கூவத்தூர் பகுதியில் பத்திரிகையாளர்கள் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
695

தமிழகத்தில் தற்போது அரங்கேறிவரும் அரசியல் நாடகத்தை பதிவு செய்ய, இரவு பகல் பாராமல், மிகக் கடினமாக ஒரு சூழலில் பத்திரிகையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்றுவரும் மாற்றங்களை மக்களிடம் சென்று சேர்க்க, பசி, தூக்கம் மறந்து, பத்திரிகையாளர்கள் படும் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அரசியல் அரங்கில் நடைபெறும் நாடகத்தை, மக்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே, அவர்களால் சரியானதொரு முடிவை எடுக்க முடியும் என்ற வகையில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் செய்தி வழங்கி வரும் செய்தியாளர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில், சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கூவத்தூரில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு தனியார் விடுதியில் தங்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அந்த குற்றச்சாட்டை சில சட்டமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். அதேவேளையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்றைய தினம் (12.02.17) விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்றுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த பல குழப்பங்கள் நிலவிவரும் சூழ்நிலையில், சசிகலா அவர்களை சந்திக்க சென்ற நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆகவே, அது குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த விடுதியை சுற்றி பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள சில குண்டர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும், சில பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களையும் அவர்கள் பறித்துள்ளனர். இவை அனைத்தும், அங்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவல்துறையின் கண்முன்னாலேயே நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்டு கோஷங்களை எழுப்பிய பின்னரே, காவல்துறையினர் இதில் தலையிட்டுள்ளனர். அப்போதும், பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை கைது செய்யாமல், பத்திரிகையாளர்களிடம் சமரசம் பேசியுள்ளனர்.
ஆகவே, ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிக முக்கிய பணியை மேற்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய காவல்துறையையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறை தலைவரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.
அதேபோல், கடுமையான சூழலில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது உடடினயாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.