செய்தியாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தியுள்ள கேப்டன் டிவி நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. 8 மணி நேர வேலை நேரத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது

0
484

முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க, தொழிலாளர்களை 16 மணி நேரம் வரை வேலை வாங்கிய ஒரு காலம் இருந்தது. அந்த கொடுமையை எதிர்த்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து “8 மணி நேர வேலை” என்ற கோரிக்கையை முன் வைத்து உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். இதில் பல தொழிலாளர்கள் உயிர்த் தியாகமும் செய்தனர். உரிமைக்காக நடத்தப்பட்ட இந்த போராட்டங்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்றளவும் “மே தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் செய்த போராட்டங்களின் பலனாய் இன்று உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை என்பது சட்டப்பூர்வமாக நடைமுறை உள்ளது. அதை மீறி கூடுதல் நேரம் வேலை செய்ய தொழிலாளர்களின் விருப்பம் இன்றி யாரும் நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு விருப்பப்பட்டு கூடுதல் நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு கூலி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஆனால், இந்த சட்டங்கள் எதையும் மதிக்காத கேப்டன் டிவி நிர்வாகம், அங்கு பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. கேப்டன் டிவியின் ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ள நிர்வாகம், சில வாரங்களில் பழையபடி 8 மணி நேர வேலை நடைமுறைக்கு வந்து விடும் என்று கூறியுள்ளது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் இது நடைமுறைக்கு வரவில்லை. கூடுதலாக பணியாற்றும் அந்த 2 மணி நேரத்திற்கு உரிய சம்பளத்தையும் நிர்வாகம் வழங்குவதில்லை.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ தொலைகாட்சி கேப்டன் டிவி என்பதை அனைவரும் அறிவோம். தேமுதிகவின் துணை செயலாளரான திரு.சுதீஷ், கேப்டன் டிவியின் மேலாண் இயக்குனராக பொறுப்பு வகிக்கிறார். இந்திய அரயலமைப்பையும், சட்டங்களையும் பின்பற்றி நடப்போம் என்று உறுதி மொழியேற்று பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் துணை செயலாளராக இருந்து கொண்டு, தான் தலைமை பொறுப்பு வகிக்கும் கேப்டன் டிவில் அப்பட்டமாக சட்டமீறல் நடப்பதை திரு.சுதீஷ் அனுமதித்துள்ளார். ஒருபுறம் கட்சிக்கென்று தொழிற்சங்கங்களை நடத்திக் கொண்டு மறுபுறம் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, கேப்டன் டிவி நிர்வாகத்தின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவிலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

கேப்டன் டி.வியில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 மணி நேர வேலை நேர உத்தரவை, நிர்வாகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் கூடுதலாக பணியாற்றிய 2 மணி நேரத்திற்கான சம்பளத்தை கேப்டன் டிவி நிர்வாகம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

கேப்டன் டிவியின் இந்த அப்பட்டமான சட்டமீறல் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.