காதல் என்பது.. – செல்வா

0
853

• காதல் என்பது

மின் ஒயரை கடிப்பதற்கோ
கடிக்க வைக்கப்படுவதற்கோ முன் ராம்குமாரின்
கண்கள் எதிர்பார்த்த
கடைசி துளி
நம்பிக்கையைப் போல்

• காதல் என்பது
வேடனின் அம்பு பட்டு
இரத்த சகதியாய் நிலம் தொடும் கிளியிடம் தொங்கும் குற்றுயிரைப் போல்

• காதல் என்பது
கிரிகெட் விளையாட்டில்
எந்த நொடியில் எது நடக்கும் என்றறியாது
பந்தெறியும் வீரனுக்கு விக்கெட் கிடைப்பதைப் போல்

• காதல் என்பது
அரவமற்ற வெளியில் திக்கற்று
ஆர்ப்பரித்து தகித்துக் கிடக்கையில் முகமடிக்கும் கதிர் கீற்று போல்

• காதல் என்பது
இனி எதுவும் இல்லையென
எதிரி முன் மண்டியிட்டிருக்கும் தருணத்தில்
கை வருடும் சிறு கத்தி போல்

• காதல் என்பது
ஆண்மை அற்றவனாய்
அடக்கப்பட்டிருக்கையில் குத்திட்டு நிற்கும்
ஆண்குறி போல்

• காதல் என்பது
காவல் காரனே குடிசைக்கு வைக்கப்போகும்
தீயின் கடைசி கங்கு போல்

• காதல் என்பது
அன்றாடம் சிங்காரித்து தீபாராதனை தட்டு நீட்டும்
பூசாரியே கல் என்று கடக்கையில் கர்ப்பகிரகம் ஒலிக்கும் அசரிரீ போல்

• காதல் என்பது
இரவு முடிகிறது இனி யாருமில்லை
எப்படி இன்றுணவென்று நினைக்கும்
பாலியல் தொழிலாளி முன்
பைக் நிறுத்துப்படும் ‘க்ரீச்’ சத்தத்தைப் போல்

• இப்படியோ
இல்லை இதிலடங்கா ஒன்றோ
எதுவாயினும்
இது இனி இல்லை என்றான
தருணமொன்றில் வாய்த்தலே காதல் என்பது
கடந்த செல்லவியலாது
அந்தந்த ஆயுளுக்கான அத்தனை உயிரையும்
அவ்விடம் உறைவிக்கும்
அப்போதே அது

– செல்வா