சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு சார்பாக இன்று (20.03.2016) நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னணியும், எடுக்கப்பட்ட முடிவுகளும்.

0
629

கடந்த 16 ஆண்டுகளாக, தேர்தல் நடத்தப்படாமல், ஒரு சில தனி நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு, நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நேர்மையான பத்திரிகையாளர்கள் என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, தீக்கதிர் குமரசேன் ஆகியோரை உள்ளடக்கிய “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு” என்ற குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் இவர்களை தவிர பல்வேறு ஊடகங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, பல இளம் பத்திரிகையாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்து, பல ஆண்டுளாக கூட்டப்படாத பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம், 04.10.2015 அன்று, கூட்டப்பட்டது. புதிய உறுப்பினர்களை சேர்த்து, தேர்தலை நேர்மையாக நடத்தி முடிப்போம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பணியை செய்வதற்காக, மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு உள்பட நான்கு பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர், பொதுக்குழு முடிவின் படி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. 5.10.15 தொடங்கி, 5.11.15 வரை, ஒரு மாதம் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில், சுமார் 1500 புதிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, சுமார் நான்கு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு, கடந்த 24.02.2016 அன்று, புதிய உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புதிதாக விண்ணப்பித்தவர்களின், ஐந்தில் நான்கு பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதாவது, சுமார் 1500 விண்ணப்பங்களில் 328 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களிடம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரியான விளக்கத்தை கொடுக்க தயாராக இல்லை. இதன் மூலம், விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டதுடன், முறைகேடாக பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் அம்பலமானது. இதுதொடர்பாக, பொதுக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நால்வர் குழுவிடம் முறையிட்டபோது, விண்ணப்பங்கள் பரிசீலினை செய்ததில் தாங்கள் எந்தவித வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என்று கூறிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் (06.03.2016) அன்று கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, நேர்மையாக தேர்தலை நடத்த, போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டும், அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டது. அத்துடன், இனியும் அவர்கள் நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என்று நம்புவதற்கில்லை என்று பலரும் கருத்து கூறினர். அதனைத்தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுவை கூட்டுவதற்கு “சென்னை பத்தரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு” நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவின் படி, தேர்தல் நடவடிக்கை குழுவை சேர்ந்தவர்கள், பல்வேறு ஊடகங்களுக்கு நேரடியாக சென்று, பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து, நிலைமையை விளக்கி, பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஒப்புதல் கையெழுத்தை பெற்றது. அந்த வகையில், மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கோரி கையொப்பமிட்ட பட்டியலையும், தேர்தல் நடவடிக்கை குழு தயார் செய்தது. அதன் பின்னரே, சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உண்மையான பத்திரிகையாளர்களையும் அழைத்து, 20.03.2016 அன்று, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்யை தினம், (20.03.2016) சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழுவின் கூட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, தீக்கதிர் குமரேசன், ஆனந்த விகடன் பத்திரிகையை சேர்ந்த பாரதி தம்பி, தி இந்து பத்திரிகையை சேர்ந்த சுரேஷ் குமார் உட்பட பல முன்னனி பத்திரிகையாளர்களுடன், பல இளம் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அனைத்து பத்திரிகையாளர்களும், தற்போது தங்களை நிர்வாகிகளாக அழைத்துக்கொள்பவர்களுக்கு, ஜனநாயகப்பூர்வமாக, போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டும், நேர்மையாக தேர்தலை நடத்த அவர்கள் தயாராக இல்லை என்பதை சுட்டிக்காட்டினர். மேலும் பொதுக்குழுவின் முடிவையும் அவர்கள் செயல்படுத்த தயாராக இல்லாததையும் சுட்டிக்காட்டிப் பேசினர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க இனி அவர்களை நம்பி பயனில்லை என்பதையும் அனைத்து பத்திரிகையாளர்களும் சுட்டிக்காட்டினர். நால்வர் குழுவின் பிரதிநிதியான பாலு பேசும்போது, புதிய உறுப்பினர் படிவங்களை சரிபார்க்கும் நடவடிக்கையில், நால்வர் குழு கலந்துகொள்ளவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். அத்துடன், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை தெரிவிக்கும்படி நால்வர் குழு வலியுறுத்தியதாகவும், இருந்தபோதும் தங்களை நிர்வாகிகளாக கூறிக்கொள்பவர்கள் அதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
கூட்டத்தின் இறுதியில், அனைத்து ஊடகங்களையும் சேர்ந்த, பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி ஒரு உத்தேச குழு உருவாக்கப்பட்டது. இந்தக்குழு, ஏற்கனவே வழங்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து, இறுதி பட்டியலை தயார் செய்தபின், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.