என்றும் சுடரும் எதிர்ப்பின் கனல் – செலீனா

0
1324

தாத்தா இல்லாத வீடு
வெறிச்சோடிக் கிடக்கிறது

தகப்பன் இல்லாத
மகன்களுக்கும் மகள்களுக்கும்
யார் கையை பிடித்துக்கொள்வதென்று தெரியவில்லை

தலைவன் இல்லாத மக்கள்
மனம் சிதறி தெருக்களில் அலைகிறார்கள்

போராடுகிறவன் இல்லாத
போர்க்களங்களில் நரிகள் ஊளையிடுகின்றன

எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்த
மனிதனின் சமாதியில்
ஆயிரம் மலர்கள் சொரிகிறோம்
துயரத்தின் மலர்கள்
அன்பின் மலர்கள்
நன்றியின் மலர்கள்
நீதியின் மலர்கள்
வியர்வையின் மலர்கள்
வரலாற்றின் மலர்கள்
அனைத்திற்கும் மேலாய்
நீ மலர்ந்து நிற்கிறாய்
காலத்தின் அழிவற்ற மலராய்

உனது இறுதி வாகனம்
கடந்த சென்ற சாலையில்
ஆயிரம் ஆயிரம் மக்களின் நடுவே
உன் சின்னஞ்சிறு மகளாய்
கண்கள் பனிக்க நின்றிருந்தேன்
உன் ஆயிரம் ஆயிரம் நிழல்களாய்’
நாங்கள் வழிநெடுக நின்றுகொண்டிருந்தோம்..

உன் நிழல் எங்கள் நிலங்களில் விழுந்தது
எங்கள் எளிய வீடுகளில் விழுந்தது
எங்கள் ஏடுகளில் விழுந்தது
எங்கள் விடுதலையின் கனவுகளில் விழுந்தது

உன்னைக் காண
நான் நீண்ட தூரத்திலிருந்து வருகிறேன்
மலைபாதைகளில்
நீ தந்த வழித்தடங்களில்
நடந்தே வந்தேன்
வெளிச்சம் படாத வனப்பாதைகளில்
நீ பொருத்திய அறிவின் விளக்குகளில்
தடம் பார்த்து வந்தேன்
வருவதற்குள் சற்றே நேரமாகிவிட்டது
நான் ஒரே ஒரு முறை
பற்றிக்கொள்ள விரும்பிய அந்த கைகளால்
கையசைத்து விடை பெற்றுக்கொண்டாய்

இறுதிவரை போராடுவது என்றால் என்னவென்று
சொல்லித் தந்த நீ இன்று
இறுதிக்குப்பின்னும் போராட கற்றுத் தந்திருக்கிறாய்!

மண்ணில் தலைசாய்க்க உரிமையற்ற
மனித குமாரர்களுக்கு
நீயே நிலமாக இருந்தாய்
வரலாற்றின் இருளில் மறைந்த தலைமுறைகளுக்கு
நீயே வரலாற்றின் வெளிச்சமாய் இருந்தாய்

நீ இப்போது எனக்கு
எதுவாக மிஞ்சியிருக்கிறாய்?
ஒரே ஒரு வாக்கியமாக!
அது…
‘எதிர்த்து நில்’
எதிர்த்து நில்
எதிர்த்து நில்’

– செலீனா