எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்!

0
532

ஜனவரி 15 2015

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்!

பெருமாள் முருகன் என்ற படைப்பாளியின் படைப்பான, “மாதொரு பாகன்” என்ற நாவலுக்கு எழுந்துள்ள எதிர்பையும், அதை தொடர்ந்து பெருமாள் முருகனுக்கு கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடியும், அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சியாக, பெருமாள் முருகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையும், எழுத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தன்னுடைய நாவல் எழுதப்பட்ட விதத்தையும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் குறித்தும் பெருமாள் முருகன், தெளிவான விளக்கத்தை அளித்த பிறகும் கூட, அந்த படைப்பாளிக்கு எப்படிப்பட்டதொரு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில், தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் தான் திரும்ப பெருகிறேன் என்று அவர் கூறியிருப்பார் என்பதை எளிதில் உணர முடிகின்றது.

முற்போக்கு கருத்துக்களுக்கு எப்போதும் இடம் அளிக்கப்பட்டு வந்த தமிழகத்தில், கடவுள் மறுப்பிற்கும், மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களுக்கும் இடமிருந்த தமிழகத்தில், 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாவலுக்கு நான்கு வருடங்கள் கழித்து எதிர்ப்பு உருவாகியிருப்பது, யதார்த்தமானதுதல்ல என்பது தெளிவாவதுடன், உள்நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே கருதத்தோன்றுகின்றது.

தமிழகத்தில் உருப்பெற்று, நிலைத்து நிற்கும் முற்போக்கு கருத்தியலின் விளைவாகவே, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில், மதரீதியான மோதல்கள் அறவே இல்லாத ஒரு மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. ஆனால், தற்போது பெருமாள் முருகன் அவர்களின் நாவலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு, அந்த முற்போக்கு கருத்தியலுக்கு எதிராக, மக்களிடையே சாதி மற்றும் மத ரீதியான பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் பயனடையும் கீழ்த்தரமான அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஆகவே, தமிழகத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் போக்கை மாற்ற நினைக்கும் சக்திகளை முறியடிக்க, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒன்று திரள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகின்றோம். அதேபோல், எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய முதன்மை கடமையை பெற்றவர்களான, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பெருமாள் முருகனுக்கு ஆரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

இவற்றையெல்லாம் தாண்டி, தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க, எதிர்காலத்தில், சாதி மற்றும் மத ரீதியான பிரிவினைக்குள் நம் சந்ததியினர் ஆட்படாமல் பாதுகாக்க, தற்போது முன்னெழுந்துள்ள பிரிவினை அரசியலுக்கு எதிராக, சாதி, மதம் ஆகிய சூழ்ச்சிகளுக்கு ஆட்படாமல், பொதுமக்களும் பெருமாள் முருகனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

எழுத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில், பெருமாள் முருகனுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டிக்கின்றது!

பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், பிரிவினை அரசியலை முறியடிக்கவும் ஓரணியில் திரளவேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கின்றது!

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள, எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்க கடமைப்பட்ட தமிழக அரசு பெருமாள் முருகனுக்கும் அவருடைய படைப்புகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது!

தனது படைப்புகளை திரும்ப பெறுவதாகவும், படைப்பு தொழிலை நிறுத்தி விடுவதாகவும், பெருமாள் முருகன் தான் எடுத்துள்ள முடிவை திரும்ப பெறவேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது!