கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன? – விளக்க அறிக்கை

0
1052

டிசம்பர் 6 2013

விளக்க அறிக்கை

கேப்டன் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் உட்பட ஒளிப்பதிவாளர் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் நடத்திய போராட்டம் மற்றும் அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கைது என, அன்று முழுவதும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு வகையில் பேசப்பட்டு வருகின்றன. திரித்து கூறுதலும் நடைபெறுகின்றது. ஆகவே, அன்று நடைபெற்ற சம்பவங்களில் முக்கியமானவற்றை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 • தாக்குதலில் ஈடுபட்டவர்கள், ஆண் செய்தியாளர்களை தாக்கியதுடன், பெண் செய்தியாளரை மிகவும் கேவலமாக திட்டியுள்ளனர். அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
 • நாங்கள் கேப்டன் டி.வியை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறியவுடன், “அப்படியென்றால் உங்களை அடிக்க வேண்டியதுதான் ” என்று கூறியபடியே கடுமையாக தாக்கியுள்ளனர்.
  • தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 • தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பெண் செய்தியாளர் தன்னுடன் பணிபுரியும் சக செய்தியாளர்களை அழைத்துக்கொண்டு மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க செல்கின்றார்.
 • புகார் கொடுத்தவுடன் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக தாக்குதலை நடத்திய நபர்களுக்கு வழங்கிய மரியாதையை கூட செய்தியாளர்களுக்கு அவர்கள் வழங்கவில்லை.
 • ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் தரப்பில் மட்டுமே தவறு இருப்பதாக கூறிய போலீசார், இருவரும் சமாதானமாக சென்றுவிடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்.
 • இதன்பிறகே தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்கள் சக செய்தியாளர்களின் உதவியை நாடியுள்ளனர்.
 • மாலை 5 மணி தொடங்கி, செய்தியாளர்கள் ஒவ்வொருவராக காவல்நிலையத்திற்கு வரத்தொடங்கியுள்ளனர். அதன் பிறகே, துணை ஆணையர் மற்றும் இணைஆணையர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
 • காவல் நிலையத்தின் முன்பு கூடிய செய்தியாளர்கள், புகாரை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரவு 9 மணியளவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
 • ஆனால், உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்படாதது செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 • ஏன் உரிய சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யவில்லை? என்று கேட்டபோது, நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடுமையான சட்டப்பிரிவை பயன்படுத்த முடியாது என்று காவல்துறையினர் கூறினர்.
 • நான் புகார் கொடுத்தபோது நீங்கள் என்னுடைய புகாரை முழுமையாக எடுக்கவில்லை என்றும், நான் கூறிய அனைத்தையும் நீங்கள் எழுதவில்லை என்றும் அந்த பெண் செய்தியாளர் போலீசாரிடம் கூறினார்.
 • அதற்கு போலீஸ் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. உடனே அந்த பெண் பத்திரிகையாளர் நான் வேண்டுமானால் மற்றொரு புகாரை என் கைப்பட எழுதி தருகிறேன், பிறகு நீங்கள் உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று கூறினார். ஆனால் அதற்கும் காவல்துறை சம்மதிக்கவில்லை.
 • பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் மட்டுமின்றி, அங்கு கூடியிருந்த அனைத்து செய்தியாளர்களுமே போலீசார் பயன்படுத்திய சட்டப்பிரிவுகள் மிகவும் மென்மையானது என்றே கருதினர். இது குற்றவாளிகளை தப்பவைக்கவே உதவும் என்று அவர்கள் கருதினர்.
 • இறுதியாக, 506 (2) பிரிவையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை செய்தியாளர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது. ஆனால், போலீசார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 • இங்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வென்றால். புகார் கொடுத்தவுடன் காவல்துறை வழக்கு பதிவுசெய்யவில்லை.(புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகின்றன). குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையும் உபசரிப்பும் கூட புகார் கொடுக்க வந்த செய்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒரு சாதாரண முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய நூறு செய்தியாளர்கள் கூடி, பல மணிநேரம் முழக்கமிட வேண்டியிருந்த சூழ்நிலையில், அவ்வாறு போராடி பதிவு செய்யவைக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலேயே அமைந்திருந்தது.
 • உரிய சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு அதற்கு போலீசாருக்கு உரிய அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால், செய்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை போலீசார் மறுத்துவிட்டனர்.
 • அதன் பிறகே, அடுத்த கட்ட போராட்டம் தீர்மானிக்கப்பட்டது. அதாவது, அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் அனைவரும் சாலைமறியல் செய்வதே சரியானதாக இருக்கும் என்று கருதியதன் பேரிலேயே சாலை மறியல் செய்யப்பட்டது.
 • மறியலில் ஈடுபட்ட பெண் செய்தியாளர்களை அப்புறப்படுத்த பெண் காவல்கள் யாரும் வரவழைக்கப்படவில்லை. (மாலை முதலே, அந்த பெண் செய்தியாளர்கள் அங்கிருந்தனர்)
 • கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண் செய்தியாளர்களும், ஆண் செய்தியாளர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திலேயே தங்கவைக்கப்பட்டனர். (இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது)
 • வழக்கம்போல், கைது நடவடிக்கையின்போது, காவல்துறையின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய நினைத்ததை (ஆனால் நேரடியாக செய்ய முடியாததை) சாதாரண காவலர்கள் செய்தனர். அதாவது செய்தியாளர்களை காவலர்கள் கடும் சொற்களால் திட்டியதுடன், மறைமுகமாக தாக்கவும் செய்தனர்.
 • இவ்வளவும் நடந்த பிறகும், செய்தியாளர்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால், புகார் கொடுத்த செய்தியாளர்களுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்யவிருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.