CMPC
BOOK REVIEW / புத்தக விமர்சனம்

வழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும் – அருண்மொழி வர்மன்

எழுத்தாளர் பாலமுருகன் , சோளகர் தொட்டிக்குள் என்னை அழைத்துச் சென்று வந்தபின், என் அனுபவங்களில் இருந்து…

வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த காலம். சத்தியமங்கலம் வனப்பகுதியில், யானைக் கூட்டம் வலசை செல்லும் பாதையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு பறவைகள் அலறிப் பறந்தன… யார் சுட்டது, யார் செத்தது என்று யாருக்கும் தெரியாது. தெரிந்தவர்களும் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. காரணனம், காட்டிக் கொண்டால் காணாமல் போய்விடுவோம் என அவர்களுக்கு தெரிந்திருந்தது.

தூரத்தில் இந்த சத்தத்தை கேட்டப்பவர்களும் ” மாதேஷ்வரா எங்கள காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் அந்த காட்டின் நடுவில் இருந்த மாதேஷ்வரன் கோயிலின் பின்பக்கத்தில் அமைந்திருந்தது அந்த வொர்க் ஷாப்.   அதன் பக்கத்து அறைக்குதான் மாதியும் சித்தியும் அழைத்து செல்லப்பட்டனர். 10 பேர் மட்டும் அமரக்கூடிய அந்த அறையில் ஏற்கனவே 50 பேர் சுவற்றைப் பார்த்து  அமர்ந்திருந்தனர். அதில் உடம்பின் தசைகள் அழுகி சீழ் ஒழுகி அழுது கொண்டிருக்கும் ஒருவனும், அவன் அருகில், தாயின் பேன் ஓடும் சடையை பார்த்துக் கொண்டே இருந்த 5 வயது சிறுவனும் இருந்தனர். ஒரு மலக்குழியின் நாற்றத்தைவிடவும் மோசமாக இருந்த அறைக்குள் குமட்டல்களை அடக்கிக் கொண்டு சுவற்றைப் பார்த்து அவர்கள் அனைவரும் உட்கார்ந்தனர்.

அன்று இரவு அறைக்குள் 8 காவலர்கள் நுழைந்தனர். அறையில் இருந்த அனைவரும் அதிர்ந்து உட்கார்ந்தனர் அவளைத் தவிர.

13 வயதே ஆன சித்தியை தூக்கிச் சென்றனர். கத்தி கதறினாள் அவளின் தாய் மாதி. எந்த பயனும் இல்லை. ஆனால் உள்ளே வந்த அந்த உதவி ஆய்வாளர் மாதியையும் தூக்கிச் சென்று இச்சையை தீர்த்துக் கொண்டான்.  மாதவிடாய் நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த அவள் வலியில் கதறினாள். இரவு முழுவதும் மாதி மீது விழுந்து கிடந்த அந்த போலீஸ்காரன் எழுந்து சென்றபோது, அவளின் கால் இடுக்கில் அவன் விந்தோடு சேர்த்து வழிந்தது அவளது உதிரம்.

விடிந்ததும் தல்லாடி நடந்தவந்த மாதி, சித்தி கிடந்த நிலைகண்டு அழுதாள். அப்போதுதான் வந்தான் அந்த காவல் உயர் அதிகாரி. அவன் வந்தவுடன், மாதி, சித்தி இருவரும் வொர்க் ஷாப்பிற்குள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது மெக்கர்ப் பெட்டி கிலிப்புகளை வைத்துக் கொண்டிருந்த போலீஸ்காரன், மாதியை நெருங்கினான். அவள் கால் இடுக்கில் அந்த கிலிப்புகளை மாட்டினான். ஏற்கனவே, மாதவிடாயின் ரத்தப்போக்கால்  களைத்திருந்த அவளின் உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. கிலிப்புகளால் நசுக்கப்பட்ட அவளின் காம்புகளும் மின்சாரத்தால் வெந்தன. ரத்தம் ஆறாய் பெருக்கெடுத்தது. அவள் கீழே விழுந்தால். இறந்துவிட்டாள் என எண்ணிய போலீஸ் ஒருவன் அசைத்து பார்த்து “தெவிடியா இன்னும் சாகல சார்” என்றான். இரத்தப்போக்கோடு அந்த அறையில் வீசப்பட்டவள் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரம், பக்கத்தில் இருந்த சரசு தன் ஆடையை கிழித்து மாதியின் கால்களை துடைத்துவிட்டாள். யாரோ தொடும் உணர்வை மட்டும் அறிந்த அவள், ஆழத்தில் மங்கலான உருவமாய், சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லி, ” பொறுமையாய் இரு தாயி, நம்ம கஷ்ட்டம் நம்மவிட்டு பொயிடும்” என்று சொல்வதை கேட்டாள். தொட்டியின் கோல்காரனோ ” மணிராசன் இருக்கான் நம்பிக்கையை விட்டுடாத தாயி” என்று சொன்னான். கனவுகளுக்கு இடையே, உடைகள் இன்றி அந்த ஜன்னல் கம்பியில் கட்டபட்டிருந்த சித்தியின் குரல் கேட்டு எழுந்தாள். அப்போது, அந்த குளிரில் வெறி பிடித்த காவலர்களில் நல்லவனான கணேஷ் போலீஸ் சித்தியின் சங்கிலியை அவிழ்த்து கொண்டிருந்தான். எத்தனித்தும் எழமுடியாமல் விழுந்த மாதி, கொட்டிகிடந்த உதிரத்தின் பச பசப்பை உணர்ந்தாள். அப்படியே வெகு நேரம் அசைவற்று கிடந்தாள். பின்பு கொஞ்சம் தேத்திக்கொண்டு எழுந்து தன் புடவையை உடுத்திக்கொண்டு அதன் முந்தானையை கிழித்து துடைத்துக் கொண்டாள். அடுத்த 3 நாட்களில் அவள் முந்தானை பாதியானது.

அன்று மாதி, சித்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமைதிகாத்தோம். இன்று நாட்டில் உள்ள அனைத்து உழைக்கும் பெண்களின் முந்தானையையும் கிழித்துக் கொண்டே வருகின்றது.

அன்று வீரப்பன் வேட்டை என்று வெறி நாய் போல் பெண்கள் மேல் பாய்ந்தவர்களை போலவே, வளர்ச்சி என்ற பெயரில் மக்களை வன்புணர்ந்து, புதிது புதிதாக இந்தியாவை பெற்று விற்றுக் கொண்டிருக்கின்றனர் நம்மை ஆள்பவர்கள்.

Related posts

புரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி வர்மன்

admin

“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம் – ப்ரியா

CMPC EDITOR

கார்க்கியும் காதலும் – அருண்மொழி வர்மன்

admin