CMPC
STATEMENTS / அறிக்கைகள்

கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மன்றம் கண்டிக்கிறது

அரசியல் கருத்துகளை தனது கோட்டோவியம் மூலமாக காரசாரமாக முன்வைத்து வரும் பத்திரிக்கையாளரான கார்டூனிஸ்ட் பாலாவை அவரது சென்னை இல்லத்தில் வைத்து, மோசமான முறையில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

போரூர் அருகே உள்ள பெரிய பணிச்சேரியில் உள்ள பாலாவின் இல்லத்தில் நவம்பர் 5-ம் தேதி நண்பகல் 1.30 மணியளவில் நுழைந்த 4 ஆண்களும், ஒரு பெண்ணும் தாங்கள் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என்று கூறியுள்ளனர். கைது வாரண்ட் கேட்ட பாலாவின் மனைவிக்கு பதிலளிக்காத அவர்கள், பாலா மற்றும் அவரது மனைவியின் செல்போன்களையும் பிடுங்கிக் கொண்டுள்ளனர். பாலாவின் கம்ப்யூட்டரையும் எடுத்துக் கொண்ட அவர்கள், இரண்டாம் மாடியில் இருந்து தரதரவென பாலாவை இழுத்து வந்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி மற்றும் அவர்களின் இரு பிஞ்சுக் குழந்தைகள் கந்துவட்டிக் கொடுமையால் தீயில் கருகிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இசக்கிமுத்து பலமுறை புகார் அளிட்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இசக்கிமுத்துவின் குடும்பம் தீயில் கருகியதை தமிழக மக்கள் வேதனையில் ஆழ்த்தியது.

அக்டோபர் 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வை அடுத்து, அக்டோபர் 24-ம் தேதி பாலாவின் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தார். அதில், தீயில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தையை வேடிக்கை பார்த்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் நெல்லை காவல் ஆணையர் ஆகிய மூன்று பேரும் நின்று கொண்டிருப்பது போலவும், ஆடை அணியாத அவர்களின் அந்தரங்கத்தை நோட்டுக் கட்டுகள் மறைத்திருப்பது போலவும் அந்த கார்ட்டூனில் இருந்தது. ”ஆமாம், ஆத்திரத்தின் உச்சத்தில் தான் இதை வரைந்தேன்” என பாலா குறிப்பிட்டிருந்த அந்த கார்ட்டூனை சுமார் 38 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர்.

அந்த கார்ட்டூன் மீது நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, ஒருவரை இழிவுபடுத்தும் விதமாக ஆபாசமாக சித்தரிப்பது, மாண்பை குலைப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஐ.பி.சி பிரிவு 501-ன் படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67-ன் படியும் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர், ஆட்சியர், காவல் ஆணையர் கந்துவட்டி குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது போலவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பது போலவும் கார்ட்டூன் இருப்பதால் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பான் இலானும் கெடும்”

-என்பது வள்ளுவர் வாக்கு.

ஆட்சியாளர்களின் செயல்களை உரிய முறையில் விமர்சிக்காவிட்டால், எதிரி இல்லாமலே அந்த ஆட்சி கெடும் என்னும் இந்த குறளுக்கு ஏற்ப, அரசுகள் உரிய முறையில் செயல்படவும், சனநாயகத்தை காக்கவும், சனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகம் முக்கியப் பங்காற்றிவருகிறது.

ஊடகத்தின் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமான முறையில் உள்வாங்கிக் கொண்ட சனநாயக விழுமியங்கள் கொண்ட ஆட்சியாளர்கள் இருந்த நம் நாட்டில், கார்ட்டூன் போட்டால் கைது செய்வதும், ஃபேஸ்புக்-ல் விமர்சனம் செய்தால் சிறையில் அடைப்பதும் தற்போது மெல்ல அதிகரித்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசிவிட்ட பிரதமர் மோடி, பதவியேற்ற இதுநாள் வரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்பதே இன்றைய ஆட்சியாளர்கள் ஊடகங்களை அச்சத்துடன் அணுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்கும் இந்த பாசிச அணுகுமுறை, ஆட்சியில் நடக்கும் தவறுகளை அலசி ஆராய்ந்து சரி செய்யும் நடைமுறையை முற்றிலுமாக இல்லாமல் செய்கிறது. இது சனநாயகத்தின் குரல்வளை மோசமாக நெறிக்கப்படும் தருணம் என்றும், பாசிசத்தை நோக்கிய ஆட்சியாளர்களின் திசை வழியின் அழுத்தமான தடம் என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மன்றம் கவலையுடன் பதிவு செய்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 19 வயது பட்டதாரி இளைஞர் திருமுருகன் ஃபேஸ்புக்கில் பாஜகவை விமர்சித்ததிற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பாலாவின் கைது சமூக வலைதள விமர்சனங்களை அராஜகமாக கட்டுப்படுத்த நினைக்கும் அரசின் முயற்சியாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது.

விமர்சனங்கள் மீது மாற்றுக் கருத்து இருந்தால், அதற்கு உரிய முறையில் எதிர்வினை ஆற்றாமல், போலீஸ் படையின் மூலம் அடக்கலாம் என அரசு திட்டமிட்டால், அது தோல்வியடைந்த திட்டமாக முடியும் என்பதை எமது மன்றம் தெரிவித்துக் கொள்கிறது. பாலாவின் கைதை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசிடம் பின்வரும் விசயங்களையும் மன்றம் கோருகிறது.

1.   பாலா மீதான குற்றப்பதிவை ரத்து செய்ய வேண்டும்

2.   நிபந்தனையின்றி பாலாவை விடுதலை செய்ய வேண்டும்

3.   இசக்கிமுத்து குடும்பத்தின் மரணத்திற்கு காரணமான அலட்சிய அதிகாரிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் பாலாவின் கைதுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியாலர்கள் மன்றம் கேட்டுக் கொள்கிறது.

வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாசிசத்தின் தோல்வியை தமிழக அரசு விரைந்து கற்றுக் கொண்டு, விமர்சனங்களை உரிய முறையில் எதிர்கொள்ளும் சனநாயக அரசாக செயலாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மன்றம் முன்வைக்கிறது.

Related posts

கார்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

கொரோனா தொற்றிலிருந்து, பத்திரிகையாளர்களை பாதுகாக்க ஊடக நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வேண்டுகோள்

CMPC EDITOR

சாதிய பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் செய்தியாளரை மிரட்டும் திமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR