கார்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
498

அதிகார வர்க்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது பத்திரிகையாளர்களின் கடமையாகும். இந்திய அரசியல் சாசனத்தில் இதற்கான உரிமை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களையும் அச்சுறுத்துவது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை மீறுவதற்கு சமமாகும். இத்தகைய குற்றச்செயலில் தமிழக அரசும், அது வழிநடத்தும் தமிழக காவல்துறையும் ஈடுபட்டுள்ளது ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உளுக்கிய ஒரு நிகழ்வாகும். தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்களை கந்துவட்டி கொடுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த அதீதி முடிவை எடுத்துள்ளனர். இந்த நிகழ்விற்குப் பிறகு கந்துவட்டியின் கொடுமை குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர் கார்டுனிஸ்ட் பாலா இந்த கொடுமையைக் கண்டித்து கார்ட்டூன் ஒன்றை வரைந்தார். இதனால், நெல்லை மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த 7.11.2017 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பாலா வரைந்த கார்ட்டூனும் காட்சி படுத்தப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் பாலாவிற்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் பேராட்டம் நடத்தினர். இதனால், பாலா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த கார்ட்டூனை வரைந்ததற்காகவும், பாலாவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காகவும், பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூன் வரைந்ததற்கு வழக்கு பதிவு செய்தது கருத்துசுதந்திர ஒடுக்குமுறை என்பதை உணர்த்தும் வகையில், போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, காவல்துறையின் அராஜக மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. அத்துடன், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக முதல்வருக்கு இந்த தகவல் தரப்பட்டதா? அதன் பிறகுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? அவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் தமிழக முதல்வர் எவ்வாறு இதற்கு அனுமதியளித்தார் என்பதை யோசிக்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் எழுகின்றது.

ஆகவே, காவல்துறையின் இந்த அராஜகபோக்கையும், அரசியல் சாசன உரிமையை பாதுகாக்க தவறிய தமிழக அரசையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

கார்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

கருத்து சுதந்திர ஓடுக்கமுறையின் ஒரு வடிவமான, பத்திரிகையாளர்களுக்கு எதிராக போடப்படும் பொய் வழக்குகளை உடைத்து, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவிலயாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.

இந்த நேரத்தில், பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகளை அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைந்து வலியுறுத்த வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவிலயாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.