சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பின்னனியும், உத்தரவின் தமிழாக்கமும்.

0
985

கடந்த 17 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் சட்டத்திற்கு புறம்பாக, ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி, பத்திரிகையாளர் மோகன் தொடர்ந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, “சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம்”, தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சட்டத்திற்கு புறம்பாக பத்திரிகையாளர் மன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தேர்தலை நடத்தாமல், அந்த உத்தரவிற்கு எதிராக தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழ் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. அதாவது, தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு ஒருபுறம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நியாயமாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக பத்திரிகையாளர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைச்சேர்க்கை மனு தாக்கல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பத்திரிகையாளர் சுப்பையாவும் மனுதாக்கல் செய்தார். இதற்கிடையில், பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்தை வென்றெடுப்பதற்காக “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக சமர்பிக்கப்படாத பத்திரிகையாளர் மன்றத்தின் ஆண்டறிக்கை, அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு, அதுவரை ஆண்டுகணக்கில் கூட்டப்படாத பொதுக்குழு கூட்டப்பட்டு, அதில் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் அந்த பொதுக்குழுவில், புதிய உறுப்பினர்களை சேர்த்து நியாயமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

பத்திரிகையாளர் மன்றத்தை சட்டத்திற்குப் புறம்பாக தங்கள் கட்டப்பாட்டில் வைத்திருப்பவர்கள், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல், உறுப்பினராக சேர்வதற்கு பத்திரிகையாளர்களால் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 80 சதவீதத்தை நிராகரித்து விட்டு, இறுதி வாக்காளர் பட்டியலைக் கூட வெளியிடாமல், தங்களுக்கு சாதகமான ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, அவசர அவசரமாக தேர்தலை நடத்தி முடிக்க முயன்றனர். நூற்றுக்கணக்கான உண்மையான பத்திரிகையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டு, தேர்தலை நடத்தி, மீண்டும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்று சட்டத்திற்கு புறம்பாக பத்திரிகையாளர் மன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் நினைத்திருந்தபோது, அந்த போலி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து, பத்திரிகையாளர் செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்த போலி தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தது.

இவ்வாறாக, 1) பத்திரிகையாளர் மோகன் தொடர்ந்த வழக்கில் சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பத்திரிகையாளர் மன்றத்தை சட்டத்திற்கு புறம்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 2) ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து, பத்திரிகையாளர் மன்ற தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கோரி மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக, பத்திரிகையாளர் மணிகண்டன் தாக்கல் செய்த இடைசேர்க்கை மனு 3) இதே கோரிக்கையை வலியுறுத்தி பத்திரிகையாளர் சுப்பை தொடர்ந்த இடைசேர்க்கை மனு 4) இறுதியாக, போலியாக நடைபெறவிருந்த தேர்தலுக்கு தடை கோரிய பத்திரிகையாளர் செல்வாராஜ் தாக்கல் செய்த மனு ஆகிய நான்கு மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள், கடந்த 30.08.16 (திங்கட்கிழமை) அன்று மிக்சிறந்த ஒரு தீர்ப்பை வழங்கினார்.

அந்த 20 பக்க தீர்ப்பில், “செயல்படுத்தக்கூடிய பகுதியின்” (Operative portion) சுருக்கமான தமிழாக்கம் இது:

 • சிட்டி சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படி செல்லுபடியாகும்.
 • ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகின்றார்.
 • தேர்தல் நடத்துவதில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கருத்தில் கொண்டு, நீதிபதி சந்துரு அவர்களுக்கு உதவியாக, வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் அவர்கள் நியமிக்கப்படுகின்றார்.
 • 03.2011 க்கு (சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள்) பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்கள் அனைவரின் விண்ணப்பங்களையும், தேர்தல் அதிகாரி மறு ஆய்வு செய்து, அவர்கள் உறுப்பினர்களாக நீடிக்க தகுதியானவர்களா என்பதை முடிவு செய்வார்.
 • அதேபோல், 07.03.2011 க்கு பிறகு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும், தேர்தல் அதிகாரி மறு ஆய்வு செய்வார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் விதிகளின் படி தகுதியானவர்கள், உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
 • தேர்தல் அதிகாரியால் இறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே, வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.
 • 03.2011 தொடங்கி 19.08.16 வரையிலான காலத்தில், நிராகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும், தேர்தல் அதிகாரி மறு ஆய்வு செய்வார்.
 • மறு ஆய்வு செய்தபின், இறுதி உறுப்பினர் பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிடுவார்.
 • இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக, நியாயமான வழிமுறைகளை தேர்ந்தெடுத்துகொள்வதற்கு, தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. இந்த தீர்ப்பு கிடைத்த நாளிலிருந்து 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
 • 03.2011 பிறகு உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்களில் யாரேனும் மறு ஆய்வுக்குப் பின் நீக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அந்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
 • தேர்தல் அதிகாரி நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தினசரி நடவடிக்கைகளை தற்போது நிர்வகித்து வருபவர்கள் தொடரலாம் என்று அனுமதி வழங்கப்படுகின்றது.
 • இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற இரண்டு வாரத்திற்குள், சென்னை பத்திரிகையாளர் மன்றம், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு முதற்கட்ட சம்பளமாக 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாம் கட்டமாக 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞருக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 • மேற்கூறிய உத்தரவுகளுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகின்றது.