கொரோனா பெருந்தொற்று குறித்த விழப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சிரம் தாழ்த்தி வீரவணக்கம் செய்கின்றோம்! உயிரிழந்த பத்திரிகையாளருக்கு முன்களப் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

0
522

ராஜ் தொலைகாட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த வேல்முருகன் கொரோனா குறித்த செய்திகளை சேகரிக்க தினந்தோறும் களத்திற்கு சென்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (27.06.2020) வேல்முருகன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்போடு பழகக்கூடியவர் வேல்முருகன். இன்று காட்சி ஊடகத்தில் முன்னணியில் உள்ள பல பத்திரிகையாளர்கள், இந்த துறைக்கு புதிதாக வந்தபோது அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக வேல்முருகன் இருந்துள்ளார். அந்தவகையில், வேல்முருகனின் இழப்பு ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் அதுகுறித்த செய்திகளையும், கொரோனாவாலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல்களையும், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அவ்வப்போது அரசு நடைமுறைப்படுத்தும் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்திகள் மக்களை சென்றடைவதால்தான் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பெறுவதுடன், அரசின் வேண்டுகோள்களின்படி மக்கள் தங்களை தற்காத்துகொள்ள முடிகிறது.

அத்துடன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிடம் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றனர். மக்கள் அவர்களிடம் கேட்கவிரும்பும் கேள்விகளை மக்கள் சார்பாக அவர்களிடம் முன்வைக்கின்றனர். இவ்வாறு, இந்த பெருந்தொற்று காலத்தில், மக்களின் உயிர்காக்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்தவும், பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தினந்தோறும் வேலை செய்கின்றனர்.

அந்த வகையில், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இணையாக பத்திரிகையாளர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆகவே, அவர்களையும் முன்களப்பணியாளர்களாகவே கருத வேண்டும்.
அந்தவகையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்கும் பணியின்போது, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் குடும்பத்திற்கு, முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வலியுறுத்துகிறது.

கொரோனா மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், பல ஊடக நிறுவனங்கள் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களைக் கூட வழங்குவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய அதேவேளையில் கண்டிக்கத்தக்க விஷயமாகும். இந்த பெருந்தொற்று காலத்தில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து UNICEF மற்றும் பல சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஆகவே, அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள், இனியாவது அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி பத்திரிகையாளர்களை இந்த பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

வேல்முருகனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.