இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளநிலையில், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைசரஸ் பரவலை, பெருந்தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்தோ, அதை கட்டுப்படுத்தும் மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வதே ஒரே வழியாக கருதப்படுகிறது. அவ்வாறு, கொரோனாவாயிலிருந்த தங்களை பாதுகாத்துக்கொள்ள, முடிந்தவரை மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான சூழ்நிலையில், கொரோனா குறித்த விழப்புணர்வையும், நோய் பரவல் குறித்த தகவலையும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்காக பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக, தங்கள் நலனை மறந்து மக்களுக்காக பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் வரிசையில், பத்திரிகையாளர்களும் மிக முக்கியமானவர்கள். அந்தவகையில், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், பத்திரிகையாளர்கள் அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதாக உணரவில்லை.
கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் தினந்தோறும் சராசரியாக இரண்டுமுறை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்புகள் அனைத்தும் மக்கள் கூடும் பொதுஇடங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகத்தில் மிகச்சிறிய அறைகளிலுமே நடந்துள்ளன. இவை அனைத்தும், வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள இடங்களாகும். ஒவ்வொருவரும் அவரவரை பாதுகாத்துக்கொள்வது, அவர்களின் கடமை என்றாலும், ஒரு குறுகிய இடத்தில் திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும்போது, பத்திரிகையாளர்கள் வேறு வழியின்றி பாதுகாப்பு விதிமுறைகளை மீற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அதேபோல், தற்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய பத்திரிகையாளர் அறையில், நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுபோன்ற ஒரு ஆபத்தான சூழலில் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆகவே, கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்வரை, அரசு சார்பாக நடத்தப்படும் அனைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்புகளும், பாதுகாப்பான, பெரிய அரங்கில் நடத்தப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சார்பாக அரசை வலியுறுத்துகிறோம். அதேவேளை, கொரோனா பதிப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிகையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதேபோல், சட்டப்பேரவையில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
– மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்