CMPC
POLITICS / அரசியல்

கடன்கார நாடும்… கைவிரிக்கும் கார்ப்பரேட்களும்…

 

8 லட்சம் கோடி ரூபாய், 2 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய், 92 ஆயிரம் கோடி ரூபாய் – இந்த மூன்று தொகையை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வங்கியில் பணத்தை போடுவதற்கும் கட்டணம், அதை ஏ.டி.எம். மூலம் எடுப்பதற்கும் கட்டணம் என உங்கள் சொந்த பணத்திற்கு நீங்களே கட்டணம் செலுத்தும் தண்டனையை அனுபவிக்கும் நவீன ‘டிஜிட்டல்’ யுகத்தில் உங்களின் டெபாசிட் பணம் என்ன ஆகிறது என தெரியாமல் இருக்கலாமா?

ரூ.8 லட்சம் கோடி

8 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை பூஜ்யம் என்பதை கணக்கிடவே நமக்கு சில வினாடிகள் பிடிக்கும். ஆனால் இவ்வளவு தொகை எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி உள்ளிட்ட 38 வங்கிகளில் வராக்கடனாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது இந்த கடனை பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா மாட்டார்களா என்பது அந்தந்த வங்கிகளுக்கே தெரியாது. பொதுவாக 3 மாதங்களுக்கு மேல் வட்டியோ, அசல் தொகையின் தவணையோ கட்டப்படாத கடன்களை இந்த பட்டியலில் சேர்ப்பார்கள். இந்த தொகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விறு விறுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரம் கோடியாக இருந்த வராக்கடன் இரண்டரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்து அபாய அளவைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய நிலவரப்படி வங்கிகள் 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 12 ரூபாய் திரும்பி வருமா என தெரியாது.
இந்த வராக்கடனில் ஆயிரங்களில் வாங்கிய சாமானியர்கள் முதல் பல்லாயிரம் கோடிகளில் வாங்கிய பெரு நிறுவன முதலாளிகள் வரை அனைவருமே அடங்குவார்கள்தான். ஆனால் வெறும் 12 கடன்காரர்கள் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் வைத்திருக்கிறார்கள். ஆயிரங்களில் நகைக் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அறிவிப்பு பலகையில் பெயர் எழுதி, பத்திரிகையில் முகவரியுடன் விளம்பரம் கொடுத்து நகையை ஏலம் விடும் வங்கிகள், இந்த 12 கடன்காரர்களின் பெயரை இன்று வரை சொல்ல மறுக்கின்றன. வங்கிகளுக்கெல்லாம் ராஜாவான ரிசர்வ் வங்கி அப்படி வாய்பூட்டு போட்டு வைத்திருக்கிறது. இந்த பெருங்கடன்காரர்களின் பெயர்களை சொல்லவே தயங்கும், ரிசர்வ் வங்கி அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்பப் பெறுவோம் என சொல்லிக்கொண்டிருப்பதுதான் நகைச்சுவையானது. இதற்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு சிறப்பு சட்டம் வேறு இயற்றியிருக்கிறது.
இந்த 12 பேர் மட்டுமல்ல ஏறக்குறைய பாதி வராக்கடன் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெயர்களில்தான் இருக்கிறது. அதில் நமக்கு தெரிந்த பரிச்சயமான பெயர் விஜய் மல்லையா. அவர் பெயர் எப்படித் தெரிந்தது என இன்னொரு இடத்தில் பேசலாம். இப்போது இந்த வராக்கடன் வரும்… ஆனா வராது என்ற நிலையிலேயே இருப்பதைப் பற்றி பார்ப்போம். இந்த கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை என்ற பெயரில் ஏதாவது ஒரு திட்டம் போடும். ஆனாலும் கடன் வாங்கி கொளுத்த கார்ப்பரேட் நிறுவனங்களை அவை அசைக்கக் கூடச் செய்யாது. மோதிப் பார்த்து ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோய் கடந்த 2015ஆம் ஆண்டு கடனுக்கு பதிலா அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி பின்பு அவற்றை விற்கலாம் என ஒரு திட்டம் போட்டார்கள். ஆனால் அப்படி வாங்கப்பட்ட பங்குகளை விற்க முடியாமல் வங்கிகள் திண்டாட அந்த திட்டமும் தீர்வு தரவில்லை. அந்த வகையில் வந்ததுதான் கடன்காரர்கள் மீது வழக்குப் போடும் முடிவும். அதாவது கடனை வசூலிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….

ரூ.2.49 லட்சம் கோடி

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்.பி.ஐ., கனரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் தொகையின் மதிப்பு. அதாவது பல ஆண்டுகள் முயற்சித்தும் கடனை வசூலிக்க முடியாததால், பிழைத்துப் போகிறான் என கடனை கைகழுவி விடுவது. கடந்த வருடம் இப்படி 57,586 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இந்த ஆண்டு அதை விட 41 விழுக்காடு அதிகமாக 81,683 கோடி ரூபாய் கடனை திருப்பிக் கேட்பதை கைவிட்டுவிட்டார்கள்., சரி, யார் வாங்கிய கடன் இப்படி தள்ளுபடி செய்ப்படுகிறது என கேள்வி கேட்டால் அது இன்றுவரை ரகசியம்தான். விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயியின் கடனா, நஷ்டமடைந்த தொழிலதிபரின் கடனா என்பது பற்றி மூச்சுவிட மறுக்கின்றன வங்கிகள். இப்படி கடனை தள்ளுபடி செய்வதை எந்த அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல வங்கிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அது உயரதிகாரிகள் கொண்ட குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றது எஸ்.பி.ஐ., மேலாண்மைக் குழுவின் முடிவு என்றது கனரா வங்கி, அதை பற்றி வெளியில் சொல்ல முடியாது என்றது ஐ.டி.பி.ஐ. வங்கி.. ஆக மொத்தத்தில் யாருக்காக, ஏன் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது சிதம்பர ரகசியமாகவே இருந்த போதும், கார்ப்பரேட் வங்கிகளின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்ப்படவில்லை என அடித்துச் சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அப்படியென்றால் இந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்ட 81,683 கோடி ரூபாய் கடன் யாருடையது என்பதற்கு அரசிடம் இருந்து பதில் இல்லை.

ரூ.92 ஆயிரம் கோடி

இது, திவாலானவர்களிடம் இருந்து வசூலிக்க முடியாத கடனின் அளவு. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி திவாலானதாக அறிவித்தால் அவர்களிடம் கடனை திரும்பப் பெற முடியாது. அண்மையில்தான் இந்த பட்டியலை வெளியிடவே பெரிய மனதுடன் ஒத்துக்கொண்டது ரிசர்வ் வங்கி. இந்த பட்டியலில்தான் கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா என்ற ஏழை வருகிறார். திவாலானதாக அறிவித்துவிட்டு எஸ்.பி.ஐ. வங்கியில் பெற்ற 1,200 கோடி ரூபாய் கடனை கட்ட முடியாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ‘திவாலான’ முகம் இது. இதுபோலத்தான் திவாலானதாக அறிவித்த பெரும் பணக்காரர்களும் சொகுசாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் இந்த திவாலானர்கள் பட்டியலில் வரும் யாரும் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அடுத்த வேளை உணவிற்காக நடுத்தெருவுக்கு வந்துவிடவில்லை. வீடு, கார் அனைத்தையும் பறிகொடுக்கவில்லை. இதுவரை 8 ஆயிரத்து 915 பேர் இப்படி வங்கியில் கடன் வாங்கிவிட்டு திவாலானதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களில் 1,914 பேர் மீது மட்டுமே வழக்கு போடப்பட்டிருக்கிறது. மற்றவர்களை பாவம் என அப்படியே விட்டுவிட்டார்கள்.
இந்த திவாலானவர்களின் ரூ.92 ஆயிரம் கோடி கடனில் எஸ்.பி.ஐ. வங்கி கொடுத்தது மட்டும் 25,104 கோடி ரூபாய். இப்படி திவாலானவர்கள் மற்றும் கடன் தள்ளுபடியால் பாதிக்கப்படும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசே அவ்வப்போது பணம் கொடுத்து உதவி செய்யும். அந்த பணம் நம் வரிப் பணம் என்பதை எப்படி நாம் மறந்துவிடக் கூடாதோ, அதேபோல இந்த கடன்களால் முதலீடுகள் முடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும் என்பதையும் மறக்கக் கூடாது. ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்பதுபோல் ஏழைகளுக்கு ஒரு கடன், பணக்காரர்களுக்கு ஒரு கடன் என தனித்தனியே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்….

நன்றி: மல்லிகை மகள்

Related posts

உனக்கு ஏன் விடுதலை?

CMPC EDITOR

ஒலிம்பிக்கில் மறக்க முடியாத அந்த நாள்

admin

முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!

CMPC EDITOR