கொரோனா பூட்டை உடை – இளந்தமிழ்

0
178

எங்களுக்கொரு நகரம் இருந்தது
வியர்வை சிந்தி… ரத்த காயங்களுடன்
நாங்கள் தான் அந்த நகரத்தைக் கட்டினோம்.
ஊதிப்பெருக்கி அழகுபடுத்தினோம்
ஆளரவமற்ற இன்று எங்கள் நகரம்
ஊமையாய் கிடக்கிறது.
காற்று மட்டுமே வீதிகளில்
மூட்டை முடிச்சிகளோடு மக்களும்…

நகரத்தைக் கட்டியவர்கள்
மாளிகையை எழுப்பியவர்கள்
உழைப்பால் உலகைப் படைத்தவர்கள்
வீதிகளில் கூனிக்குறுகி நடக்கின்றனர்
தினக்கூலிக்காரர்கள் அரிசிக்கு கையேந்தி…
ஆயிரம் ரூபாயில் வாழப்பழகுகின்றனர் மக்கள்…

இவர்களுக்கு அச்சம்…
எதற்குத்தான் அச்சப்பட மாட்டார்கள்.
இந்த முறை கொரோனாவிற்கு அச்சம்.
தோழர்களே!
கொரோனா மட்டும் தான் உங்களை கொல்கிறதா?
கொரோனா மட்டும் தான் உங்களை உறிஞ்சுகிறதா?
கொரோனா மட்டும் தான் வறுமையில் தள்ளியதா?

அட்டைப்பூச்சியைப் போல்
ஒட்டிக்கொண்டு
நம் வளங்களைக் கொள்ளையடித்தார்களே
அவர்கள் கொரோனா இல்லையா?

நாம் கட்டிய நகரங்களில் இருந்து
வீதியில் விரட்டியடித்தார்களே
அவர்கள் கொரோனா இல்லையா?

அகதிகளைப் போல்
இந்த ஊரடங்கு காலத்தில் அலைகிறோம்…
ஒரு பருக்கை சோறு கிடைக்காதா யென
பசிக்காக கையேந்துகிறோம்.
இந்த கொரோனாவை விரட்ட
யாராவது மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களே
யென ஏங்குகிறோம்?
ஏன் யாரோ ஒருவன் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

நான் சொல்கிறேன்…
இந்த முதலாளிகள் தான் கொரோனாக்கள்
இந்த தேசத்தைப் பாருங்கள்…
நம் உழைப்பை உறிஞ்சிய கொரோனாக்கள்
முதலாளிகள்…
விலகி இரு – தனித்திரு யென சொன்ன
கொரோனாக்கள் இந்த முதலாளிகள்.
நமக்கு ஊரடங்கை அறிவித்து
கூட்டமாக நம் உரிமையை பேச
தடை போட்ட கொரோனாக்கள்.
இவர்களை அழிக்க யாரும் மருந்து தர மாட்டார்கள்
உங்கள் கைகளில் உள்ளது மருந்து
இணைந்திருங்கள்…