாற்றிக்கொண்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதும், அதை ஒரு கட்சி, வெளிப்படுதியதும், கட்சிகளுக்கிடையில் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அரங்கேறிய அரசியல் அசிங்கம். இது குறித்து இன்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆகவே, இன்று பிரேமலதா பத்திரிகையாளர்களை மட்டும் ஒருமையில் பேசவில்லை. இந்த அரசியல் அசிங்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பி வரும் பொதுமக்களையும் சேர்த்தே அவர் கேவலமாக பேசியுள்ளார். தமிழக அரசியலின், ஆளுமை மிக்க தலைவர்களிடமிருந்து, பத்திரிகையாளர்களையும், பத்திரிகை சுதந்திரத்தையும் எப்படி மதித்து நடப்பது என்பதை பிரேமலதா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய பிரேமலதாவை கண்டிக்கும் அதேவேளையில், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில், அந்த இடத்திலேயே பிரேமலதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.