CMPC
STATEMENTS / அறிக்கைகள்

கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக, நிறுவனங்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வணக்கம்,

இந்தியாவில், கொரோனா வைரஸ் ஏறக்குறைய சமூக பரவலாக மாறியுள்ளது. மற்ற கிருமிகளை விட மிக வேகமாகவும், பல்வேறு வழிகளிலும் கொரோனா பரவுவதால் முடிந்தவரை அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையிலும், கொரோனா குறித்த விழிப்புணர்வையும், அது தொடர்பான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்வதற்காக, பத்திரிகையாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட முக்கியமான பணியை செய்யும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பத்திரிகை நிறுவனங்களின் கடமையாகும். ஆகவே, தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு கீழ் காணும் அவசியமான மற்றும் அவசரமான தேவைகளை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் நிறைவேற்றும்படி கேட்டுகொள்கிறோம்.

1) அனைவருக்கும் சானிடைசர், முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவிற்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

2) பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில், பொதுமக்களோடு சேர்ந்து நின்று நேரலை செய்ய நிர்பந்திக்க கூடாது.

3) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இடங்களிலிருந்தும் மற்ற மருத்துவமனைகளிலிருந்தும் நேரலை எடுக்க கூடாது.

4) தேவையின்றி மருத்துவமனைக்கு செல்வதற்கு செய்தியாளர்களை நிர்பந்திக்க கூடாது

5) சமூக விலகல் என்பது பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், முடிந்தவரை பைட் எடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

6) குறைந்த பட்சம், கொரோனா அச்சுறுத்தல் முடியும் வரையிலாவது, பிற ஊடகங்களை முந்திக்கொண்டு செய்திகளை வழங்க வேண்டும் என்று செய்தியாளர்களை வற்புறுத்தக் கூடாது.

7) உடல் நலம் குன்றியவர்களுக்கு எந்தவித முன் நிபந்தனையுமின்றி உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும்.

8) கொரோனா அறிகுறி 10 நாட்களுக்கு பிறகே தெரியும் என்பதால், உடல்நலக்குறைவால் விடுப்பு எடுப்பவர்களுக்கு குறைந்தது 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

9) பல செய்தி நிறுவனங்கள் குறித்த நாளில் சம்பளம் வழங்குவதில்லை. சில நிறுவனங்கள் மாதத்தின் மையப்பகுதியில் சம்பளம் வழங்குகின்றன. அதுபோன்ற நிறுவனங்கள், மாதத்தின் முதல் வாரத்திற்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

10) மருத்துவ செலவிற்காக பண உதவி தேவைப்படும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பள முன் பணம் வழங்க வேண்டும்.

11) பல செய்தி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவில்லை. அதுபோன்ற நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பிலாவது மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்து ஊழியர்களுக்கு உடனடியாக மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12) செய்தி ஊடகங்களில் பணியாற்றும் பலர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஆகவே, தற்போதைய 144 தடை உத்தரவை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உணவு வழங்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

13) பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

14) கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்பட்சத்தில் அவர்களுக்கு அதற்கான உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்.

இப்படிக்கு

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

(குறிப்பு : மேற்கண்ட கோரிக்கை மனு, அனைத்து ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேவை ஏற்படும்பட்சத்தில் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்)

Related posts

சக பத்திரிகையாளருக்காக குரல் கொடுத்த தோழமைகளுக்கு சல்யூட்! தவறுக்கு வருந்துகிறோம் ஜிக்னேஷ்!

CMPC EDITOR

நடிகர் சங்க தேர்தல்: வாழ்த்தும்! நன்றியும்!

admin

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாப்போம் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்

CMPC EDITOR