கோலிவுட் ரஞ்சித்தை பின் தொடருமா/வெளியேற்றுமா?

0
576

கபாலி – கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் உச்சரிக்கும் சொல். தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளை மட்டுமின்றி, ஊடகங்கள், சமூக வலைதளங்களையும் பெருமளவில் ஆக்கிரமித்திருக்கும் படம். வெளியாவதற்கு முன்பு ரஜினிகாந்த்தின் படமாக பார்க்கப்பட்ட கபாலி, தற்போது ரஞ்சித் என்ற இயக்குனரின் படமாக மாறியிருக்கிறது. ரஞ்சித்: வழக்கமான கிளிஷேக்களில் சிக்கி தவிக்கும் தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான விதையை விதைத்திருக்கிறார். அட்டை கத்தி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து 3வது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு அவரது உழைப்பிற்கான பரிசா, அதிர்ஷ்டமா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. கிடைத்த இந்த வாய்ப்பை ரஜினிகாந்த் என்ற பிரமாண்டத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தான் சொல்ல விரும்பும் கருத்தினை சொல்லிய ரஞ்சித்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த நான் தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுப்பேன், அதற்கான ஆயுதம் தான் சினிமா என்ற கலை என அவர் கூறியிருப்பது பாரட்டுதலுக்குரியது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள கலைஞனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல் கூட இந்த அளவிற்கு பொது தளத்தில் அரசியல் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. மற்றவைகளுக்காக போராடும் திரைத்துறையினர் அரசியல் தொடர்புடைய மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தியுள்ளனர்? இந்த நிலையில் ரஞ்சித் போன்ற ஒரு கலைஞனை ஆதரிக்க வேண்டியது அனைவரின் கடமை. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை இந்தக் கலையை பயன்படுத்துவேன் என கூறுகிறார் ரஞ்சித். ஆனால் அரசியல், சாதியால் பிணைக்கப்பட்டுள்ள இந்த சமூகம் எந்த அளவிற்கு அதற்கு இடம் கொடுக்க போகிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு படம் வெளியான பிறகு அது வெற்றியா, தோல்வியா என்பது குறித்து தான் விவாதிக்கப்படும். ஆனால் முதல் முறையாக தற்போது தான் தலித் சினிமா வா, இல்லையா என்று விவாதிக்கப்படுகிறது. உயர்ந்த சாதிகளை தூக்கிப்பிடித்து படம் எடுத்த போது பொங்காதவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை குறித்த ஒரு படம் வெளியான போதும் மட்டும் பொங்குவதற்கு காரணம் என்ன? பறையடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர் ரஜினையை வைத்து படம் எடுத்தார் என்பதற்காகவா?? தாழ்த்தப்பட்ட சமூகத்தில் அல்லாமல் உயர்ந்த சமூகத்தில் அம்பேத்கர்கள் பிறந்தால் தான் சாதி பாகுபாடுகள் ஒழியும் என ரஞ்சித் சொல்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ரஞ்சித் போன்ற கலைஞர்கள் கலையை ஆயுதமாக பயன்படுத்த முயற்சித்தால் மட்டும் அவர் நினைக்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு கலைஞனும் ரஞ்சித் மாதிரி அடித்தள மக்களுக்காக சிந்திக்க வேண்டும்….

– மதியழகன்