என்.டி.டி.வி குழுமத்தின் பங்குகளை அராஜகமாக கைப்பற்றிய அதானி நிறுவனம். ஜனநாயகத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானி குழுமம், இந்தியாவின் முன்னோடி செய்தி நிறுவனமான என்.டி.டி.வி குழுமத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. 2009-10 ஆண்டு, என்.டி.டி.வி குழுமத்தின் நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் பிரனாய் ராய் மற்றொரு நிறுவனத்துடன் செய்துகொண்ட கடன் ஒப்பந்தத்தை பயன்படுத்தி அதானி குழுமம் என்.டி.டி.வியின் 29 சதவீத பங்குகளை குறுக்குவழியில் கைப்பற்றியுள்ளது.
இந்திய ஒன்றியத்தில் காட்சி ஊடகங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பது என்.டி.டி.வி தொலைக்காட்சி. இன்றளவிலும் ஒட்டுமொத்த இதழியலுக்கும் காட்சி ஊடகத்திற்கும் என்.டி.டி.வி யின் பங்கு அளப்பரியது.
அத்துடன், ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு சில ஊடகங்களில் என்.டி.டி.வி முக்கியமானது என்ற அடிப்படையில், அதானி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊடகத்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றே கருத வேண்டும்.
தற்போது உள்ள இந்திய அரசியல் சூழ்நிலையில் என்.டி.டி.வியின் கணிசமான பங்குகள் ஒன்றிய அரசுக்கு நெருக்கமான அதானி நிறுவனத்தால் குறுக்கு வழியில் கைப்பற்றப்பட்டது ஊடகத்துறைக்கும், ஜனநாயக அரசியல் செயல்பாடுகளுக்கும் விடுக்கப்பட்ட சவால்.
இதுதொடர்பாக, என்.டி.டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல், அதானி நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இவ்வறிக்கை வெளியாகும் இந்த நாளில் (23.08.22) தான், பங்குகள் வாங்கப்பட்ட தகவலே தங்களுக்குத் தெரியவந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செய்திகளில் தாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை இனியும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் எங்கள் இதழியலில் நாங்கள் பெருமை கொள்கிறோம் இனிவரும் காலங்களிலும் அவ்வழியிலேயே தொடர்வோம் என்றும் என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.
ஆகவே, ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.
இந்த நெருக்கடியான நேரத்திலும் ஊடக அறத்திலிருந்து வழுவாமல் செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ள என்.டி.டி.வி நிறுவனத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறது.
மையநீரோட்ட ஊடகங்கள் சந்தித்து வரும் இதுபோன்ற நெருக்கடிகள், மக்கள் பங்களிப்புடன் செயல்படும் சுதந்திர ஊடகங்கள் மற்றும் கூட்டுறவு ஊடகங்கள் உருவாவதற்கான தேவையை அழுத்தமாக உணர்த்தியுள்ளது என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சுட்டிக்காட்ட கடைமைப்பட்டுள்ளது.