சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நடவடிக்கை நியாயம்தானா?

0
768

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நடவடிக்கை நியாயம்தானா?

கடந்த 16 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படாதது அனைவரும் அறிந்த விஷயம். மன்றத்தின் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை நீதிமன்றத்தில் சில பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வழக்கில், தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேர்தலை நடத்தாமல் அந்த தீர்ப்பிற்கு பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என கூறிக்கொள்பவர்கள் தடை பெற்றுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து நடத்திய கூட்டத்தில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, குமரேசன் உட்பட 19 பேர் அடங்கிய “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு” உருவாக்கப்பட்டது. இந்த குழுவிற்கு பத்திகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்ளால் அதிகாரம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அந்த குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் எனக் கூறிக்கொள்பவர்களை சந்தித்து, மன்றத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, பல ஆண்டுகளாக கூட்டப்படாத, பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு, 04.10.2015 அன்று கூட்டப்பட்டது. அந்த பொதுக்குவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 5.10.15 தொடங்கி, 5.11.15 வரை (ஒரு மாதம்) நடை பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உதவவும், தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மூத்த பத்திரிகையாளர்கள் திரு.மயிலை பாலு, திரு.நூருல்லா, திரு.பொன்தனசேகரன், திரு.துரை ஆகிய நால்வர் அடங்கிய குழுவை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

பொதுக்குழுவின் முடிவின் படி, உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒரு மாதத்திற்கு பெறப்பட்டன. எமக்கு கிடைத்த தகவலின் படி, சுமார் 1500 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் முடிந்து சுமார் நான்கு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு, 24.02.2016 அன்று, புதிய உறுப்பினர்களின் பட்டியலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பித்த, சுமார் 1500 பேரில், 328 விண்ணப்பதாரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர தகுதியுள்ளவர்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உறுப்பினராக சேர விண்ணப்பித்த பத்திரிகையாளர்களில், சுமார் ஐந்தில் நான்கு பேரின் விண்ணப்பங்கள் தகுதியற்றவை என்று கூறி நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைவராலும் அறியப்பட்ட, முழு நேர பத்திரிகையாளர்கள் பலரின் விண்ணப்பமும் இதில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு, அவை திருத்திக்கொள்ளக்கூடிய தவறுகளாக இருக்கும் பட்சத்தில், திருத்தப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அவற்றை மறுபரிசீலினை செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த நடைமுறை. ஆனால், தற்போது அப்படிப்பட்ட கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விண்ணப்பத்தில் ஐந்தில் நான்கு பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழச்செய்யும் சூழ்நிலையில், பிழை நீக்கம், திருத்தம் செய்துகொள்வதற்கும், மறு விண்ணப்பத்திற்கும் உரிய கால அவகாசம் வழங்காமல் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதும் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகவே எண்ணத்தோன்றுகின்றது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணை கட்டிக்காப்பாற்றும் மிக முக்கிய பொறுப்பை வகிக்கும் உண்மையான, நேர்மையான பத்திரிகையாளர்கள் எவரும், தங்களின் அமைப்பு நடவடிக்கையில் இதுபோன்ற ஜனநாயகமற்ற போக்கை, எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தவகையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் மேற்கொண்டுள்ள சந்தேகத்திற்குரிய, அவசரகதியான முடிவை திரும்பப்பெற்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான காரணத்தை தெரிவித்து, அவர்கள் மறு விண்ணப்பம் செய்வதற்கு உரிய கால அவகாசரத்தை வழங்கி, அந்த மறுவிண்ணப்பத்தை பரிசீலித்த பிறகே, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது. இதுவே, சரியான ஜனநாயகபூர்வமான நடவடிக்கை என்பதையும் இந்த இடத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.