CMPC
STATEMENTS / அறிக்கைகள்

சக பத்திரிகையாளருக்காக குரல் கொடுத்த தோழமைகளுக்கு சல்யூட்! தவறுக்கு வருந்துகிறோம் ஜிக்னேஷ்!

சென்னை காயிதே மில்லத் ஊடக கல்வி நிறுவனத்தில் இன்று (16.01.18) காலை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், குஜராத் மாநிலம் வட்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டார். இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தியாளர் இருந்தால் நான் பேட்டியளிக்க மாட்டேன் என்று அவர் கூறியவுடன், அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவரும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு ஆதரவாக அந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்.

பத்திரிகையாளர் ஒருவரை அவமதிக்கும் வகையில் ஜிக்னேஷ் நடந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த சந்திப்பை புறக்கணித்தது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், இந்த நிகழ்வு ஊடகங்களிலும், சமூக வளைதளங்களிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜினேஷ் செய்தது சரி என்று ஒரு தரப்பினரும் (சில செய்தியாளர்கள் உட்பட) செய்தியாளர்கள் செய்தது சரி (பெரும்பாலும் வலதுசாரிகள்) என்று மறுதரப்பினரும், மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் எது சரி, எது தவறு என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னர் ஜிக்னேஷ் அவ்வாறு நடந்துகொண்டதன் பின்னணியை தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், மிக முக்கியமாக இது சரி, இது தவறு என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னர் எவற்றையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலம் உனா என்ற கிராமத்தில் இறந்த மாட்டின் தோலை உறித்த நான்கு தலித்துகள், மாட்டை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு “பசு பாதுகாவலர்களால்” நடுத்தெருவில் மாட்டை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச்செல்லப்பட்டனர். இந்த கொடுமையை எதிர்த்து கிளர்ந்தெழுந்த தலித் மக்களுக்கு தலைமை தாங்கியவர் ஜிக்னேஷ் மேவானி. அதன் தொடர்ச்சியாக தலித்துகள் மட்டுமின்றி ஜனநாயக விரும்பிகள் அனைவரும் ஜிக்னேஷ்க்கு ஆதரவளித்ததன் விளைவாக, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

ஜிக்னேஷ் வெற்றி பெற்ற பிறகு, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தியாளர் பிரியங்கா ஷர்மா அவருடன் நடத்திய 8 நிமிட உரையாடலை நாம் பார்க்கும்போது, அந்த தொலைக்காட்சி ஜிக்னேஷ் மீது எவ்வளவு வன்மமாக உள்ளது என்பதை எளிதாக புரிந்துகொள்ளலாம். அந்த உரையாடலில், எந்த ஒரு இடத்திலும் பிரியங்கா ஒரு செய்தியாளரைப்போல் நடந்துகொள்ளவில்லை என்பது பார்ப்பவர்களுக்கு விளங்கும். இது ஒன்று மட்டுமல்ல. இதுபோன்று பல சந்தர்ப்பங்களில், ரிபப்ளிக் தொலைக்காட்சியிடம் பல கசப்பான அனுபவங்களை ஜிக்னேஷ் பெற்றுள்ளார்.

ஆகவே, இந்த பின்னணியில் பார்க்கப்போனால், இன்று அவர் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தியாளரை வெளியேறச் சொன்னது நியாயம் என்றே தோன்றும். ஆமாம். ஜிக்னேஷ் செய்தது நியாயம்தான்.

ஆனால், செய்தியாளர்கள் தரப்பிலிருந்து பார்க்கப் போனால்?

ஐந்து செய்தியாளர்கள் காத்திருக்கிறார்கள். ஜிக்னேஷ் வருகிறார். பேச ஆரம்பிக்கும் முன், உங்கள் நான்கு பேரிடம் மட்டுமே பேசுவேன், அவரை வெளியேற்றுங்கள் என்று ஒரு செய்தியாளரை காட்டி கூறும்போது, அந்த நான்கு பேரும் அந்த குறிப்பிட்ட செய்தியாளரை வெறியேற்றிவிட்டு ஜிக்னேஷ் பேசுவதை பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது அவ்வாறு நடந்திருந்தால் அந்த நான்குபேரும் தங்களின் சக செய்தியாளரை கைவிட்டதுபோல் ஆகாதா? அது நமது ஒற்றுமைக்கு எதிரானதல்லவா? கேவலம் நமது வேலைக்காக நம்மை நாமே காட்டிக்கொடுத்துக் கொள்வதுபோல் ஆகாதா? ஆம். அப்படியென்றால் செய்தியாளர்கள் செய்ததும் சரியே.

செய்தியாளர்கள் செய்தது சரி என்றால், ஜிக்னேஷிடம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?
இதை புரிந்தகொள்வதற்கு முன்னர், நாம் முன்னரே கூறியதுபடி, இது சரி, இது தவறு என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னர் எவற்றையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதையும், “சரி, தவறு” என்பது எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பொது நியாயத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்று பேசும் நாம், அனைவருக்கும் சமமான மூளை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம், ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு என்று சொல்லும் நாம், சாதி மற்றும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நியாயத்தை ஏற்றுக்கொள்கிறோம். இங்கு பொது நியாயத்தின்படி பார்த்தால், இடஒதுக்கீடு தவறு. ஆனால், பொது நியாயத்தை விலக்கி வைத்துவிட்டு, இந்திய சமூகத்தை பின்னோக்கி பார்த்து, ஒவ்வொரு சாதி மற்றும் மதத்தினரும் எவ்வாறு வாழ்ந்துள்ளனர், அவர்களுடைய தற்போதைய நிலை என்ன என்பவற்றை அறிவியல் பூர்வமாக புரிந்துகொள்பவர்கள் யாரும் இடஒதுக்கீடு தவறு என்று கூறமாட்டார்கள்.

ஆகவே, அனைத்தும் சமமாக உள்ள ஒரு சமூகத்தில் மட்டுமே சரி, தவறு என்பதை பொது நியாயத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியும். இந்தியா போன்ற, வர்க்க, சாதி, மத, இன மற்றும் பாலின ஏற்றத் தாழ்வுகள் புரையோடிப்போயுள்ள சமூகத்தில் சரி, தவறு என்பது இடத்திற்கு இடம் நிச்சயம் மாறுபட்டேயாகும். ஏனென்றால், இங்கு பொது நியாயம் என்ற ஒன்றை நம்மால் அடையாளம் காண முடியாது. இங்கு எல்லாமுமே ஏற்றத்தாழ்வாக, ஒருதலைபட்சமாக உள்ளது. அந்தவகையில், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுவரும் ஒரு சாதியின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒரு நபரையும், அந்த கொடூரமான சாதியை நீடிக்கச் செய்யும் மனு தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு நபரையும் ஒரே தட்டில் வைத்து அளப்பது சரியா? இந்த இருவர் செய்யும் தவறுகளையும் ஒரே அளவுகோலில் அளப்பது சரியா? இந்த இருவர் செய்யும் தவறுகளுக்கும் பொது நியாயத்தின் அடிப்படையில் ஒரே தண்டனையை வழங்குவது சரியா?

ஆகவே, ஜிக்னேஷ் செய்தது சரியா? அல்லது செய்தியாளர்கள் செய்தது சரியா? என்ற கேள்விக்கு, மேற்கூறியவற்றை கருத்தில் எடுத்துகொண்டு ஆராய்ந்து பதிலளிப்பதே சரியானதாக இருக்கும்.

அந்த வகையில், தமது உரிமைக்காக குரல் கொடுத்த செய்தியாளர்களுடன் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தோளோடு தோள் நிற்கிறது.

அத்துடன், இன்று நடந்த நிகழ்வினால், ஜிக்னேஷ் மேவானிக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வருந்துகிறது.

Related posts

பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது! தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகின்றது!

admin

தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், (TMCA) தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், மனப்பூர்வமான வாழ்த்துகளை தெறிவித்துகொள்கின்றது!

admin

சென்னை நிருபர்கள் சங்கத்தின் தேர்தலை நியாயமாக நடத்தி முடிப்போம்! ஜனநாயத்தை காப்போம்!

CMPC EDITOR