சென்னை நிருபர்கள் சங்கத்தின் தேர்தலை நியாயமாக நடத்தி முடிப்போம்! ஜனநாயத்தை காப்போம்!

0
475

வணக்கம்,

63 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட சென்னை நிருபர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றதாகவும், போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஒரு சுற்றறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் குறிப்பிட்டதுபோல் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதையும், இதில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதற்கு தேர்தல் நடத்துவதற்கு முன்னர், புதிய உறுப்பினர்களை சேர்த்து, வரைவு உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு, சேர்க்கை, நீக்கம் போன்ற திருத்தங்களை செய்து, உறுப்பினர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்ட பிறகே, தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும், பொதுக்குழுவை கூட்டி, அமைப்பின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து பொதுக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும்.

தேர்தல் நடைபெறுவதை வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட விருப்பப்படுபவர்கள் எளிதாக வேட்பு மனுவை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக அனைத்து தரப்பினரின் நன் மதிப்பை பெற்ற நடுநிலையாளரை நியமிக்க வேண்டும். ஆனால், சென்னை நிருபர்கள் சங்கத்திற்கு நடத்தப்பட்டதாக கூறப்படும் தேர்தலில் மேற்கண்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுகுறித்து, அதன் தலைவராக தொடர்ந்து பல ஆண்டுகள் செயல்பட்டு வரும் திரு.ரங்கராஜன் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது, தேர்தல் நடத்தப்படுவது குறித்து அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றார். குறைந்தபட்சம், சங்கத்தின் உறுப்பினர்களுக்காவது தேர்தல் குறித்து தெரிவிக்கப்பட்டதா என்று பார்த்தால், அதுவும் தெரிவிக்கப்படவில்லை. பல உறுப்பினர்கள் அவ்வாறு தேர்தல் நடந்ததா என்பதை ஆச்சர்யத்துடன் கேட்கின்றனர். ஆகவே, ஒரு சில நபர்கள், சென்னை நிருபர்கள் சங்கத்தை, விதிமுறைகளுக்கு புறம்பாக, தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட நாடகமாகவே இந்த தேர்தலை பார்க்க தோன்றுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றும் எஸ்.ஆர். ரகுநாதனிடம் பேசியபோது, திரு.ரங்கராஜன் அவர்கள் தன்னிடம் எதைப் பற்றியும் தெரிவிக்காமல், இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டதாக கூறுகின்றார். அத்துடன், அவரே நேரடியாக வந்து ஒரு படிவத்தில் ரகுநாதனிடம் கையெழுத்தை பெற்றதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் நடந்தது குறித்து அறிக்கை வெளியான பிறகே அவர் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு தெரியவந்ததாகவும் கூறுகிறார்.

இதேபோல், கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரிடம் தொலைபேசியில் பேசியபோது, தான் உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், சங்கத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், ஆகவே, சங்கம் சார்ந்த விஷயத்திற்கு தன்னை தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் கூறுகிறார்.

நியூஸ் டுடே பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றும் திரு.பரத்குமார் அவர்கள் இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் பேசியபோது, எஸ்.ஆர்.ரகுநாதன் கூறிய அதே விஷயத்தை தெரிவிக்கிறார். அதாவது, திரு.ரங்கராஜன் நீட்டிய படிவத்தில் திரு.பரத்குமார் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார். அதற்குப் பிறகே அவர் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. நியூஸ் டுடே பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றும் மரியன் ஜோசப் அலெக்சாண்டரிடமும், திரு.ரங்கராஜன் இவ்வாறே கையெழுத்தைப் பெற்று அவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளார். ஆகவே, நேர்மையாக தேர்தல் நடத்தினால் இதுநாள் வரை சென்னை நிருபர் சங்கத்தில் தான் வகித்து வந்த பதவி பறிபோய்விடும் என்பதை அறிந்த திரு.ரங்கராஜன் அவர்கள், இதுபோல் போலியாக தேர்தல் நடந்ததாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

சங்கத்தின் கட்டடத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதற்கு உரிய கணக்கு சமர்ப்பிக்கப்படுவதில்லை. திரு.ரங்கராஜனுக்கு நெருக்கமானவர்கள் தவிர்த்து, தினந்தோறும் களத்திற்கு சென்று செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் கூட சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. உறுப்பினராக சேர விரும்பி திரு.ரங்கராஜன் அவர்களை அணுகினால், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில்லை என்று நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளதாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பதிலை அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

திரு.ரங்கராஜன் அவர்களின் இந்த நடவடிக்கையை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதற்காகவே, எதிர்கேள்வி கேட்காமல், தங்கள் பேச்சை கேட்கும் சில அப்பாவிகளை பல்வேறு பொறுப்புகளுக்கு அவரே நியமித்துள்ளார் என்பது புலப்படுகிறது. இதற்காக போலியாக ஒரு தேர்தல் நடத்தப்பட்டதாக அவர் அனைவரையும் நம்பவைத்துள்ளார். இதற்கு சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.சேகர் அவர்களும் உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத்துறை அழைக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய துறையிலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த போலித் தேர்தல் குறித்த நம்முடைய மௌனம், இதற்கு நம்மையும் உடந்தையாக்குகின்றது. செய்தியாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சென்னை நிருபர்கள் சங்கத்தை, அதன் உண்மையான நோக்கத்திற்காக செயல்பட வைக்க வேண்டியது, நேர்மையான ஒவ்வொரு பத்திரிகையாளர்களின் கடமையாகும். மிகக் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு நாள் முழுவதும் ஓடி உழைக்கும் செய்தியாளர்களின் நலனை பாதுகாப்பதற்கான சங்கமாக சென்னை நிருபர்கள் சங்கத்தை மாற்ற வேண்டியது நமது கடமை.

ஆகவே, தற்போது நடைபெற்ற போலித் தேர்தலை ரத்து செய்துவிட்டு, உடனடியாக சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டி, ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க செய்ய வேண்டும். பிறகு, நேர்மையான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றி, பாரம்பரியம் மிக்க சென்னை நிருபர்கள் சங்கத்தை, தனிநபர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அனைத்து செய்தியாளர்களின் சங்கமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைவோம்.