கை கோர்ப்போம் பத்திரிக்கையாளர்களே!

0
539

செப்டம்பர் 12 2014

கை கோர்ப்போம் பத்திரிக்கையாளர்களே!

பத்திரிக்கையாளர்களை கண்கானிக்க சென்னை காவல்துறை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது!

சென்னையில் உள்ள பத்திரிக்கை நிருபர்களை கண்கானிக்கவும், அவர்கள் வெளியிடும் செய்திகளை கட்டுப்படுத்தவும் காவல் ஆணையர் ஜார்ஜ் திட்டம் அமைத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அவர் காவல்துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பத்திரிக்கை நிருபர்களை கண்கானிக்க துணை ஆணையர்கள், மற்றும் உதவி ஆணையர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நிருபர்கள் காவல்துறைக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

 

ஆணையர் ஜார்ஜ் இப்படி செய்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால், சில தினங்களுக்கு முன் முதல்வர் தலைமையில் காவல்துறை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது சென்னையில் சட்டம் ஒழுங்கு மிக மோசமடைந்துள்ளதாகவும், சென்னையில் ஒரு வருடத்தில் மட்டும் 83 கொலைகள் நடந்துள்ளதாகவும் முதல்வர் அறிந்து ஆணையரைக் கண்டித்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே ஜார்ஜ் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 

கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றால் அவற்றை தடுப்பதுதான் காவல்துறையின் கடமை. அதை விட்டு அது தொடர்பான செய்தியை வெளியிடும் நிருபர்களை அடக்குவது முறையாகாது. அது ஜனநாயகத்தையும் சீரழிக்கும்.

 

இந்த அதிகாரப் போக்கை வளர விடாமல் செய்வது பத்திரிக்கையாளர்களாகிய நமக்கு அவசியமாகிறது. நாம் அனைவரும் ஒன்றுகூடி காவல்துறையின் இந்த செயலை எதிர்ப்போம் என மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.