சன் நியூஸ் செய்தியாளர் செல்வா மற்றும் ஒளிப்பதிவாளர் வேலுவை திருவண்ணாமலை காவல்துறையினர் பணிசெய்ய விடாமல் தடுத்ததை, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் அத்துமீறலை அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

0
681

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கடந்த செவ்வாய் கிழமை (26.06.18) திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கட்சி, அலுலவகத்திலிருந்து கறுப்புக்கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை செய்தி சேகரிக்கச் சென்ற மாத்ருபூமி தொலைக்காட்சியின் செய்தியாளர் அனுப்தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையினரால் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டு, திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்திற்கு சட்டத்திற்குப் புறம்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் பிறகு, விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கண்டித்து, நேற்றைய தினம் (28.06.18) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒன்று கூடிய பத்திரிகையாளர்கள் டிஜிபி அலுவலகம் சென்று இதுகுறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் (29.06.18) திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், சென்னை – சேலம் 8 வழிச் சாலை அமைக்கும் பணிக்கு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற சன் நியூஸ் செய்தியாளர் செல்வா மற்றும் ஒளிப்பதிவாளர் வேலுவை பணி செய்ய விடாமல், டிஎஸ்பி சின்ராஜ் தடுத்துள்ளார். செய்தியாளர் செல்வாவின் கையில் இருந்த மைக்கையும் அவர் பிடுங்க முயற்சி செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இவை அனைத்தும் நேரலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்தும் கூட, காவல்துறையினர் இந்த அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை – சேலம் 8 வழி சாலைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து டிஜிபியிடம் பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் கொடுத்த பின்பும் இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பது, உண்மையில் காவல்துறையினருக்கு யார் உத்தரவு பிறப்பிப்பது என்ற சந்தேககத்தை எழுப்பியுள்ளது. அல்லது பத்திரிகையாளர்கள் அளித்த புகாரை டிஜிபி மதிக்கவில்லையோ என்றும் எண்ணத் தோன்றகிறது.

பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது, இந்திய அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு சமமாகும். ஆனால், சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதை பத்திரிகையாளர்கள் இனியும் பொறுக்க முடியாது.

சன் நியூஸ் செய்தியாளர் செல்வா மற்றும் ஒளிப்பதிவாளர் வேலுவை பணி செய்ய விடாமல் தடுத்த டிஎஸ்பி சின்ராஜ் மீது உடனடியாக வழக்கு பதிவுசெய்ய தமிக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

டிஎஸ்பி சின்ராஜ் மீது தமிழக டிஜிபி உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவிலயாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பணி செய்யவிடாமல் தடுக்கப்படும் நிகழ்வு தொடர்கதையாகிவரும் நிலையில், இதுகுறித்து அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.