CMPC
POLITICS / அரசியல்

கல்வி எனது பிறப்புரிமை

எனக்கு விவரம் தெரிந்து நான்காம் வகுப்பில் சுமதி டீச்சர் எல்லாரையும் வருங்காலத்துல என்னவாக போறீங்க னு கேட்டபோது வகுப்பறை முழுவதும் கிட்டதட்ட டாக்டர் என்ற ஒரே பதிலை மட்டுமே திருப்பி திருப்பி சொன்னது. பின்னர் அப்பாவுடன் தஞ்சாவுர் சென்ற போது அப்பா ஒரு கல்லூரியை காட்டி நீ இங்க படிச்சாதான்டா டாக்டர் ஆக முடியும் என்று சொன்ன போது அந்த கல்லூரியின் கடைசி செங்கல்  வரை எட்டி பார்த்து விட்டு சென்றேன் . ஜான் பீட்டர் ஃபாதரிடம் முதன் முதல், மேடை ஏறி பரிசு பெற்ற போது  அவர் சொன்ன வார்த்தை எப்டியாச்சும் படிச்சு பெரிய டாக்டர் ஆகி விடு என்பது தான்.  ஏதும் அறியா பருவத்தில் என்னிடம் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் பதில் நான் வருங்கால டாக்டர் என்பதை மட்டும் தான். அதற்கு முக்கிய காரணமாக ஸ்டெத்ஸ்கோப்பை பார்க்கும் போது அதில் என்ன தான்  கேட்கும் என்ற ஒருவித காதலாக கூட இருக்கலாம். டாக்டர் என்ற கனவை எல்லாருக்குள்ளும்  ஏதோ ஒரு நிலைகளில் இந்த சமூகம் அள்ளி தெளித்து விட்டு சென்று கொண்டே தான் இருக்கிறது…..

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் , அரசு பள்ளியில் நாங்கள் 400க்கும்  மேல்  மதிப்பெண் பெற்ற உடன் எங்களை போன்ற ஏழை நடுத்தர வர்க்கத்தின் ஆகப்பெரும் லட்சியமாக இருப்பது இந்த மருத்துவ கனவு மட்டுமே. இதை நோக்கிய ஒரே ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே எங்களுடைய பத்தாம் வகுப்புக்கு பின்னான இரண்டு ஆண்டுகள் கடந்தோடின. விளையாட்டு பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் தியாகம் செய்து அந்த இரண்டு ஆண்டுகள் கடந்தன.  எங்கள் வகுப்பில் எல்லோருடைய புத்தகத்திலும் பெயருக்கு முன்னாள் Dr என்ற வாரத்தையோடு தான் இருக்கும். வெறும் கனவு கனவாகவே இருக்க கூடாது என்பதற்காக  அதற்கான எல்லா உழைப்புடனும் அந்த உழைப்பினால் கிடைத்த தகுதியுடனும் மருத்துவ கல்லூரி வளாகத்தை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

அப்பா கூட அடிக்கடி சொல்வார், கோட்டூர் பண்ணை அடிமையின் வாரிசு இப்போ டாக்டர் என்று. அடிமை வம்சத்துக்கு இந்த அங்கீகாரம் மிகவும் பெரியது. யாருமே பேசாத ஒரு தெரு பையனுடன், எல்லாரையும் நலம் விசாரிக்க வைத்தது இந்த மருத்துவ கல்வி அங்கீகாரம்.

இந்த மாநில பாடத்திட்ட கல்வி  எங்களுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகவும் பெரியது. ஒடுக்கப்பட்டவனாக பிறந்த எங்களை  ஆதிக்க சாதிகளின் அதிகார திமிரை அம்மணம் ஆக்கியதும் இந்த மருத்துவன் என்னும் அங்கீகாரம்  கொடுத்ததும், விடுமுறை நாட்களில் வேலைக்கு போன , ரிசல்ட் வந்தது கூட தெரியாமல் ரோடு போட்டு கொண்டிருந்த முருகனை வெள்ளை கோட் போட வைத்தது இந்த மாநில கல்வி முறை தான். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மிகப் பெரிய கேடான  வர்க்க பாகுப்பாட்டையும் , வர்ண பாகுப்பாட்டையும் நிர்வாணம் ஆக்கியதும், நிறைய முதல் தலைமுறை பட்டத்தாரிகளை மருத்துவர் ஆக்கியதும் , பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பலரை , எங்கள் விடுதியில் இப்போது உள்ளவர்களில் 157 பேரை அவ்வாறு மருத்துவராக்க போவதும் இந்த மாநில பாடத்திட்ட முறையிலான தேர்வு முறை தான்.

அனிதாவும்  எங்களை போலவே படித்தவள். இன்னும் சொல்ல போனால் எங்களை விடவும் மிகவும் பின்தங்கிய வர்க்கத்தில் இருந்து உழைத்தவள். எல்லா தகுதியுடனும் இருந்தவள். தனக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் எதிர்பார்ப்பையும் தாண்டி மேலே இருந்தவள். நிராகரிப்பின் உச்சகட்டத்தை ஒடுக்கப்பட்டவர்களின் மீது செலுத்தி நிறுவன படுகொலைகளை செய்த அரசு, அனிதாவை கல்வி நிறுவனத்திற்கு உள்ளேயே அனுமதிக்காமல் படுகொலை செய்து உள்ளது. இன்னும் பல அனிதாக்களை  நடைப்பிணமாக வாழ வைத்துள்ளது.  அவளுக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மாறுபட்ட ஒரு பாட முறையை கொண்டு தேர்வு நடத்தி, அதுவே உன்னை நிர்ணயம் செய்யும் என்பது இந்த அரசின் கேவலமான அணுகுமுறையையும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான நிலையையும் காட்டுகிறது.

மாற்ற வேண்டியது CBSE தரத்துக்கான சிலபஸ் தான் என்று கூறுபவர்களுக்கு என்னுடைய கல்லூரியின் கணிப்பில் இருந்தே கூறுகிறேன். நீட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் பெரும்பாலும் ஒருவருட பயிற்சி வகுப்பு சென்றவர்களும், 9 வகுப்பில் இருந்து பயிற்சி எடுத்து கொண்டவர்களும் மட்டுமே. அப்படியென்றால்ல் CBSE கல்வியின் தரம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

முதல் நாள் கல்லூரியின் அட்மிஷனின் போது பல எண்ணெய் தடவாத தலைகளையும் ,  சில செருப்பற்ற கால்களையும் காண முடியும். விண்ணப்பங்களை நிரப்ப முடியாத பெற்றோர்களுக்கு எங்கள் சீனியர்கள் விண்ணப்பங்களை நிரப்பி தருவார்கள். ஆனால், இந்த ஆண்டு முதன் முறை எங்கள் கல்லூரியின் அட்மிஷன் நாளில் கல்லூரி வளாகம் முழுவதும் WHITE NUMBER PLATE கார்களால் நிறைந்து கிடந்தது. விடுதியில் AC மாட்ட அனுமதி கேட்ட பெற்றோர்களையும் car வைத்துக்கொள்ள அனுமதி கேட்ட பெற்றோர்களையும்  காணமுடிந்தத. இதிலிருந்த புரிந்துகொள்ள வேண்டாமா, இந்த கல்வி முறையும் இந்த நீட் தேர்வு முறையும் எந்த வர்க்கத்திற்கு சாதாகமானது??

உழைக்கும் வர்க்கத்தை மேலும் சுரண்டும் ஒரு முறையாக தான் இந்த கல்வி சுரண்டலை காண முடியுமே தவிர, எந்த விதத்திலும் இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான முறையாக இருக்கபோவதில்லை.

இந்தியா பல தேசியஇனங்களின் கூட்டமைப்பு. எனவே ஒவ்வொரு தேசிய இனமும் அதற்கான கல்வி முறையை தேர்ந்தெடுப்பது மட்டுமே இது போன்ற மிக மோசமான கல்வி சுரண்டல்களில் இருந்து அந்த தேசிய இனத்தை சேர்ந்த மக்களை காப்பாற்ற முடியும். கல்வி நிலையங்களின் கல்வி கொள்ளைகளில் இருந்தும் காப்பாற்ற வேண்டும், ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை இந்த அரசு இலவசமாக வழங்கினால் மட்டுமே இந்த சமூகத்தை மேம்படுத்த முடியும்.  ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மட்டும் தான் இந்த சமூகத்தை மேம்படுத்துமானால் இங்கே இன்னும் பல அனிதாக்களை டாக்டர் ஆக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த அரசு முடிவு செய்துவிட்டது யாரையெல்லாம் படிக்கவைக்க வேண்டுமென்று. யாருக்கெல்லாம்  எந்த வேலையை கொடுக்க வேண்டுமென்று. யாருக்காக நாம் வேலை செய்ய வேண்டுமென்று. கார்ப்பரேட் சிந்தனை கொண்டவர்களே இங்கே மருத்துவராக வேண்டுமென்று. மருத்துவத்தின் மகத்துவத்தை மீட்டெடுக்க நாம் நிச்சயம் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

“கல்வி எனது பிறப்புரிமை

இலவசமாக கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை”…

Related posts

ஜனநாயகத்தின் அவலத்தை காட்டிக்கொடுத்த ஆர்.கே.நகர்…

CMPC EDITOR

பரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே சாதி ஓழிப்பை சாத்தியப்படுத்தும்

CMPC EDITOR

பேராபத்தில் பொதுத்துறை வங்கிகள்

CMPC EDITOR