ஓர் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் உனக்காக – தேவேந்திரன்

0
931

‘ஓர் கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
உனக்காக

ஒரு மாட்டுக்காக
ஜனங்கள்
படுகொலைசெய்யப்படுவதை
பார்த்துக்கொண்டிருக்கும்
நம் கண் முன்னால்
ஜனநாயகத்தையும்
படுகொலை
செய்துகொண்டிருக்கிறார்கள்
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
தேர்தலிலேயே நிற்காதவர்கள்
முதல்வராகவும்
பெரும்பான்மையே பெறாதவர்கள்
ஆட்சியமைத்தும்கொண்டிருக்கிறார்கள்
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

முத்துகிருஷ்ணன்கள்
(தற்)கொலை செய்யப்படுகிறார்கள்
அதற்கு சில மொண்னைகாரணங்
-கண்டுபிடிக்கிறார்கள்
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

அரை நிர்வாணத்தில்
விவசாயிகள் போராடியும்
உண்மைகளை நிர்வாணப்படுத்த
முடியாமலிருக்கிறது
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

மொழியால்
ஏமாற்றப்பட்டு
இனத்தால்
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நம் வீட்டு சமையலறையில்
கரிபிடித்த குண்டாவை கழுவ
நாம் சுரண்டுவது போல்
நம்மை சிலர் சுரண்டிக்கொண்டிருக்கின்றனர்
இருந்தும் உனக்காய்
ஒரு கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

புரிகிறதா…

உன் மாயச்சிறையிலிருந்து
எனக்கு விடுப்புகொடு
இல்லை
உன் பார்வை விலக்கி
அதை தகர்க்க விடு

இல்லை அச்சிறையையே
கோட்டையாக்க கொஞ்சம் விட்டுக்கொடு