CMPC
EVENTS / நிகழ்வுகள்

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக் கூட்டம்

• கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களின் உச்சபச்சமாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது 12.03.2015 அன்று, சக்தி குறைந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்துவதாக இருந்த தாலி குறித்த விவாதத்திற்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அடிப்படை வாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு முன்னர், எழுத்தாளர்கள் பெருமாள் முருகன் மற்றும் புலியூர் முருகேசன் ஆகியோர் மீது அவர்கள் படைப்புகளில், குறிப்பிட்ட சில சமூகத்தினரை தவறாக சித்தரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து வந்த கருத்துசுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை கண்டித்து அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டனக் கூட்டம் நடத்த மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் முடிவெடுத்தது. இதன்படி, 29.03.2015 அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள, ஹோட்டல் ஷான்ராயல் “கருத்துசுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக்கூட்டம்” நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மூத்த பத்திரிகையாளர் திரு.என்.ராம், திமுக பொருளாளர் திரு.மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈவிகேஎஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் திரு.மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் திரு.கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு.ஞானசேகரன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் திரு.தெஹ்லான் பாகவி, பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் திரு.ரஜினிகாந்த், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் திரு.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் பல பத்திரிகையாளர் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் தமிழகத்தில் கருத்துச்சுதந்திர ஒடுக்குமுறை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. (இந்த அறிக்கை இந்த தளத்தின் “Statements” என்ற பகுதியில் உள்ளது.) கண்டன கூட்டத்தில் கீழ் காணும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பத்திரிகையாளர்களுக்கான, சிறப்பு சட்டம் கொண்ட வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 2: பத்திரிகையாளர்கள் மீது தேவையற்ற அவதூறு வழக்குகள் போடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 3: பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும், கொள்கை முடிவு எடுக்க வேண்டும்

தீர்மானம்4:பணி சார்ந்து பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்யும் வகையில் சிறப்புக்குழு உருவாக்க வேண்டும்

தீர்மானம் 5: பத்திரிகையாளர்கள், சமூகத்தில் தங்கள் பொறுப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, ஊடக அறம் சார்ந்து இயங்க வேண்டும்.

Related posts

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மே தின உறுதியேற்பு விழா நடைபெற்றது

CMPC EDITOR

“கவண்” திரைப்படம் குறித்து, இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்கள் சுபாவுடன் உரையாடல்

CMPC EDITOR

சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு சார்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம்

admin